×

கண்டமங்கலம் அருகே பரபரப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க கோரி சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

கண்டமங்கலம், செப். 2: வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க கோரி பொதுமக்கள் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கண்டமங்கலம் அருகே உள்ள நவமால்மருதூர் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் வாந்தி பேதி ஏற்பட்டு 15க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். ஆனால் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷியாமளா (40), ஜமுனா (50), பிரகதி (7) ஆகிய 3 நபர்களும் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு போதிய சிகிச்சை அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் ஆவேசமடைந்த நவமால்மருதூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மாரிமுத்து தலைமையில் கண்டமங்கலம் ரயில்வே கேட் பகுதியில் புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம் மறியலில் ஈடுபட்டனர். அப்போது பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உரிய சிகிச்சை உடனடியாக அளிக்க வலியுறுத்தினர்.இது பற்றி தகவலறிந்த கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் நடராஜன், எஸ்ஐ வெள்ளத்தங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, தங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்ததன்பேரில் போராட்டக்காரர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் விழுப்புரம்- புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

The post கண்டமங்கலம் அருகே பரபரப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க கோரி சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Kandamangalam ,
× RELATED வில்லியனூர் அருகே முன்விரோத தகராறில் வாலிபர் அடித்து கொலை