×

உழவர் பாதுகாப்பு திட்டத்தில் பல கோடி ரூபாய் மோசடி: கணினி ஆபரேட்டர் சிக்கினார்

திட்டக்குடி: திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் கையாடல் செய்த வழக்கில் கணினி ஆபரேட்டர் அகிலா, அவரது கணவர் மற்றும் உறவினர்கள் 2 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் பல கோடி ரூபாய் கையாடல் நடைபெற்று இருப்பதாகவும் கடந்த 2018ம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகள் விவசாயிகள் பெயரில் வழங்கப்படும் திருமண உதவி திட்டம், கல்வி உதவித் திட்டம், இறந்தால் இறுதி சடங்கு செய்ய உதவி திட்டம், விபத்து காப்பீடு திட்டம் என பல திட்டங்களில் பல கோடி ரூபாய்க்கு மேல் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த கணினி ஆபரேட்டர் மூலமாக ஐந்துக்கும் மேற்பட்டவர்களின் வங்கி கணக்குகளில் பண பரிமாற்றம் செய்து பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதாகவும் இவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ், கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசை விசாரணை செய்ய உத்தரவு விட்டார். விசாரணை தீவிரமடைந்த நிலையில் ரூ. 6 கோடிக்கு மேல் கையாடல் நடந்தது உறுதி செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் கடலூர் மாவட்ட காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். எசனூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த அகிலா மற்றும் அவரது கணவர் மற்றும் உறவினர்கள் 2 பேர் என மொத்தம் நாலுபேரை பேரை போலீசார் இன்று காலை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

The post உழவர் பாதுகாப்பு திட்டத்தில் பல கோடி ரூபாய் மோசடி: கணினி ஆபரேட்டர் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Phetakkudi ,Phetakkudi taluk ,
× RELATED திட்டக்குடி அருகே டயர் வெடித்து மரத்தில் கார் மோதி பொறியாளர் பலி