×

‘அம்மா மக்கள் அதிமுக’ ஓபிஎஸ் புதுக்கட்சி செப். 3ல் அறிவிப்பு வெளியாகிறது?

திருச்சி: அம்மா மக்கள் அதிமுக என்ற பெயரில் ஓ.பன்னீர் செல்வம் புதுக்கட்சி தொடங்க இருப்பதாகவும், இதற்கான அறிவிப்பு வரும் செப். 3ம் தேதி வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலால் ஓ.பன்னீர் செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். எடப்பாடி அணி சார்பில் நடந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் ஓபிஎஸ்சும், அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும், நீதிமன்ற தீர்ப்புகளால் அதிமுக முழுவதும் எடப்பாடி கைக்கு சென்று விட்டது. எனவே ஓபிஎஸ் தரப்பில் புது கட்சி தொடங்கி மக்களை சந்திக்கலாம் என முடிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாம்.

இது தொடர்பாக ஓபிஎஸ், தனது ஆதரவாளர் பண்ருட்டி ராமசந்திரனிடம் ஆலோசனை நடத்தி உள்ளார். அப்போது தனிக்கட்சி தொடங்குவதும், கட்சியின் பெயரும் முடிவாகி விட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி ஓபிஎஸ் வட்டாரத்தில் விசாரித்த போது, ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்க முடிவு செய்துள்ளார். கட்சியின் பெயர் அம்மா மக்கள் அதிமுக. வரும் செப்டம்பர் 3ம் தேதி காஞ்சிபுரத்தில் இருந்து ஓபிஎஸ் தொண்டர்கள் மற்றும் மக்களை சந்திக்கும் சுற்றுப்பயணம் தொடங்குகிறார். அன்றைய தினம், புதுக்கட்சி அறிவிப்பை ஓபிஎஸ் வெளியிடுவார். மேலும் எதிர்கால திட்டங்கள் பற்றியும் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.

டெல்லி பாஜ தலைமையை ஓபிஎஸ் பெரிதும் நம்பி இருந்தார். ஆனால் பாஜ அவரை கைவிட்டு விட்டது. கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு கூட ஓபிஎஸ்சை அழைக்கவில்லை. இது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஓபிஎஸ்சுக்கு ஏற்பட்டுள்ளது. அமமுக பொது செயலாளர் டிடிவி.தினகரனுடன் இணைந்து, ஓபிஎஸ் கட்சி மக்களவை தேர்தலை சந்திக்கும். பாஜ மற்றும் எடப்பாடி தலைமையிலான அதிமுகவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்று ஓபிஎஸ் தனது பலத்தை நிரூபிப்பார். ஓபிஎஸ் கட்சி தலைமையில் தமிழகத்தில் 3வது அணி அமைப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றனர்.

 

The post ‘அம்மா மக்கள் அதிமுக’ ஓபிஎஸ் புதுக்கட்சி செப். 3ல் அறிவிப்பு வெளியாகிறது? appeared first on Dinakaran.

Tags : Amma Makkal ,Trichy ,O. Panneer Selvam ,Amma Makkal AIADMK ,Dinakaran ,
× RELATED பொங்கலை சொந்த ஊரில் கொண்டாட தென்...