×

இந்தியா கூட்டணியின் 3வது கூட்டம் 28 கட்சி தலைவர்கள் மும்பையில் ஆலோசனை: பாஜவை வீழ்த்த குறைந்தபட்ச பொது திட்டம் குறித்து விவாதம்

மும்பை: இந்தியா கூட்டணியின் 3வது ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நேற்று தொடங்கியது. இதில், மக்களவை தேர்தலில் பாஜவை வீழ்த்த குறைந்தபட்ச பொது திட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து 28 கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதுதொடர்பாக இன்று நடக்கும் அதிகாரப்பூர்வ கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அடுத்த ஆண்டு நடக்க உள்ள மக்களவை தேர்தலில் பாஜவை எதிர்கொள்ள காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ எனும் புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளன. இக்கூட்டணியின் முதல் ஆலோசனை கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவிலும், 2வது ஆலோசனை கூட்டம் பெங்களூருவிலும் நடந்ததைத் தொடர்ந்து, 3வது ஆலோசனை கூட்டம் மும்பையில் நேற்று தொடங்கியது.

2 நாள் நடக்கும் இக்கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மும்பை புறப்பட்டு சென்றார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய லோக்தளம் (ஆர்எல்டி) தலைவர் ஜெயந்த் சவுத்ரி உள்ளிட்டோர் நேற்று மும்பை வந்தடைந்தனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் யாதவ், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் ஒருநாள் முன்பாகவே மும்பைக்கு சென்றிருந்தனர்.

இந்தியா கூட்டணியில் மகாராஷ்டிராவின் விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சியும் (பிடபிள்யூபி) மற்றும் மற்றொரு பிராந்திய அமைப்பும் இந்தியா கூட்டணியில் இணைந்திருப்பதன் மூலம் அதன் பலம் 28 கட்சிகளாக அதிகரித்துள்ளது. இந்த 28 கட்சிகளைச் சேர்ந்த 63 தலைவர்கள் நேற்று மாலை நடந்த அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தில் சந்தித்து உரையாடினர்.சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர் எதிர்க்கட்சி தலைவர்களை வரவேற்றனர். இந்த அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பில், கூட்டணிக்கு உறுதியான செயல்திட்டத்தை உருவாக்குவது, பாஜவை வீழ்த்த குறைந்தபட்ச பொது செயல் திட்டம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து கட்சி தலைவர்கள் தங்களின் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, கூட்டத்திற்கு வந்த கட்சி தலைவர்களுக்கு உத்தவ் தாக்கரே இரவு விருந்து அளித்தார். ஆலோசனைக் கூட்டத்தின் அதிகாரப்பூர்வ கூட்டம் இன்று நடக்க உள்ளது. இதில் கூட்டணியின் சின்னம் வெளியிடப்பட உள்ளது. மேலும், கூட்டணியின் எதிர்கால உத்திகள் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. குறிப்பாக, 2024 மக்களவை தேர்தலில் பாஜவை எதிர்கொள்வதற்கான பொதுவான பிரசார உத்தி வகுக்கப்பட உள்ளது. மேலும், கூட்டணியின் முக்கிய கட்சிகளைச் சேர்ந்த 11 தலைவர்கள் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட உள்ளது. இதுதவிர, குறைந்தபட்ச பொது திட்டத்தை செயல்படுத்த சில துணை குழுக்கள், தகவல் தொடர்பு குழுக்கள் என பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.

மேலும், கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. கூட்டணியின் தலைவராக சோனியா காந்தி அறிவிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன. மேலும், ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்வது தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. கூட்டத்தில் பங்கேற்க வந்த பல்வேறு தலைவர்களும், நாட்டில் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை காப்பாற்ற ஒன்றிணைந்துள்ளதாகவும், ஆளும் பாஜவை எதிர்கொள்ள பொதுவான திட்டத்தை உருவாக்குவோம் என்றும் உறுதி அளித்துள்ளனர்.

The post இந்தியா கூட்டணியின் 3வது கூட்டம் 28 கட்சி தலைவர்கள் மும்பையில் ஆலோசனை: பாஜவை வீழ்த்த குறைந்தபட்ச பொது திட்டம் குறித்து விவாதம் appeared first on Dinakaran.

Tags : All India Alliance ,Mumbai ,BJP ,India Alliance ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED ரொம்ப திட்டுறாங்க ஆபீசர்….தேர்தல் ஆணையத்தில் பா.ஜ பரபரப்பு புகார்