×

பராமரிப்பு இன்றி கிடக்கும் வைகை அணை பூங்கா‌ பளபளப்பாகுமா? தென்மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு

ஆண்டிபட்டி : தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுக்கு விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பிரதான ஆதாரமாக விளங்கும் வைகை அணை கட்டுவதற்கு ரூ.3 கோடியை 30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதில் அணை கட்டி முடித்தது போக மீதம் ரூ.40 லட்சம் பணம் இருந்தது. அந்த பணத்தில் அணைப் பகுதியில் பூங்கா கட்டப்பட்டு பொதுமக்கள் சுற்றிபார்க்கும் வகையில் அமைக்கப்பட்டது.

தற்போது இந்த பூங்கா தேனி மாவட்டத்தில் சிறந்த சுற்றுலாத்தளமாக விளங்கி வருகிறது. இந்த வைகை அணை பூங்காவில் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளது. பூங்காவிற்கு தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

மேலும் சபரிமலை, பழனி முருகன் கோவில் சீசன்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள். பூங்காவில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள். சுற்றுலா பயணிகள் வீட்டிலிருந்து உணவு சமைத்து குடும்பத்துடன் சுற்றிபார்த்து உண்டு மகிழ்வார்கள்.

வைகை அணை குடும்பத்துடன் சென்று வருவதற்கும், குழந்தைகள் குஷியாக விளையாடுவதற்கும் ஏற்ற இடமாக உள்ளது. பிரமாண்டமாக எழுந்து நிற்கும் அணையின் இரண்டு புறங்களும் வலதுகரை பூங்கா, இடதுகரை பூங்காக்கள் உள்ளது. இந்த இரண்டு கரை பூங்காக்களிலும் ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள் உள்ளது.

சிறுவர்கள் மகிழ்ந்து விளையாடுவதற்கு சிறுவர் பூங்கா, பெரியார் மாதிரி வைகை பூங்கா, மச்சக்கன்னி பூங்கா, பயில்வான் பார்க், யானை சறுக்கல், ஊஞ்சல், மலைகள் போல் அமைக்கப்பட்டு வரைபடங்கள், நீரூற்றுகள், புல்தரைகள், ஆங்காங்கே ஓய்விடங்கள், குழந்தைகள் குஷியாக சென்றுவர உல்லாச ரயில், படகு குழாம், இசையுடன் தண்ணீர் நடனமாடும் வகையில் அமைக்கப்பட்டு இசை நடன நீரூற்று என ஏராளமான அம்சங்கள் செய்யப்பட்டுள்ளது. பூங்காவிற்குள் நுழைவதற்கு ஒரு நபருக்கு 5 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. காலை 7 மணிக்கு திறக்கப்படும் பூங்கா இரவு 7 மணி வரை இருக்கும்.

இந்த வைகை அணை பூங்காவில் உள்ள விளையாட்டு பொருட்கள் அனைத்தும் சேதமடைந்து காணப்படுகிறது. விளையாட்டு பொருட்களான ஊஞ்சல், சறுக்கல், ராட்டினங்கள் உள்ளிட்ட சிறுவர்கள் விளையாடும் அனைத்து பொருட்களும் சேதமடைந்து காணப்படுகிறது. விளையாட்டு பொருட்கள் அனைத்தும் உடைந்து கிடப்பதால் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் விளையாடும் போது‌ காயமடைகின்றனர். மேலும் குழந்தைகளை விளையாட வைப்பதற்காக பூங்காவிற்கு வருபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.‌ இதேபோல் அங்குள்ள சிலைகளும் உடைந்து சேதமடைந்து காணப்படுகிறது.‌

பூங்காவில் மின்விளக்குகள் இல்லாததால் பூங்கா இருளில் முழ்கி கிடக்கிறது. பூங்காவில் இருந்து அனைத்து விளக்குகளும் பழுதாகி இருப்பதாலும், அதனை நீண்ட காலமாக சரி செய்யாமல் உள்ளது. பாதி இடங்களில் மின் விளக்குகளே இல்லை. பூங்காவில் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதிக்கப்படுவதால் மாலை நேரத்தில் பூங்கா வெளிச்சம் இல்லாமல் காணப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் 5.30 மணிக்கெல்லாம் பூங்காவை விட்டு வெளியேறும் நிலை உள்ளது.

மேலும் பூங்காவில் ஆங்காங்கே பராமரிப்பு இல்லாததாலும் மின்விளக்குகள் இல்லாததாலும் மாலை நேரத்தில் விஷ பூச்சிகள் வருகிறது. மதியம் வெயில் 4 மணிக்கு மேல் தான் இறங்கும். இதனால் சுற்றுலா பயணிகள் மாலை 5 மணிக்கு தான் பூங்காவிற்கு வருவார்கள். பூங்காவிற்கு வந்த சில நேரங்களிலேயே இருட்டி வருவதால், அப்போது மின்விளக்குகளும் இல்லாததால், உடனே பூங்காவை விட்டு வெளியேற வேண்டிய நிலை உள்ளது என்று சுற்றுலா பயணிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். மேலும் பூங்காவில் மின்விளக்குகள் இல்லாததால் சமூக விரோத செயல்கள் அதிகமாக நடைபெறுகிறது.

பூங்காவின் மதகுப்பகுதிகளில் விளக்குகள் எரியாததால் இருண்டு காட்சியளிக்கிறது. வைகை அணை‌ பூங்காவில் சுமார் 10க்கும் மேற்பட்ட சிறுகடைகள் உள்ளன. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த கடைகளில் ஸ்நாக்ஸ் போன்ற திண்பண்டங்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். பயன்படுத்திய பொருட்களில் உள்ள பிளாஸ்டிக் பைகளை குப்பை தொட்டியில் போடாமல் அப்படியை நடைபாதையிலும், புல் தரைகளிலும் போட்டு செல்கின்றனர். இதனால் பூங்கா குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது.

மேலும் மதுபான பாட்டில்களும் பூங்காவிற்க்குள் அதிகமாக காணப்படுகிறது. இங்கு பணிபுரியும் பூங்கா பணியாளர்களும், இந்த குப்பைகளை அகற்றாமல் உள்ளனர். மேலும் இங்குள்ள மரங்களில் இருந்து விழும் காய்ந்த இலைகளும் குப்பைகளாய் நிறைந்து காணப்படுகிறது. இதனால் பூங்கா அழகு நிறைந்து காணப்படாமல் குப்பை கிடங்காய் காணப்படுகிறது. புல் செடிகளும் பராமரிப்பு செய்யாமல் அடர்ந்து வளர்ந்து கிடக்கிறது.
இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், வைகை அணை பூங்கா பகுதிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும், பூங்காவில் போதுமான பராமரிப்புகள் இல்லை‌. விளையாட்டுப் பொருள்கள் அனைத்தும் சேதமடைந்து கிடக்கிறது. அழகு சிலைகளும் சேதமடைந்து கிடக்கிறது.

புல் செடிகளை அழகாக வெட்டி பராமரிப்பதில்லை. பூங்கா முழுவதும் மின்விளக்குகளை கிடையாது. இதனால் தினந்தோறும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தேனி மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தளமாக விளங்கும் இந்த வைகை அணை பூங்காவை முறையாக பராமரிப்பு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

The post பராமரிப்பு இன்றி கிடக்கும் வைகை அணை பூங்கா‌ பளபளப்பாகுமா? தென்மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Vaigai Dam park ,South District ,Andipatti ,Theni ,Madurai ,Dindigul ,Sivagangai ,Ramanathapuram ,Dinakaran ,
× RELATED வார விடுமுறையையொட்டி வைகை அணை...