×

இந்தியா கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் மும்பையில் தொடங்கியது: மக்களவை தேர்தல் வியூகம் குறித்து விவாதம்..!

மும்பை: எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் மும்பையில் தொடங்கியது. 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் “இந்தியா” கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்கொள்வதற்காக காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்த கூட்டணியின் முதல் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூன் மாதம் பீகார் தலைநகர் பாட்னாவிலும், 2வது கூட்டம் கர்நாடக தலைவர் பெங்களூருவிலும் நடந்தது. பெங்களூரு கூட்டத்தில் தான் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘இந்தியா’ என்று பெயர் சூட்டப்பட்டது. இதைதொடர்ந்து மும்பை சாந்தாகுருஸ் பகுதியில் உள்ள கிராண்ட் ஹயாத் ஓட்டலில் 3வது ஆலோசனை கூட்டம் ஆக. 31(இன்று) மற்றும் செப். 1ம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.ஆலோசனை கூட்டம் முடிந்ததும் அதே ஓட்டலில் இரவு விருந்து நிகழ்ச்சி நடக்கிறது. இதில் அனைத்து தலைவர்களும் கலந்து கொள்கின்றனர். நாளை காலை 2வது நாளாக எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் அதே ஓட்டலில் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் யார், தொகுதி பங்கீடு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூட்டணிக்கான பொதுவான குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்குதல், நாடு முழுவதும் பாஜ அரசை எதிர்த்து போராட்டங்கள் நடத்துவது, கூட்டு பிரசார உத்திகளை வகுப்பது ஆகியவற்றுக்கு தனித்தனி குழுக்கள் அமைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தில் தொகுதி பங்கீட்டில் உள்ள பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படுவதுடன் இதற்காக குழு ஒன்று அறிவிக்கவும் வாய்ப்புள்ளது. மேலும் மக்களவை தேர்தல் வியூகம் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. இதுதவிர கூட்டணியில் கட்சிகளை ஒருங்கிணைக்க ஒருங்கிணைப்பு குழுவும், அதற்கு தலைவரும், கூட்டணிக்கு தலைமை வகிக்க தலைவர் ஒருவரும் நியமிக்கப்படவுள்ளனர்.

இந்த ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும், தலைவர் பதவிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாவும் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூட்டணிக்கான இலட்சிணை வெளியிடப்படும் என்றும் தெரிகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறும் கிராண்ட் ஹயாத் ஓட்டலை சுற்றி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. நாளை கூட்டம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறும். அதில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தலைவர்கள் விளக்க உள்ளனர். இந்த கூட்டம் பற்றி மும்பையில் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘மும்பை கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த நாட்டையும், ஜனநாயகத்தையும் காக்க வேண்டுமென்ற ஒரே நோக்கத்தில் ஒன்றிணைந்துள்ளோம். எங்கள் கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக பல முகங்கள் உள்ளன. ஆனால் பாஜவில் மோடியை தாண்டி வேறு யாராவது உண்டா. இந்தியா கூட்டணி வளர வளர, காஸ் சிலிண்டரை இலவசமாக கூட கொடுப்பர். அவர்கள் எதை செய்தாலும் கவலையில்லை. மக்கள் புத்திசாலிகள், அவர்கள் அனைத்தையும் அறிவர் என்றனர். மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல், மும்பை கூட்டத்தில் இந்தியா கூட்டணி ‘பாஜக சலே ஜாவோ (பாஜக வெளியேறு)‘ என்ற முழக்கத்தை உருவாக்கும் என்றார். காங்கிரசை சேர்ந்த மராட்டிய முன்னாள் முதல்வர் அசோக் சவான், இந்தியா கூட்டணி கூட்டத்தில் 11 மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர் என்றார். மும்பையில் 2 நாட்கள் நடைபெற உள்ள இந்த கூட்டம் அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post இந்தியா கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் மும்பையில் தொடங்கியது: மக்களவை தேர்தல் வியூகம் குறித்து விவாதம்..! appeared first on Dinakaran.

Tags : 3rd Consultative Meeting ,India Alliance ,Mumbai ,Lok Sabha ,India ,Consultative Meeting ,Dinakaran ,
× RELATED I.N.D.I.A. கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமர் மோடி