×

பூந்தமல்லி அருகே பைக் மீது பேருந்து மோதி கல்லூரி மாணவி பலி: டிரைவர் கைது

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே நேற்று மாலை பைக் மீது பின்னால் வந்த தனியார் பேருந்து வேகமாக மோதியது. இதில் கல்லூரி முடிந்து நண்பருடன் வீடு திரும்பிய கல்லூரி மாணவ பரிதாபமாக பலியானார். அந்த மாணவியின் நண்பர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். சென்னை போரூர், குயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பவித்ரா(20). இவர், மதுரவாயலில் ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவரது நண்பர், பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வினோத்(22). நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்து தனது நண்பர் வினோத்துடன் பைக்கில் பவித்ரா வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இவர்கள் அய்யப்பன்தாங்கல் அருகே வந்தபோது, பின்னால் வந்த ஒரு தனியார் பேருந்து பைக் மீது வேகமாக மோதியது.

இதனால்,நிலைதடுமாறி பவித்ராவும், வினோத்தும் சாலையில் விழுந்துள்ளனர். அப்போது பவித்ராவின் தலைமீது தனியார் பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக பலியானார். வினோத் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தகவலறிந்த போரூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து பவித்ராவின் சடலத்தை கைப்பற்றி, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து டிரைவரை கைது செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பூந்தமல்லி அருகே பைக் மீது பேருந்து மோதி கல்லூரி மாணவி பலி: டிரைவர் கைது appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Dinakaran ,
× RELATED பெருமாள்புரத்தில் கூலிப்படை...