×

ஒகேனக்கல் 2ம் கட்ட கூட்டுக் குடிநீர் திட்டத்தை முதல்வர் நிறைவேற்றுவார்

தர்மபுரி, ஆக.31: தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்கும் விதமாக, ஒகேனக்கல் 2ம் கட்ட கூட்டுக்குடிநீர் திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நிறைவேற்றுவார் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்தார். தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், தளவாய்அள்ளியில், தேசிய கிராம சுயாட்சித் திட்டத்தின் கீழ் ₹23.56 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேற்று திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து, லளிகம் ஊராட்சியில் ₹17.64 லட்சம் மதிப்பிலும், நார்த்தம்பட்டியில் ₹23.57 லட்சம் மதிப்பிலும் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடங்களை அமைச்சர் திறந்து வைத்தார். பின்னர், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் சாந்தி தலைமை வகித்தார்.

இதில், பல்வேறு துறைகளின் சார்பில், 225 பயனாளிகளுக்கு ₹60.47 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். விழாவில், அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பேசியதாவது:
தர்மபுரி மாவட்டத்தில் திமுக எம்எல்ஏவும் இல்லை, அமைச்சரும் இல்லை. இதனால் தர்மபுரி மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக என்னை முதல்வர் நியமித்து, பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் முறையாக பொதுமக்களுக்கு சென்று சேர்வதை உறுதிபடுத்தும் பணியை வழங்கியுள்ளார். நான் பொறுப்பு அமைச்சராக வந்தவுடனே, ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஒரு நகராட்சி, 10 பேரூராட்சியில் திமுக வெற்றி பெற்றது. தர்மபுரி மாவட்டத்திற்கு தொடர்ச்சியாக வருகை தந்து, பல்வேறு அரசு திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தும், நலத்திட்ட உதவிகளை வழங்கியும் வருகிறோம். அடுத்த முறை ஒரு அமைச்சரை உருவாக்கும் வகையில், திமுகவினர் உழைக்க வேண்டும்.

மக்கள் பணிகளை முறையாக மேற்கொண்டால் மட்டுமே, தொடர்ச்சியாக அவர்களது அங்கீகாரத்தை பெற முடியும். கட்டணமில்லா பஸ் பயண திட்டத்தின் மூலம், மகளிரின் பஸ் பயணச்செலவு குறைந்து, சேமிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முகாமை, தொப்பூரில் முதல்வர் தொடங்கி வைத்தார். தற்போது, விண்ணப்பத்தின் உண்மைத்தன்மை குறித்து அலுவலர்கள் முறையான ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளான வரும் செப்டம்பர் 15ம்தேதி, மகளிருக்கு ₹1000 உரிமைத்தொகை வழங்கி தொடங்கி வைக்க உள்ளார்.
பொதுமக்களின் நலனுக்கென முதல்வர் செயல்படுத்தும் அனைத்து திட்டங்களையும் பொதுமக்கள் முறையாக அறிந்து பயன்பெற வேண்டும். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினால் நிறைவேற்றப்பட்டது. தற்போது 2ம் கட்ட ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டமும் அவரால் நிறைவேற்றப்பட உள்ளது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்ரமணி, முன்னாள் அமைச்சர் பழனியப்பன், நல்லம்பள்ளி தாசில்தார் ஆறுமுகம், பிடிஓ.,க்கள் ஆறுமுகம், லோகநாதன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் தனலட்சுமி சரவணன், பரிமளா மாதேஸ்குமார், கலைச்செல்வன், சிவாடி ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம், கைம்பெண் நலவாரிய உறுப்பினர் ரேணுகா தேவி, திமுக வர்த்தகர் அணி மாநில துணை செயலாளர் தர்மச்செல்வன், பொருளாளர் தங்கமணி, ஒன்றிய செயலாளர்கள் வைகுந்தம், ஏஎஸ்.சண்முகம், மாணவரணி பெரியண்ணன், வக்கீல் அசோக்குமார் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post ஒகேனக்கல் 2ம் கட்ட கூட்டுக் குடிநீர் திட்டத்தை முதல்வர் நிறைவேற்றுவார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Dharmapuri ,Krishnagiri ,Okenakal 2nd phase ,Okenakal ,Minister ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை