×

திட்டக்குடி தாசில்தார் அலுவலகத்தில் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் ரூ.6.75 கோடி முறைகேடு: பெண் ஊழியர் உள்பட 5 பேர் கைது; கார்கள், நகைகள், பணம் பறிமுதல்

கடலூர்: திட்டக்குடி தாசில்தார் அலுவலகத்தில் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் ரூ.6.75 கோடி முறைகேடு செய்த பெண் ஊழியர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். கடலூர் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ரமா, கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராமிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில், ‘திட்டக்குடி வட்டம் எறையூரை சேர்ந்த சக்கரவர்த்தி மனைவி பத்மினி மற்றும் பெண்ணாடத்தை சேர்ந்த மணி மனைவி தேவகி ஆகியோர் தங்களது கணவரின் இறப்பிற்காக, முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் இயற்கை மரணத்திற்கான நிவாரண தொகை வேண்டி திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தனர்.

சுமார் 6 மாதத்திற்கு மேல் ஆகியும் அவர்களுக்கு எவ்வித நிவாரண தொகையும் வழங்கப்படாததால் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். இதுகுறித்து கடலூர் கோட்டாட்சியர் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார் அதன்பேரில், பத்மினி மற்றும் தேவகி ஆகியோரின் ஆதார் எண், வங்கி கணக்கு விவரங்களை பெற்று, ஆய்வு செய்தபோது மேற்படி நபர்களுக்கு 4 மாதங்களுக்கு முன்னரே உதவித்தொகை அனுப்பப்பட்டுள்ளது என்ற விவரம் தெரியவந்தது.

இதுகுறித்து 2020ம் ஆண்டு முதல் அனுப்பப்பட்ட முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிவாரணத்தொகை வழங்கப்பட்ட பட்டியல்களை ஆராய்ந்தும், கடலூர் மாவட்ட கருவூல் அலுவலரிடமிருந்து வரப்பெற்ற ஆவணங்களையும் பரிசீலனை செய்ததில், விண்ணப்பதாரர்களின் வங்கி கணக்கு எண்ணிற்கு நிவாரணத்தொகை அனுப்பப்படவில்லை என்பதும், பயனாளிகள் அல்லாத வேறு நபர்களுக்கு பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பலமுறை நிவாரண தொகை மற்றும் உதவித்தொகை அனுப்பப்பட்டுள்ளது என்றும் விசாரணையில் தெரியவந்தது.

அதன்படி, வங்கிக்கணக்கு பயனாளி அல்லாத வேறு நபர்களான வினோத்குமார், மணிவண்ணன், பாலகிருஷ்ணன், விஜயா, செல்வராஜ், வளர்மதி, முத்துசாமி, விஜயன் ஆகியோர் பெயரில் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்த அகிலா என்பவர் மூலம் பண பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அகிலா, தனது உறவினர்களின் பெயர்களில் மோசடியாக பணப்பரிமாற்றம் செய்து, அரசு பணத்தை அபகரித்து கையாடல் செய்துள்ளார். மொத்தம் ரூ.6.75 கோடி முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. எனவே அகிலா மற்றும் அவருடன் இக்குற்றத்தில் தொடர்புடைய நபர்களின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதை தொடர்ந்து இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய எஸ்பி ராஜாராம் உத்தரவிட்டார். இதையடுத்து குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் தேவராஜ் தலைமையிலான போலீசார் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட, திட்டக்குடியை சேர்ந்த வினோத்குமார் மனைவி அகிலா(30), வினோத்குமார் (29), மேல் ஐவனுரை சேர்ந்த சாத்தப்பன் மகன் பாலகிருஷ்ணன்(30), திட்டக்குடியை சேர்ந்த சுப்ரமணி மகன் மணிவண்ணன்(58), அன்புக்கரசன் மனைவி விஜயா(48) ஆகியோரை நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு கார்கள், ஒரு சரக்கு வாகனம், 5½ பவுன் நகைகள், ரூ.68,500 பணம் மற்றும் 4 சொத்து பத்திரங்களின் நகல்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திட்டக்குடி தாசில்தார் அலுவலகத்தில் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் ரூ.6.75 கோடி முறைகேடு: பெண் ஊழியர் உள்பட 5 பேர் கைது; கார்கள், நகைகள், பணம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chetakudi ,Tahsildar Office ,Cuddalore ,Phetakkudi tahsil ,Dinakaran ,
× RELATED கடலூர் மாவட்டம் மருங்கூர் அகழாய்வில்...