×

அக்சாய் சின் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் புகைப்படம் குறித்து மிகைப்படுத்த வேண்டாம்: சொல்கிறது சீனா

பீஜிங்: லடாக்கில் விமானப்படை தளங்களை அமைத்து இந்தியா வலுவாக இருக்கிறது. அதற்கு பதிலடி தர சர்ச்சைக்குரிய அக்சாய் சின் பகுதியில் சீனா சுரங்கப்பாதை அமைக்கும் புகைப்படம் வெளியானது. இதை மிகைப்படுத்த வேண்டாம் என்று சீனா தரப்பில் கூறப்பட்டுள்ளது. கிழக்கு லடாக்கில் கல்வான் மோதலை தொடர்ந்து இந்தியா, சீனா இடையே எல்லை பிரச்னை தீவிரமடைந்துள்ளது. இரு தரப்பிலும் எல்லையில் குவிக்கப்பட்ட படைகளை வாபஸ் பெறும் பேச்சுவார்த்தை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையே, அருணாச்சல பிரதேசம் மற்றும் அக்சாய் சின் பகுதியை சீனா சொந்தம் கொண்டாடி புதிய வரைபடத்தை வெளியிட்ட நிலையில், அக்சாய் சின் எல்லையில் சுரங்கங்களை அமைத்து வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. வடக்கு லடாக்கின் டெப்சாங் சமவெளிக்கு கிழக்கே 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பள்ளத்தாக்கின் ஓரத்தில் தற்போது சீன ராணுவம் சுரங்கப்பாதையை அமைத்து வருகிறது. இது சீன வீரர்கள் தங்குவதற்கும், ஆயுதங்களை பதுக்கி வைப்பதற்குமாக அமைக்கப்பட்டு வருகிறது.

வரலாற்று ரீதியாக அக்சாய் சின் இந்தியாவுக்கு சொந்தமானது என கூறி வந்தாலும், தற்போது அந்த பகுதி சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது இந்திய- சீன எல்லை கோட்டுக்கு கிழக்கே அமைந்துள்ளது. இங்கு பள்ளத்தாக்கின் இருபுறமும் இருக்கும் பாறைகள் தோண்டப்பட்டுள்ளது.சீனாவின் இந்த வரைபடத்தை நிராகரித்த இந்தியா, இது தொடர்பாக அந்த நாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் வாங் வென்பின்னிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘எவ்வித தாக்குதலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. தற்போது எல்லையில் சீனா மலைகளை ஆக்கிரமித்து வருவதும், இந்தியாவின் பதிலடி தாக்குதல் திறனும் ஒன்றுக்கொன்று நேரடி தொடர்புடையது. மேலும் சீன இறையாண்மையை சட்டப்படி செயல்படுத்துவதில் இது ஒரு வழக்கமான நடைமுறைதான். இந்த விவகாரத்தில் தொடர்புடைய தரப்பினர் (இந்தியா) அமைதியாக இருப்பார்கள் என்றும் மிகைப்படுத்துவதை தவிர்ப்பார்கள் என்றும் நம்புகிறோம்’ என்றார்.

The post அக்சாய் சின் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் புகைப்படம் குறித்து மிகைப்படுத்த வேண்டாம்: சொல்கிறது சீனா appeared first on Dinakaran.

Tags : Aksai Chin ,China Beijing ,India ,Ladakh ,Aksai Chin region ,China ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...