×

கடைவரம்பு பகுதிகளுக்கு தண்ணீர் வராததால் கருகும் நெற்பயிர்கள்: பறக்கையில் கும்ப பூ சாகுபடிக்கு ஆயத்தமாகும் விவசாயிகள்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப் பூ, கும்ப பூ சாகுபடிகள் நடந்து வருகிறது. கன்னிப் பூ சாகுபடி தொடங்கும் போது பேச்சிப்பறை அணை கடந்த ஜூன் 1ம் தேதி திறக்கப்பட்டது. பின்னர் சானல்கள், கால்வாய்கள் தூர்வாரி, உடைப்புகளை சரிசெய்வதற்கு என்று அணை மூடப்பட்டது. இதற்கிடையே தென்மேற்கு பருவமழையும் ஏமாற்றியது. இதனால் அணை தண்ணீர் திறந்த பிறகு நடவு பணியை மேற்கொள்ளலாம் என்று விவசாயிகள் முடிவு எடுத்தனர். அதன் பிறகு அணை தண்ணீர் திறந்த பிறகு கன்னிப்பூ சாகுபடி மேற்கொண்டனர். இதனால் சாகுபடி பணிகள் தாமதம் ஆனது. பேச்சிப்பாறை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கும் வகையில் சுழற்சி முறையில் மாவட்ட நிர்வாகம் வழங்கி வருகிறது.

ஏற்கனவே தோவாளை சானலில் உடைப்புகள் சரிவர சீர் செய்யப்படாததால் குறைந்த அளவு தண்ணீர் விடப்பட்டது. இதன் காரணமாக தோவாளை சானலை நம்பியுள்ள வயல்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கவில்லை. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உலக்கை அருவி அருகே தோவாளை சானலில் உடைப்பு ஏற்பட்டது. விவசாயிகள் பாதிக்காத வகையில் உடைப்புகள் விரைந்து சரிசெய்யப்பட்டு மீண்டும் சானலில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆனால் குறைந்த அளவு தண்ணீர் வந்துகொண்டு இருப்பதால், அனைத்து வயல்களுக்கும் தேவையான தண்ணீர் கிடைக்காமல் உள்ளது. இதனால் தோவாளை சானலை நம்பியுள்ள சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான வயல்கள் கருகதொடங்கியுள்ளது.

அதேபோல் தெங்கம்புதுர் கடைவரம்பு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட கன்னிப்பூ பயிர்களும் கருகும் நிலை உருவாகி உள்ளது. பறக்கை உள்பட குளத்து பாசனத்தை பயன்படுத்தி சாகுபடி செய்யப்பட்ட கன்னிப்பூ கடந்த ஆகஸ்ட் முதலில் அறுவடை தொடங்கியது. தற்போது பறக்கையில் அறுவடை பணிகள் முடிந்து உள்ளது. இந்தநிலையில் பறக்கை குளத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இன்னும் ஓரிருநாளில் கும்ப பூ சாகுபடி பணி பறக்கையில் தொடங்கப்பட உள்ளது. இது குறித்து பறக்கை விவசாயி பெரியநாடார் கூறியதாவது: பறக்கையில் கன்னிப்பூ சாகுபடி சரியான நேரத்தில் பறக்கை குளத்தில் உள்ள தண்ணீரை வைத்து செய்தோம். அறுவடை முடிந்து நெற்களையும் நல்லவிலைக்கு விற்பனை செய்துள்ளோம்.

ஆனால் ஆற்றுபாசனத்தை நம்பியுள்ள வயல்கள் பெரும்பாலும் தண்ணீர் இல்லாமல் கருகி உள்ளது. தெங்கம்புதூர் கடைவரம்பு பகுதிகளுக்கு கடந்த 10 நாட்களாக தண்ணீர் வரவில்லை. இதனால் தண்ணீர் இன்றி வாடும் நிலை உள்ளது. பறக்கையில் அறுவடை செய்யப்பட்ட பறக்கையில் கும்பபூ சாகுபடி பணியை மேற்கொள்ள ஆயத்தம் ஆகி வருகிறோம். இதற்கான குளத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இன்றும் 10 நாட்களில் கும்பபூ சாகுபடி பணியை மேற்கொள்ளவுள்ளோம். என்றார்.

The post கடைவரம்பு பகுதிகளுக்கு தண்ணீர் வராததால் கருகும் நெற்பயிர்கள்: பறக்கையில் கும்ப பூ சாகுபடிக்கு ஆயத்தமாகும் விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Nagargo ,Kannyakumari District ,
× RELATED 4 ஆண்டுகளுக்கு பின் கைதான நாகர்கோவில்...