×

காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஆலோசனை மும்பையில் இன்று ‘இந்தியா’ கூட்டணி கூட்டம்: சோனியா, ராகுல், முதல்வர் மு.க.ஸ்டாலின், சரத்பவார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

மும்பை: பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இந்தியா கூட்டணியின் 2 நாள் ஆலோசனை கூட்டம் மும்பையில் இன்று தொடங்குகிறது. இதில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட 28 கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை நடத்தி, பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து முடிவெடுக்க உள்ளனர். மக்களவை தேர்தலில் பாஜவை எதிர்கொள்ள, காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கி உள்ளன.

இக்கூட்டணியின் முதல் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூன் மாதம் பீகார் தலைநகர் பாட்னாவிலும், 2வது கூட்டம் பெங்களூருவிலும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, 3வது ஆலோசனை கூட்டம் மும்பையில் இன்றும், நாளையும் நடக்க உள்ளது. இதில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9.40 மணிக்கு சென்னையில் இருந்து மும்பைக்கு விமானத்தில் செல்ல உள்ளார்.

அடுத்த ஆண்டு நடக்க வேண்டிய மக்களவை தேர்தலை, ஆளும் பாஜ கட்சி முன்கூட்டியே இந்தாண்டு இறுதியில் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசியும் நிலையில், மும்பை ஆலோசனை கூட்டம் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. குறிப்பாக, கூட்டணிக்கான பொதுவாக குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்குவதற்கும், நாடு முழுவதும் பாஜ அரசின் தோல்வி குறித்து போராட்டங்கள் நடத்துவதற்கும், கூட்டு பிரசார உத்திகளை வகுப்பது குறித்தும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொகுதி பங்கீட்டில் உள்ள பிரச்னைகள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இதற்காக முக்கிய குழு ஒன்று அறிவிக்கப்படவும் வாய்ப்புள்ளது. அந்த குழு தலைநகர் டெல்லியில் இருந்து செயல்படும் என கூட்டணி கட்சி தலைவர்கள் கூறி உள்ளனர். இதுதவிர கூட்டணியில் கட்சிகளை ஒருங்கிணைக்க, ஒருங்கிணைப்பு குழுவும், அதற்கு தலைவரும், கூட்டணிக்கு தலைமை வகிக்க தலைவர் ஒருவரும் நியமிக்கப்பட உள்ளனர். ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும், தலைவர் பதவிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாவும் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கூட்டணிக்கான சின்னம் வெளியிடப்பட உள்ளது. மும்பை கூட்டம் தொடர்பாக சிவசேனா கட்சி தலைவர்கள் உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர் மும்பையில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘மும்பை கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். ஒட்டுமொத்த நாட்டையும் தங்கள் குடும்பமாக கருதும் எதிர்க்கட்சிகள் பாரத மாதாவை காக்க ஒன்றிணைந்துள்ளன. எங்களின் கொள்கைகள் வெவ்வேறாக இருக்கலாம், ஆனால் நோக்கம் ஒன்றே.

இந்த நாட்டையும், ஜனநாயகத்தையும் காக்க வேண்டுமென்ற ஒரே நோக்கத்தில் ஒன்றிணைந்துள்ளோம். எங்கள் கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக பல முகங்கள் உள்ளன. ஆனால் பாஜவில் மோடியை தாண்டி வேறு யாராவது உண்டா? பிரதமர் மோடிக்கு சகோதரிகள் மீது திடீர் பாசம் வந்துள்ளது. இந்த 9 ஆண்டில் ஒருமுறை கூட ரக்‌ஷா பந்தன் வரவில்லையா? இந்தியா கூட்டணி வளர வளர, காஸ் சிலிண்டரை இலவசமாக கூட கொடுப்பார்கள். அவர்கள் எதைச் செய்தாலும் அதைப் பற்றி கவலையில்லை. மக்கள் புத்திசாலிகள், அவர்கள் அனைத்தையும் அறிவார்கள்’’ என்றார்.

மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் அளித்த பேட்டியில், ‘‘மும்பை கூட்டத்தில் இந்தியா கூட்டணி ‘பாஜக சலே ஜாவோ (பாஜக வெளியேறு)‘ என்ற முழக்கத்தை உருவாக்கும்’’ என்று கூறியுள்ளார். சமீபகாலமாக பிரதமர் மோடி, சுதந்திர போராட்டத்தில் ‘வெள்ளையனே வெளியேறு’ என முழங்கியதைப் போல, எதிர்க்கட்சிகளை குறிவைத்து ‘ஊழல் வெளியேறு’ என பேசி வருகிறார். இதற்கு பதிலடி தரும் வகையில் ‘பாஜ வெளியேறு’ என்ற முழக்கத்தை இந்தியா கூட்டணி அறிவிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் மனோஜ் ஜா கூறுகையில், ‘‘தற்போதைய ஆட்சியின் பிற்போக்கு கொள்கைகளுக்கு முற்போக்கான மாற்றீட்டை வழங்குவதற்கான தெளிவான திட்ட வரைபடத்துடன் மும்பை கூட்டம் அமையும்’’ என கூறி உள்ளார். இன்றைய கூட்டத்தில் இந்தியா கூட்டணியில் மேலும் சில புதிய கட்சிகள் இணைய இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

* பாஜ கூட்டணி கட்சிகளும் வர உள்ளன
இந்தியா கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய இருப்பதாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அலோக் சர்மா அளித்த பேட்டியில், ‘‘பாஜ தனது தேசிய ஜனநாயக கூட்டணியில் 38 கட்சிகள் இருப்பதாக கூறி வருகிறது. அதில் உள்ள சுமார் 5 கட்சிகள் இந்தியா கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இன்னும் பல கட்சிகள் இந்தியா கூட்டணிக்கு வர உள்ளன. புதிதாக இணையும் கட்சிகள் குறித்து அடுத்த கூட்டத்தில் அறிவிக்கப்படும்’’ என்றார்.

* பிரதமர் பதவிக்காக சேரவில்லை: ஆம் ஆத்மி
ஆம் ஆத்மி கட்சி எம்பி ராகவ் சதா நேற்று அளித்த பேட்டியில், ‘‘பிரதமர் பதவிக்காக இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி சேரவில்லை. பிரதமர் போட்டியில் அரவிந்த் கெஜ்ரிவால் கிடையாது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசு மக்கள் மீது திணித்துள்ள வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பணவீக்கம் போன்றவற்றின் தீமைகள் மற்றும் கொடுமைகளில் இருந்து நாட்டை விடுவிப்பதற்கும், சிறந்த இந்தியாவை உருவாக்குவதற்கும்தான் இந்தியா கூட்டணியில் இணைந்துள்ளோம்’’ என்றார். முன்னதாக அக்கட்சியின் தலைமை தேசிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கார், கெஜ்ரிவால் பிரதமர் வேட்பாளராக களமிறக்க தகுதியானவர் என கூறியதைத் தொடர்ந்து ராகவ் சதா பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.

* பாஜவுடன் பகுஜன் சமாஜ் கூட்டணியா?
மும்பையில் நேற்று பேட்டி அளித்த சரத்பவார், பகுஜன் சமாஜ் கட்சி பாஜவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக குற்றம்சாட்டினார். இதற்கிடையே, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி சேர அனைத்து கட்சிகளும் ஆர்வமாக உள்ளன. ஆனால், பாஜவின் தேசிய ஜனநாயக கூட்டணியிலோ, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியிலோ நாங்கள் இணைவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஏனெனில் இரு கூட்டணிகளும் ஏழைகளுக்கு எதிரான, சாதிவெறி, வகுப்புவாத, பணக்காரர்களுக்கு ஆதரவான, முதலாளித்துவ கொள்கைகளை கொண்டிருக்கும் பெரும்பாலான கட்சிகளை கொண்டுள்ளன. அதற்கு எதிராக பகுஜன் சமாஜின் போராட்டம் தொடரும். எனவே பொய் செய்திகளை வெளியிட வேண்டாம்’’ என கூறி உள்ளார்.

The post காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஆலோசனை மும்பையில் இன்று ‘இந்தியா’ கூட்டணி கூட்டம்: சோனியா, ராகுல், முதல்வர் மு.க.ஸ்டாலின், சரத்பவார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Congress ,DMK ,India ,Mumbai ,Sonia ,Rahul ,Chief Minister ,M.K.Stalin ,Sarathpawar ,India Alliance ,Sarath Pawar ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரசார் முற்றுகை போராட்டம்