×

ஆட்சி மாற்றத்துக்கு ஏற்ப லஞ்ச ஒழிப்புத்துறை பச்சோந்தி போல் நிறமாறுகிறது: ஓபிஎஸ் மீதான சொத்துகுவிப்பு வழக்கில் ஐகோர்ட் கடும் கண்டனம்

சென்னை: ஆட்சி மாற்றத்துக்கு ஏற்ப லஞ்ச ஒழிப்புத்துறை பச்சோந்தி போல் நிறமாறுவதாக ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஒ.பி.எஸ் விடுவிக்கப்பட்டது தொடர்பாக ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறார். 2012ல் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஓபிஎஸ்-ஐ சிவகங்கை நீதிமன்றம் விடுதலை செய்திருந்தது. 2001 முதல் 2006 வரை நடைபெற்ற அதிமுக ஆட்சியில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.77 கோடி சொத்து சேர்த்ததாக ஓபிஎஸ் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஓபிஎஸ் விடுவிக்கப்பட்ட நிலையில் வழக்கை மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார்.

M.P., MLAக்களுக்கு சட்டம் பொருந்தாது என அறிவிக்கலாம்:

சட்டம் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு பொருந்தாது என அறிவித்து விடலாம் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளில் பின்பற்றப்படும் நடைமுறையில் பிரச்னைகள் உள்ளன. லஞ்ச ஒழிப்புத்துறை அரசிடம் இருந்து விலகி செயல்பட வேண்டும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்தார்.

தவறுகளை அனுமதித்தால் சமுதாயம் சிதைந்துவிடும்:

இதுபோன்ற தவறுகள் நடைபெற அனுமதித்தால் புற்றுநோய் போல் இந்த சமுதாயத்தை சிதைத்துவிடும் என நீதிபதி தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை அறிக்கையை நீதிமன்றத்துக்கு பதில் அரசிடம் அளித்துள்ளது என்றார்.

லஞ்ச ஒழிப்புத்துறை பச்சோந்தியாக மாறியுள்ளது:

லஞ்ச ஒழிப்புத்துறை உருவாக்கப்பட்ட நோக்கம் அழிந்து பச்சோந்தியாக மாறியுள்ளது என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடுமையாக சாடினார். சிறப்பு நீதிமன்றங்கள் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளும் ஆராயப்படும். ஆட்சிக்கு முன்னர் ஒரு நிலைப்பாடு, அதிமுக ஆட்சிக்கு வந்ததும் வேறுநிலைப்பாட்டை விஜிலென்ஸ் எடுத்துள்ளது. 374% வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லை என விஜிலென்ஸ் கூறியது என்றார்.

குற்ற வழக்கு விசாரணை கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளது:

குற்ற வழக்கு விசாரணை நடைமுறை கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளது என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட உத்தரவுகள் அனைத்தும் மறு ஆய்வுக்கு எடுக்கப்படும் என ஐகோர்ட் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் நீதிபதி போல் செயல்பட்டிருக்கிறார்:

சபாநாயகர் நீதிபதி போல் செயல்பட்டிருப்பதாகவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விமர்சனம் செய்தார். ஓ.பன்னீர்செல்வம் விடுவிக்கப்பட்டது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார். சொத்து குவிப்பு வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் விடுவிக்கப்பட்டது தொடர்பாக பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post ஆட்சி மாற்றத்துக்கு ஏற்ப லஞ்ச ஒழிப்புத்துறை பச்சோந்தி போல் நிறமாறுகிறது: ஓபிஎஸ் மீதான சொத்துகுவிப்பு வழக்கில் ஐகோர்ட் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : iCourt ,OPS ,Chennai ,Igourd ,Algeria ,Dinakaran ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட...