×

கர்நாடகாவில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 நிதியுதவி வழங்கும் திட்டம் துவக்கம்: ராகுல்காந்தி தொடங்கி வைத்தார்

மைசூரு: கர்நாடக காங்கிரஸ் அரசு செய்துள்ள மக்கள் பணிகள் நாடு முழுவதும் பிரதிபலிக்கும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பெருமிதமாக தெரிவித்தார். கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலின் போது 5 இலவச உத்தரவாத திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு முதல்வராக சித்தராமையா பதவியேற்றார். அதன்பின்னர் மகளிருக்கு அரசு பஸ்சில் இலவச பயணம், குடும்ப அட்டைதாரர்களுக்கு 10 கிலோ இலவச அரிசி, 200 அலகு இலவச மின்சாரம் ஆகிய மூன்று திட்டங்கள் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுவிட்டது.

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 நிதியுதவி வழங்கும் கிரகலட்சுமி திட்டத்தை மைசூரு மகாராஜா மைதானத்தில் நேற்று நடந்த விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி துவங்கி வைத்தார். விழாவில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், கர்நாடக அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த திட்டத்தின் மூலம் 1.1 கோடி மகளிர் பயன்பெறுகிறார்கள். இதையடுத்து ராகுல்காந்தி ேபசுகையில், ‘ காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றியுள்ளது.

நாங்கள் ஒருபோதும் பொய்யான வாக்குறுதி அளிப்பதில்லை. இந்த 5 உத்தரவாதங்களும் வெறும் திட்டங்கள் கிடையாது. இது அரசின் நிர்வாக மாடல். ஒன்றியத்தில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி டெல்லியில் அமர்ந்து கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே ஆட்சி நடத்துகிறது. ஆனால் காங்கிரஸ் ஏழை மக்களின் நலனுக்காக பணியாற்ற வேண்டும் என்று நினைக்கிறது. கிரகலட்சுமி திட்டத்துக்காக ரூ.17,500 கோடி நடப்பு நிதியாண்டில் ஒதுக்கப்பட்டுள்ளது’ என்றார். முதல்வர் சித்தராமையா கூறுகையில், ‘5வது இலவச திட்டமான வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.3000 மற்றும் டிப்ளமா மாணவர்களுக்கு ரூ.1500 நிதியுதவி திட்டம் டிசம்பர் அல்லது ஜனவரியில் அமல்படுத்தப்படும் என்றார்.

The post கர்நாடகாவில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 நிதியுதவி வழங்கும் திட்டம் துவக்கம்: ராகுல்காந்தி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Rahul Gandhi ,Mysuru ,Former ,Congress ,president ,Karnataka Congress government ,
× RELATED தோல்வி பயத்தில் மோடி மேடையில் கண்ணீர்...