×

பழவேற்காட்டில் சுமார் 20 ஆண்டுகளாக இடிந்து விழும் நிலையில் பாழடைந்த கட்டிடம்: உடனே அகற்ற கோரிக்கை

பொன்னேரி: பழவேற்காட்டில் சுமார் 20 ஆண்டுகளாக இடிந்து விழும் நிலையில் உள்ள பழமையான அரசு மருத்துவமனை செயல்பட்ட பாழடைந்த கட்டிடத்தை, உடனே அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் மிகவும் பழமையான அரசு மருத்துவமனை ஒன்று உள்ளது. இது, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்துவித மருத்துவ சேவைகளும் இங்கு கிடைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த கட்டிடம் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் அந்த வளாகத்திலேயே புதிய மருத்துவமனை கட்டிடங்கள் கட்டப்பட்டு மருத்துவ சேவைகளும் நடைபெற்று வருகிறது.

இதில், இந்த பழைய கட்டிடத்தின் ஒரு பகுதி சில வருடங்களுக்கு முன்பு இடிந்து விழுந்து சேதமாகி விட்டது. மேலும், உள்ள பகுதிகள் ஒவ்வொன்றாக இடிந்து விடும் நிலையில் உள்ளது. இந்த கட்டிடத்தில் அரசமரம், வேப்பமரம் போன்ற மரங்கள் வளர்ந்து மேலும் விரிசலை அதிகப்படுத்தி எந்நேரமும் இடிந்து விடும் நிலையில் உள்ளது. மேலும், இந்த அரசு மருத்துவமனைக்கு காவலாளி இல்லாததால் இரவு நேரத்தில் பழைய அரசு மருத்துவமனையில் குடிமகன்களின் அட்டகாசம் அதிகரித்து உள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக இங்கு வரும் நோயாளிகள் முகம் சுளிக்கும் அளவுக்கு அரங்கேறி வருகிறது.

இது குறித்து அரசுத்துறை அதிகாரியிடம் பலமுறை புகார் அளிக்கப்பட்டும், தொல்லியல் துறைக்கு கட்டுப்பாட்டில் உள்ளதால், இதனை இடிப்பதற்கும் சேதப்படுத்துவதற்கு அனுமதி இல்லை என பதில் வருகிறது. எனவே, எந்நேரமும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ள இந்த கட்டிடத்தை இடித்து விட்டு, புதிய கட்டிடம் கட்ட வேண்டும் அல்லது பழமை மாறாமல் கட்டிடத்தை புதுப்பிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

The post பழவேற்காட்டில் சுமார் 20 ஆண்டுகளாக இடிந்து விழும் நிலையில் பாழடைந்த கட்டிடம்: உடனே அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Palavekkad ,Ponneri ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த...