×

தொடர் மணல் கொள்ளையில் ஈடுபடும் ஆந்திர மாநில நபர்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு பொன்னையாற்றில் எல்லை பிரச்னை ஏற்படுத்தி

பொன்னை, ஆக. 31: பொன்னையாற்றில் தொடர் மணல் கொள்ளையில் ஈடுபடும் ஆந்திர மாநில நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காட்பாடி தாலுகா பொன்னையாற்றில், பொன்னை காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒட்டனேரி, பாலேங்குப்பம் கிராமங்களுக்கிடையே உள்ள பொன்னையாற்றில் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மர்ம நபர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் 10க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் தொடர் மணல் திருட்டில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் நேற்று ஆந்திரமாநிலத்தை சேர்ந்த நபர்கள் பொன்னை அடுத்த ஒட்டனேரி பகுதியில் ஜேசிபி இயந்திரம் மூலம் டிராக்டர்களில் மணல் கொள்ளையில் ஈடுபட்டனர். அப்போது பொன்னை காவல் துறையினர் சென்று மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்களை தடுத்து நிறுத்தி உள்ளனர்.

அதில் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் இது ஆந்திர மாநில எல்லை பகுதியாகும் எனவே தமிழக போலீசார் இங்கே வந்து விசாரணை நடத்த கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து, இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களிடம் இப்பகுதி மாநில எல்லைப்பகுதியாகும். மேலும், இது குறித்து விசாரணை மேற்கொண்டு அரசு உத்தரவு இருந்தால் தாங்கள் மணல் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அவர்களை எச்சரித்து அனுப்பினர். இதுகுறித்து இப்பகுதிமக்கள் கூறுகையில், ‘பொன்னை ஆற்றில் நடைபெறும் மணல் கொள்ளையால் நீர் நிலைகள் பாதிப்படைவதாகவும் கனிமவள திருட்டில் ஈடுபடுபவர்களிடம் பொதுமக்கள் சென்று கேட்டால் குண்டர்களை வைத்து மிரட்டுவதாகவும்’ தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தொடர் மணல் கொள்ளையில் ஈடுபடும் ஆந்திர மாநில நபர்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு பொன்னையாற்றில் எல்லை பிரச்னை ஏற்படுத்தி appeared first on Dinakaran.

Tags : Ponnaiyar ,Ponnai ,Dinakaran ,
× RELATED 10ம் நூற்றாண்டு கல்வெட்டுகள்...