×

சுய உதவிக்குழு உறுப்பினர்கள் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி, செப்.2: கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பசுமை தொழில் நிறுவனங்கள் அமைக்க, வரும் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சுய உதவி குழுக்களின் வாயிலாக, கிராமப்புற பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது பசுமை தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவதற்கு முதல்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 25 பசுமை தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட அளவிலான திட்ட இயக்குநரின் தலைமையில், தேர்வுக்குழு மூலம் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, மாநில அளவில் தேர்வு குழு மூலம் மாவட்ட அளவில் இருந்து பெறப்படும் தொழில் நிறுவனங்களுக்கான விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, தொழில் நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும்.

தேர்வு செய்யப்படும் தொழில், தொழில் முனைவோர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் தொழில் முனைவோர் கண்காணிப்பு இணையத்தில் (TNSRLM/EMS) பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். நிறுவனம் தொடங்கி ஓராண்டுக்கு மேல் தொடர் செயல்பாட்டில் இருத்தல் வேண்டும். மேலும், நிறுவனம் கட்டாயம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனம் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைக்கு உட்படுத்தப்பட்ட வெள்ளை, பச்சை மற்றும் ஆரஞ்சு வகை தொழில் நிறுவனங்களால் ஏதேனும் ஒன்றில் தகுதி பெற்ற நிறுவனமாக இருத்தல் வேண்டும். தனிநபர் தொழில் நிறுவனம், குழு அல்லது தொகுப்பு அளவிலான நிறுவனம், பிற நிறுவனங்களாக இருத்தல் வேண்டும்.

தொழில் நிறுவனங்களுக்கு திட்ட அறிக்கை முக்கியமானதாகும். திட்ட நிதியினை பெறவும், பிற துறை திட்டங்களை பெறவும் ஒவ்வொரு நிறுவனமும் மாவட்ட வள பயிற்றுநர்கள் துணை கொண்டு உருவாக்க வேண்டும். திட்ட காலம் ஓராண்டு ஆகும். திட்டத்திற்கான மதிப்பு ஒரு நிறுவனத்திற்கு ₹4 லட்சம் ஆகும். தொழில் நிறுவனம் இணையதளத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். சுயஉதவி குழு உறுப்பினரால் நடத்தப்படும் பசுமை நிறுவனங்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்) கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம், கிருஷ்ணகிரி என்ற முகவரியில் வரும் 11ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலரை (வாழ்வாதாரம்) நேரில் அணுகி விவரங்களை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post சுய உதவிக்குழு உறுப்பினர்கள் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : SHG ,Krishnagiri ,Dinakaran ,
× RELATED தகாத உறவு காதலியை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த கண்டக்டர் கைது