×

கல்குவாரியில் அதிக சத்தத்துடன் கூடிய வெடிகளை பயன்படுத்துவதாக புகார்

சத்தியமங்கலம், ஆக.31: புஞ்சை புளியம்பட்டி அருகே செயல்படும் கல் குவாரியில் பாறைகளை தகர்க்க அதிக சத்தத்துடன் கூடிய வெடிகளை பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி கல்குவாரியை தடை செய்ய வலியுறுத்தி விண்ணப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட குரும்பபாளையம், பனங்காட்டு பாளையம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று விண்ணப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணி மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளித்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது: விண்ணப்பள்ளி ஊராட்சி குரும்பபாளையம் கிராமத்தில் தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது.

இந்த கல்குவாரியில் அதிக சத்தத்தில் வெடி மருந்துகள் வைத்து பாறைகள் அகற்றப்படுவதால் நிலத்தடி நீர் மாசுபட்டு வருகிறது. அந்த நீரை விவசாயத்திற்கு பயன்படுத்துவதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. மாசுபட்ட குடிநீரை கால்நடைகள் பருகுவதால் கால்நடைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதோடு, வெடிவைத்து பாறைகள் தகர்க்கப்படுவதால் மாசு கலந்த புகை பரவி சுற்றுச்சூழலை மாசுபடுத்தி சுவாசப் பிரச்னை ஏற்படுகிறது.

கல்குவாரி அருகே வனப்பகுதி உள்ளதால் மான், மயில் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. வெடி சத்தத்தினால் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களில் பயிர் செய்துள்ள பயிர்களை சேதப்படுத்துகின்றன. எனவே கல்குவாரியை உடனடியாக நிறுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கல்குவாரியில் அதிக சத்தத்துடன் கூடிய வெடிகளை பயன்படுத்துவதாக புகார் appeared first on Dinakaran.

Tags : Calquary ,Sathyamangalam ,Puliyampatti ,Punjai ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் பண்ணாரி அருகே கடும்...