×

லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் * அண்ணாமலையார் கோயிலில் கூட்டம் அலைமோதல் * 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் திருவண்ணாமலையில் ஆவணி மாத பவுர்ணமி

திருவண்ணாமலை, ஆக. 31: திருவண்ணாமலையில் ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். அண்ணாமலையார் கோயிலில் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். தென்னகத்துக்கு கயிலாயம் என போற்றப்படும் திருவண்ணாமலையில் அருள் தரும் அண்ணாமலையார் திருக்கோயில், பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகவும், நினைக்க முக்தித்தரும் திருத்தலமாக அமைந்திருக்கிறது. இங்கு, இறைவன் மலை (கிரி) வடிவில் எழுந்தருளி காட்சியளிப்பதால், இங்குள்ள அண்ணாமலையே சிவனாக பக்தர்களுக்கு அருள்தருகிறார். அதனால், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையை கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். அதனால், மாதந்தோறும் பவுர்ணமியன்று திருவண்ணாமலை நகரமே திருவிழா கோலமாக காட்சியளிக்கிறது.

இந்நிலையில், திருவண்ணாமலையில் ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று காலை 10.38 மணிக்கு தொடங்கி, இன்று காலை 8.13 மணிக்கு நிறைவடைகிறது. அதையொட்டி, நேற்று காலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். அதைத்தொடர்ந்து, நேற்று மாலை 4 மணிக்கு பிறகு கிரிவல பக்தர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்காக அதிகரித்தது. கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கிமீ தூரமும் பக்தர்கள் வெள்ளத்தால் நிறைந்திருந்தது. கிரிவலப்பாதையில் அமைந்துள்ள அஷ்டலிங்க சன்னதிகள், அடி அண்ணாமலை திருக்கோயில், இடுக்குப் பிள்ளையார் கோயில்களை வழிபட்டபடி பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

தன்வார்வ மற்றும் ஆன்மிக அமைப்புகளின் சார்பில், கிரிவலப் பாதையின் பல இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிலையில், ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு, அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. அதிகாலை ெதாடங்கி, இரவு 11 மணி வரை நடை அடைப்பு இல்லாமல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். பவுர்ணமி நாட்களில் சிறப்பு தரிசனம், முன்னுரிமை தரிசனம், கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, பொது தரிசனம் மட்டும் ராஜ கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டது.

பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், தரிசன வரிசையில் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. தரிசனம் முடிந்ததும், தெற்கு கோபுரம் எனப்படும் திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும், ஆந்திர மாநில அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பவுர்ணமி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதைெயாட்டி, திருவண்ணாமலை நகரின் முக்கிய சாலைகளில் 9 தற்காலிக பஸ் நிலையங்கள் செயல்பட்டன.

திருவண்ணாமலை நகருக்குள் சுற்றுலா கார், வேன் மற்றும் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. எனவே, நகரையொட்டி அமைந்துள்ள சாலையோரங்களிலும், புறவழிச்சாலைகளிலும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டன. மேலும், வேலூர் கன்டோன்மென்ட் மற்றும் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த வழித்தடங்களில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள், வேலூர் மற்றும் விழுப்புரத்தில் இருந்து சென்னை பீச் ஸ்டேஷன் வரை நீட்டிக்கப்பட்டன. எனவே, சிறப்பு ரயில்களிலும் கூட்டம் அலைமோதியது. மேலும், பவுர்ணமியை முன்னிட்டு எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் * அண்ணாமலையார் கோயிலில் கூட்டம் அலைமோதல் * 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் திருவண்ணாமலையில் ஆவணி மாத பவுர்ணமி appeared first on Dinakaran.

Tags : Vidia ,Vidia Krivalam ,Annamalaiyar Temple ,Tiruvannamalai ,Thiruvannamalai ,Krivalam ,Avani ,Vidya ,
× RELATED (திமலை) அண்ணாமலையார் கோயிலில்...