×

முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரே நாடு-ஒரே தேர்தல் நடத்துவதை ஆராய குழு அமைப்பு: ஒன்றிய அரசின் திடீர் உத்தரவால் பரபரப்பு

புதுடெல்லி: முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரே நாடு-ஒரே தேர்தல் நடத்துவதை ஆராய குழு அமைத்து ஒன்றிய அரசு திடீரென உத்தரவிட்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத்தின் 5 நாள் சிறப்பு கூட்ட தொடருக்கு ஒன்றிய அரசு திடீரென அழைப்பு விடுத்துள்ளது. இந்த சிறப்பு அமர்வு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தொடரில் பங்கேற்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தொடர் எதற்காக கூட்டப்படுகிறது? கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

அதேவேளை, நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒரே நாடு-ஒரே தேர்தல் உள்பட பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசு இந்த சிறப்பு கூட்டத்தொடருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்த சாத்தியக்கூறுகளை ஆராய ஒன்றிய அரசு நேற்று சிறப்புக்குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழு ஒரே நேரத்தில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது சாத்தியமா? என்பது குறித்து ஆராய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1951 முதல் 1967ம் ஆண்டு வரை இருந்ததைப் போல, ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு தேர்தல்கள் நடத்துவது தொடர்பான பயிற்சி மற்றும் வழிமுறைகளை முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவினர் ஆராய்வார்கள் என்று ஒன்றிய அரசு தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக அவர் பல்வேறு நிபுணர்களுடன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் அவர் சந்தித்து ஆலோசனை நடத்துவார் என்றும் தெரிகிறது.வரும் செப்டம்பர் 18 முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நடத்த அறிவிப்பு வெளியான அடுத்தநாளான நேற்று ஒரே நாடு-ஒரே தேர்தல் நடத்துவது குறித்து ஆராய ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏனெனில் பிரதமர் மோடி 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் சட்டசபை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறிவருகிறார். ஒவ்வொரு ஆண்டும், ஏதாவது ஒருசில மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் நிதிச்சுமை ஏற்படுவது மட்டுமல்லாமல், தேர்தல் காலத்தில் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார். பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு கடந்த 2017ல் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ராம்நாத் கோவிந்த் ஆதரவு தெரிவித்தார். 2018ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ‘அடிக்கடி தேர்தல்கள் நடைபெறுவது மனித வளத்தின் மீது பெரும் சுமையை சுமத்துவது மட்டுமல்லாமல், மாதிரி நடத்தை விதிகளை பிரகடனப்படுத்துவதால் வளர்ச்சி செயல்முறையையும் தடுக்கிறது.

எனவே ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து அனைவரும் விவாதிக்க வேண்டும். இந்த பிரச்சினையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த கருத்துக்கு வரும்’ என்றும் தெரிவித்து இருந்தார். இந்த சூழலில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் வேளையில் மோடி அரசின் 2வது பதவிக்காலம் முடிவடையும் இந்த நேரத்தில் ஒரே நாடு-ஒரே தேர்தல் நடைமுறையை அமல்படுத்த மோடி அரசு தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காகத்தான் பிரதமர் மோடியின் கருத்துக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஒரே தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளன.

*ஒரே நாடு-ஒரே தேர்தல் இப்போது சாத்தியமா?
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1951 முதல் 967ம் ஆண்டு வரை நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றது. பின்னர், சில மாநிலங்களில் ஆட்சிக்காலம் முடியும் முன்பே அரசு கலைக்கப்பட்டதால் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தலை நடத்த முடியவில்லை. நமது நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின்படி நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவையின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். அதேநேரம், அமைச்சரவை முடிவு அடிப்படையிலும், அவசர நிலையில் 356வது பிரிவை ஆளுநர் பயன்படுத்தியும் மாநில ஆட்சிகளையும், சட்டப்பேரவையையும் கலைக்க முடியும். இப்போது ஆளுநர்கள் அப்படி செயல்பட முடியாது.

356வது பிரிவை நினைத்த நேரத்தில் ஆளுநர் பயன்படுத்த உச்ச நீதிமன்றம், எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் வழியாக தடை விதித்து உள்ளது. எனவே ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை காரணம் காட்டி இப்போது ஒரு ஆட்சியை, ஒன்றிய அரசால் கலைக்க முடியாது. மேலும் ‘ஒரே நாடு-ஒரே தேர்தல்’ நடத்த அனைத்து கட்சிகளின் ஆதரவு தேவை. ஆனால் ஒன்றிய அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளதால் ஆதரவு இல்லை.

இந்த எதிர்ப்புகளையும் மீறி மோடி அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொண்டு வந்தால், அப்படியே நடத்தினாலும் சில மாநிலங்களில் பெரும்பான்மை இல்லாமல் போனால், பெரும்பான்மை அரசில் உள்ள எம்எல்ஏக்கள் பதவி விலகி ஆட்சி கவிழ்ந்தால் அப்போது இடையில் தேர்தல் நடத்தப்படுமா அல்லது ஒரே நாடு, ஒரே தேர்தலுக்காக காத்திருக்க வேண்டியது வருமா, அப்போது அந்த மாநிலங்களில் கவர்னர்கள் ஆட்சி நடைபெறுமா என்பது பற்றிய விளக்கங்கள் தேவை. எனவே இந்த காலகட்டத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவது சாத்தியம் இல்லை.

ஆனால் மத்தியில் பெரும்பான்மை பலம் கொண்ட மோடி அரசுக்கு எது நினைத்தாலும் சாத்தியம் தான். ஆனால் சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த மாநிலங்களில் என்ன செய்வார்கள் என்பது கேள்விக்குறி. அந்த மாநில ஆட்சிகள் கலைக்கப்படுமா அல்லது அடுத்த ஒரே நாடு, ஒரே தேர்தல் வரை சிறப்பு அனுமதி அளித்து ஆட்சி நடத்த அனுமதி நீட்டிக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதுபோன்ற பிரச்னைகள் எப்படி சமாளிக்கப்படும் என்பதில் தெளிவு வேண்டும் என்பதுதான் அரசியல் விமர்சகர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

*நவம்பர், டிசம்பரில் நாடாளுமன்ற தேர்தல் வருமா?
இந்த ஆண்டு இறுதியில் மிசோரம், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. அதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல்கள் நடைபெற உள்ளன.மக்களவை தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாச்சல பிரதேச சட்டசபைகளுக்கும் தேர்தல் நடக்க உள்ளது. அடுத்த ஆண்டு இறுதியில் மகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளன.

எனவே முதற்கட்டமாக இந்த மாநிலங்கள் அனைத்திலும் முன்கூட்டியே தேர்தல் நடத்த ஒன்றிய அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும், குறிப்பாக 5 மாநில சட்டசபை தேர்தல்களுடன் இந்த ஆண்டு இறுதியில் நாடாளுமன்ற தேர்தலுடன் இந்த மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடத்தவும் பிரதமர் மோடி ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மோடியின் முடிவு இன்னும் ஓரிரு நாளில் தெரிந்து விடும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து உள்ளனர்.

* ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
ஒரு நாடு, ஒரே தேர்தல் நடத்த தேவையான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைக்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே: ஒன்றிய அரசின் நடவடிக்கை மக்களின் கவனத்தை திசை திருப்பும் ஒன்று. ஆளும் ஆட்சி மக்கள் மீது எத்தனை திசைதிருப்பல் செயல்களை மேற்கொண்டாலும், இந்திய குடிமக்கள் இனி ஏமாந்து போக மாட்டார்கள். 140 கோடி இந்தியர்கள் மாற்றத்தை ஏற்படுத்த முடிவு செய்துள்ளனர். சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய் ராவத்: நாடு ஏற்கனவே ஒன்றாக உள்ளது. அதை யாரும் கேள்வி கேட்கவில்லை. நாங்கள் நியாயமான தேர்தலை கோருகிறோம்.

இந்த நடவடிக்கை நியாயமான தேர்தலுக்கான எங்கள் கோரிக்கையில் இருந்து கவனத்தை திசைதிருப்ப கொண்டுவரப்படுகிறது. இந்திய கம்யூ பொதுச் செயலாளர் டி.ராஜா: இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்று பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் பேசுவார். ஆனால் இப்போது மற்ற அரசியல் கட்சிகளுடன் விவாதிக்காமல் அரசு ஒருதலைப்பட்சமான முடிவை எடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் மத்தியக்குழு உறுப்பினர் சுஜன் சக்ரவர்த்தி: இது முற்றிலும் ஜனநாயக விரோதம். இந்தியா கூட்டணியை பார்த்து பாஜ அஞ்சுகிறது. ஆம் ஆத்மி பிரியங்கா கக்கர்: இந்த நடவடிக்கையானது இந்தியா கூட்டணியின் கீழ் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக் கண்டு ஆளும் கட்சியின் பீதியை வெளிப்படுத்துகிறது.

* நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்து உள்ளார். அவர் கூறுகையில்,’இப்போதுதான் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கை வரும். அந்த அறிக்கையை மக்கள் மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் வைத்து விவாதிக்கப்படும். அதற்கு முன்பு எதிர்க்கட்சிகளுக்கு ஏன் இந்தக் கவலை?. எதிர்க்கட்சிகளுக்கு நாட்டு மக்கள் மீது நம்பிக்கை இல்லை. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்று அழைக்கப்படுகிறது. வளர்ந்து வரும் ஜனநாயகத்தில் வரும் புதிய கருத்துகள் விவாதிக்கப்பட வேண்டும். ஒரு யோசனை இருந்தால், அதில் ஒரு விவாதம் இருக்க வேண்டும்’ என்றார்.

*ராம்நாத் கோவிந்த்தை சந்தித்தார் நட்டா
ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவது குறித்து ஆராயும் குழுவின் தலைவராக ராம்நாத் கோவிந்த் நியமிக்கப்பட்டதாக ஒன்றிய அரசு அறிவித்த சில நிமிடங்களில் பா.ஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா அவரது இல்லத்திற்கு சென்று ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் இதுகுறித்து விவாதித்து இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

* எம்.பி.க்களின் குழு படங்கள் எடுக்க ஏற்பாடுகள் தயார்
வருகிற செப்டம்பர் 18 முதல் செப்டம்பர் 22 வரை நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்களின் குழு புகைப்படம் எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது இப்போது வரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், இதுதான் தற்போதைய நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டமாக இருக்கலாம் என்பதற்கான அறிகுறி போல் குழுப்புகைப்படம் எடுக்க அனைத்து ஏற்பாடுகளும் நடந்து முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏனெனில் எம்.பி.க்களின் குழு புகைப்படங்கள் பொதுவாக அவர்களின் பதவிக்காலத்தின் தொடக்கத்திலும், முடிவிலும் எடுக்கப்படும். ஆனால் சிறப்பு கூட்டத்தொடரில் அந்த ஏற்பாடுகள் நடந்து வருவது நாடாளுமன்ற தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

* இது பா.ஜவின் திட்டம்
ஒரே நாடு-ஒரே தேர்தல் என்பது பிரதமர் மோடியின் திட்டம் மட்டுமல்ல. இது பா.ஜவின் திட்டம் என்கிறது அரசியல் வட்டாரம். மோடிக்கு முன்பே, வாஜ்பாய்-அத்வானி தலைமையில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று பாஜ தீவிரமாக வலியுறுத்தி வந்தது. ஆனால் மற்ற கட்சிகள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அப்போது வாஜ்பாய் அதை கிடப்பில் போட்டார். தற்போது முழுப்பெரும்பான்மை மற்றும் அதிகார பலத்தில் உள்ள பிரதமர் மோடி தற்போது ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை நிறைவேற்றும் முடிவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2014 மக்களவை தேர்தலுக்கான பா.ஜ தேர்தல் அறிக்கையிலும் இது இடம் பெற்று இருந்தது.

அந்த அறிக்கையில்,’ சட்டசபை மற்றும் மக்களவை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் முறையை மற்ற கட்சிகளுடன் கலந்தாலோசித்து நடத்த பா.ஜ., முயல்கிறது. அரசியல் கட்சிகள் மற்றும் அரசு ஆகிய இரு தரப்புக்கும் தேர்தல் செலவுகளை குறைப்பது தவிர, மாநில அரசுகளுக்கும் உறுதியான நிலைத்தன்மையை இது உறுதி செய்யும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது. 2019ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, மோடி இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.

ஆனால் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட சில முக்கிய எதிர்க்கட்சிகள் இந்த யோசனை ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சிக்கு எதிரானது என்று விமர்சித்து ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தன. அதனால் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் பிரதமர் மோடி தனது முடிவை இப்போது செயல்படுத்த முனைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

* மோடி முடிவுக்கு ஆர்எஸ்எஸ் ஆதரவு
நாட்டில் ஒரே நேரத்தில் அனைத்து தேர்தல்களையும் நடத்தும் பிரதமர் மோடியின் முடிவுக்கு ஆர்எஸ்எஸ் ஆதரவு தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக ஆர்எஸ்எஸ் தரப்பில் கூறும்போது,’அனைத்து தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டால் நாட்டிற்கு நல்லது. இது பொதுப் பணத்தையும் நாட்டின் நேரத்தையும் மிச்சப்படுத்த உதவும். உண்மையில், நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் விருப்பம்.

சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா இந்த தேர்தல் முறையுடன் தனது பயணத்தைத் தொடங்கியது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது அரசியல் காரணங்களுக்காக பின்னர் மாற்றப்பட்டது, இது நாட்டின் நலனுக்காக இப்போது சரி செய்யப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

*என்ன சொல்கிறது தேர்தல் கமிஷன்?

2015 டிசம்பரில் ஒரே நாடு,ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பான சாத்தியக்கூறுகள் மற்றும் பிரச்னைகள் தொடர்பாக ஒன்றிய அரசுக்கு தேர்தல் கமிஷன் செய்துள்ள பரிந்துரைகள் வருமாறு:

*எல்லா மாநில சட்டப் பேரவைகளின் பதவிக்காலமும் பொதுவாக மக்களவையின் பதவிக்காலம் முடிவடையும் தேதியுடன் முடிவடையும். இது ஒரு முறை நடவடிக்கையாக தொடங்குவதற்கு வசதியாக தற்போதுள்ள சட்டமன்றங்களுக்கான பதவிக்காலம் ஐந்தாண்டுகளுக்கு மேல் நீட்டிக்கப்பட வேண்டும் அல்லது குறைக்கப்பட வேண்டும். இதனால் மக்களவையுடன் ஒரே நேரத்தில் புதிய தேர்தல்களை நடத்த முடியும்.

* தேர்தலுக்குப் பிறகு எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாவிட்டால், மற்றொரு வாக்கெடுப்பு அவசியமானால், புதிய தேர்தல் நடந்த பிறகு, அந்த அவையின் பதவிக்கால அவகாசம் மக்களவை பதவிக்காலம் வரை தான் இருக்க வேண்டும்.

* ஒரு அரசாங்கம் சில காரணங்களுக்காக ராஜினாமா செய்ய வேண்டியிருந்தால் மற்றும் மாற்று சாத்தியமில்லை என்றால், மீதமுள்ள பதவிக்காலம் நீண்ட காலமாக இருந்தால், புதிய தேர்தலுக்கான ஏற்பாடு பரிசீலிக்கப்படலாம். மற்ற சந்தர்ப்பங்களில் ஆளுநர் அல்லது ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும்.

* ஒரு குறிப்பிட்ட ஆண்டில் வரவிருக்கும் அனைத்து இடைத்தேர்தல்களையும் நடத்துவதற்கு தலா ஒன்றரை மாதங்கள் ஒவ்வொரு வருடத்திலும் ஒதுக்கப்பட வேண்டும்.

* ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதில் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும். ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் ஓட்டு போட்டதை சரிபார்க்கக்கூடிய விவிபேட் இயந்திரங்களை அதிக அளவில் வாங்க வேண்டும்.

* ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மின்னணு எந்திரங்கள் மற்றும் விவிபேட் எந்திரங்களை வாங்க மொத்தம் ரூ.9284.15 கோடி தேவைப்படும்.

* மின்னணு இயந்திரங்கள் ஒவ்வொரு 15 வருடங்களுக்கும் மாற்றப்பட வேண்டும். இது மீண்டும் செலவை ஏற்படுத்தும். மேலும் இந்த இயந்திரங்களை சேமித்து வைப்பதும் செலவை அதிகரிக்கும். இவ்வாறு தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

*நாடு முழுவதும் உள்ள சட்டசபை பதவிக்காலம்
1. மிசோரம்: 2023 டிசம்பர்
2. சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா: 2024 ஜனவரி
3. ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம்: 2024 ஜூன்
4. அரியானா, மகாராஷ்டிரா: 2024 நவம்பர் 5. ஜார்கண்ட்: 2024 டிசம்பர்
6. டெல்லி: 2025 பிப்ரவரி 7. பீகார்: 2025 நவம்பர்
8. தமிழ்நாடு, அசாம், கேரளா, மேற்கு வங்காளம்: 2026 மே
9. புதுச்சேரி: 2026 ஜூன் 10. கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகண்ட்: 2027 மார்ச்
11. உத்தரப்பிரதேசம்: 2027 மே 12. குஜராத், இமாச்சலப் பிரதேசம்: 2027 டிசம்பர்
13. மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா: 2028 மார்ச் 14. கர்நாடகா: 2028 மே

*நல்ல யோசனை தான்.. ஆனால்.. மாஜி தேர்தல் கமிஷனர்கள் கருத்து
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது வசதியானது தான். ஆனால் போதுமான கட்டமைப்பு வேண்டும் என்று முன்னாள் தேர்தல் கமிஷனர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். அதன்விவரம்:எஸ் ஒய் குரேஷி: நமது நாட்டில் நடக்கும் தேர்தல் ஜனநாயகத்தின் திருவிழா. ஏழைகளின் பண்டிகையாகும். ஏனெனில் வாக்கு மட்டுமே அவர்களுக்கு இருக்கும் ஒரே சக்தி. எனவே ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது வசதிதான். ஆனால் அதற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அது சாத்தியமா என்பது தெரியவில்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும். தேர்தலின் போது துணை ராணுவப் படைகளை அனுப்புவதை அதிகரிக்க வேண்டும்.

இவை நடந்தால், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ நடத்துவது சாத்தியமாகும். மேலும் பணப்பட்டுவாடா மற்றும் தேர்தல் நேரத்தைக் குறைப்பதற்கான மாற்று தீர்வுகளை அவசரமாக பரிசீலிக்க வேண்டும்.ஓபி ராவத்: இது சாத்தியம்தான். மோடி அரசு செய்யக்கூடியதுதான். ஆனால் அதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்து, திட்டங்களை உருவாக்கி அதற்கேற்ப செயல்பட வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்கு முன்வர வேண்டும். அவர்களின் ஆதரவு இல்லாமல் திருத்தங்கள் சாத்தியப்படாது. அனைத்துக் கட்சிகளும் குழுவில் இல்லை என்றால், அது மக்களுக்கு தவறான செய்தியை அனுப்பும். அது குறித்து அவர்கள் சந்தேகப்படுவார்கள்.

1952, 1957, 1962, 1967 ஆகிய ஆண்டுகளில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ நடந்ததுள்ளது. அப்போது நடந்ததை இப்போது மீண்டும் நடத்த முயற்சி செய்யலாம். அதை செய்ய அரசியலமைப்பு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951ல் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். டிஎஸ் கிருஷ்ணமூர்த்தி: ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது விரும்பத்தக்கதுதான். ஆனால் நடைமுறைச் சவால்கள் உள்ளன. தேர்தல் செலவினங்களைக் குறைப்பது போன்ற பல நன்மைகள் உள்ளன என்றாலும் பல தீமைகளும் உள்ளன. மாநிலத் தேர்தல்கள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் ஒன்றாக நடத்தப்பட்டாலும் வாக்காளர்கள் வித்தியாசமாக வாக்களிக்கிறார்கள் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது கோட்பாட்டளவில் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருந்தாலும், நடைமுறையில் சந்திக்க வேண்டிய சவால்கள் ஏராளம். அதை கொண்டு வர முடிந்தால் அது விரும்பத்தக்கது, ஆனால் அது எளிதானது அல்ல. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில் நிர்வாக சிக்கல்கள் உள்ளன. அதற்கு நிறைய நிதிச் செலவுகள், போதுமான ஆயுதப் படைகள் மற்றும் தேர்தல்களை நடத்துவதற்கு ஆள்பலம் தேவை, ஆனால் இவை சமாளிக்கக்கூடிய பிரச்சினைகள். ஆனால் அரசியலமைப்பு பிரச்சினை மிக முக்கியமான சவாலாகும்.

The post முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரே நாடு-ஒரே தேர்தல் நடத்துவதை ஆராய குழு அமைப்பு: ஒன்றிய அரசின் திடீர் உத்தரவால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : -one ,President ,Ramnath Kovind ,Union Government ,New Delhi ,Committee Organisation ,Explore the ,One-Country-One Election ,Former ,Ramnath Govind ,Dinakaran ,
× RELATED ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு தலைவர் கொள்கையை...