லண்டன்: இஸ்ரேலில் இருந்து வாங்கிய புதிய சாப்ட்வேர் மூலம் 140 கோடி இந்தியர்களையும் உளவு பார்க்கும் வேலையை மோடி அரசு தொடங்கி உள்ளதாக லண்டன் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சாப்ட்வேரில் இருந்து இமெயில், வாட்ஸ்அப், மெசேஜ், போன் கால் உள்பட எதுவும் தப்பாது, அத்தனையும் கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்தியாவில் 2019ம் ஆண்டு பெகாசஸ் மென்பொருள் மூலம் எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், முக்கிய தொழில் அதிபர்களை பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ அரசு உளவு பார்ப்பதாகவும், அனைவரது செல்போனும் ஒட்டுக்கேட்கப்படுவதாகவும் பரபரப்பு புகார் எழுந்தது.
இதை ஒன்றிய அரசு அப்போது மறுத்தது. இருப்பினும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது செல்போன் ஒட்டுக்கேட்கப்படுவதாக தெரிவித்தார். 2021ம் ஆண்டும் இந்த குற்றச்சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து பெகாசஸ் ஸ்பைவேர் பற்றி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது, அதில் ஒரு இணைப்பு மூலம் மொபைல் போன்களை ஹேக் செய்து மின்னஞ்சல்கள், அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை ரகசியமாக பதிவு செய்ததாக கூறியது.
நாடாளுமன்ற தேர்தல் தற்போது நெருங்கி வரும் நேரத்தில் இஸ்ரேலில் இருந்து வாங்கிய இன்னொரு சாப்ட்வேர் மூலம் உளவுபார்க்கும் வேலையை மோடி அரசு தொடங்கி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த முறை முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் தொழில் அதிபர் என்று இல்லாமல் ஒட்டுமொத்தமாக நாட்டில் உள்ள 140 கோடி மக்களையும் உளவு பார்க்கும் பணியை மோடி அரசு தொடங்கி இருப்பதாக லண்டனில் இருந்து வெளியாகும் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை செய்திகளை வெளியிட்டு உள்ளது.
140 கோடி இந்தியர்களின் அத்தனை செல்போன் அழைப்புகள், மெசேஜ், வாட்ஸ்அப் கால், இமெயில், இன்டர்நெட் உபயோகம் உள்ளிட்ட அத்தனையும் திருடப்படுகிறது. இதற்காக அதிகம் அறியப்படாத இஸ்ரேலிய சாப்ட்வேர் குழுக்கள் கடலுக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள கேபிள் கரையை தொடும் இடத்தில் அமைக்கப்பட்டுளள கேபிள் நிலையங்களில் நிறுவப்பட்ட கண்காணிப்பு உபகரணங்களில் இருந்து இந்த தகவல்களை திருடிக்கொள்வதாகவும், அத்தனை அழைப்புகளையும் பதிவு செய்வதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிறநாடுகளுடன் தொடர்பு கொள்ள கடலுக்கு அடியில் போடப்பட்டுள்ள கேபிள்கள் வாயிலாக இஸ்ரேலிய உளவு சாப்ட்வேர் நிறுவனங்கள் இந்தியா முழுவதும் வசிக்கும் 140 கோடி மக்களின் அத்தனை தகவல்களையும் திருடி, மோடி அரசிடம் ஒப்படைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் அத்தனை பேரின் தகவல்களும், போன் அழைப்புகளும் சல்லடையாக சலிக்கப்பட்டு, தேவைக்கேற்ப இந்திய பாதுகாப்பு நிறுவனங்களுக்கு வழங்க வசதியாக புதிய மென்பொருள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 140 கோடி பேரின் தகவல்களையும் தேடவும், நகல் எடுக்கவும், அதை பதிவு செய்யவும், பாதுகாக்கவும் தேவையான வசதிகள் இந்திய அரசுக்கு இஸ்ரேல் மென்பொருள் நிறுவனத்தால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தகவல் தொடர்பு சந்தையின் வளர்ச்சியின் வேகம், சக்திவாய்ந்த கண்காணிப்பு கருவிகளை விற்க போட்டியிடும் நிறுவனங்களின் தொழில்துறை இதற்கு உதவி செய்துள்ளது. வீகியர், காக்னிட், செப்டியர் ஆகிய இஸ்ரேல் நிறுவனங்கள் தான் இந்த வேலையை மோடி அரசுக்காக செய்து கொடுக்கின்றன. இந்த நிறுவனங்களின் விளம்பரங்களிலும் இதுபோன்ற வேலைகளை செய்வதாக விளம்பரப்படுத்தி உள்ளது. செப்டியரின் விளம்பர வீடியோவின்படி, அதன் தொழில்நுட்பம் மூலம் குரல் பதிவு, மெசேஜ், வாட்ஸ்அப் கால், மெசேஜ், இமெயில் தகவல் ஆகியவற்றை தனித்தனியாக ஆகியவற்றைப் பிரித்தெடுக்கிறது. மற்றொரு இஸ்ரேலிய நிறுவனமான காக்னிட் இந்தியாவில் கண்காணிப்பு தயாரிப்புகளை வழங்குகிறது.
2021ம் ஆண்டில் அட்லாண்டிக் கவுன்சிலால் எச்சரிக்கப்பட்ட நிறுவனங்களில் செப்டியரும் ஒன்றாகும். தற்போது அந்த நிறுவனத்துடன் இந்திய மக்கள் அனைவரையும் உளவு பார்க்க மோடி அரசு கைகோர்த்துள்ளதாக பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது. உலகெங்கிலும் உள்ள நாடுகளில் நீர்மூழ்கிக் கப்பல் கேபிள் திட்டங்களில் பணிபுரிந்த 4 பேர், இந்தியா தற்போது 140 கோடி பேரின் தகவல்களை திரட்ட கொடுத்துள்ள அனுமதி அசாதாரணமானது என்று கூறியுள்ளனர். இந்தஅனுமதி மூலம் தொலை தொடர்பு நிறுவனங்கள் வெளிப்படையாகக் கண்காணிப்பு உபகரணங்களை கேபிள் லேண்டிங் ஸ்டேஷன்கள் மற்றும் டேட்டா சென்டர்களில் நிறுவ அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த இஸ்ரேல் நிறுவனங்களின் அனைத்து கண்காணிப்பு கோரிக்கைகளும் நாட்டின் உள்துறை செயலாளரால் அங்கீகரிக்கப்பட்டு, இந்த கண்காணிப்பு கண்டிப்பாக கட்டுப்படுத்தப்படுவதாக மோடி அரசு தெரிவித்து உள்ளது. ஆனால் இது வெற்று கட்டுப்பாடு.
இதன் மூலம் எந்தவித பயனும் இல்லை. இந்திய மக்கள் அனைவரின் தகவல்களும் திருடப்படுவது உறுதி என்று இந்த கேபிள் திட்டங்களில் பணிபுரிந்தவர்கள் தெரிவித்து உள்ளனர். இந்தியாவில் 140 கோடி பேரின் தகவல்களை திருட இஸ்ரேல் நாட்டின் செப்டியர் நிறுவனம், தன்னுடைய சட்டப்பூர்வ இடைமறிப்பு தொழில்நுட்பத்தை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா மற்றும் சிங்கப்பூரின் சிங்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு குழுக்களுக்கு விற்றுள்ளது. இதனால் இஸ்ரேல் உளவு நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள அத்தனை பேரையும் உளவு பார்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. லண்டன் பைனான்சியல் டைம்ஸ்சில் வெளியான இந்த தகவல் நாடு முழுவதும் உள்ள அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.
* 2011ம் ஆண்டில் இந்திய உள்துறை அமைச்சகம், ஒவ்வொரு மாதமும் 7,500 முதல் 9,000 பேரின் செல்போன்களை அரசு காரணத்திற்காக ஒட்டுகேட்பதாக தெரிவித்தது.
* பைனான்சியல் டைம்ஸ்சில் வெளியான செய்தி மூலம் இஸ்ரேலிய தொழில்நுட்ப நிறுவனங்களான காக்னிட் மற்றும் செப்டியர்களிடமிருந்து சக்திவாய்ந்த கண்காணிப்பு கருவிகளை வாங்குவதன் மூலம் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தனது குடிமக்களை உளவு பார்க்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளது.
* 2021 ஆம் ஆண்டில் பல நாடுகளில் உள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படும் பல நிறுவனங்களில் காக்னிட்டும் இருப்பதாக மெட்டா குற்றம் சாட்டியது.
* உகாண்டா, ருவாண்டா நாடுகள் போல் இந்தியாவிலும் தற்ேபாது அனைத்து மக்களின் செல்ேபான்களும் ஒட்டுமொத்தமாக உளவு பார்க்கப்படுவதாக பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்து உள்ளது.
ஒன்றிய அரசு பதில் அளிக்க மறுப்பு: எங்கள் நாட்டு சட்டதிட்டப்படி, ஒப்பந்தப்படி உளவு மென்பொருள் விற்பனை செய்யப்பட்டதாக செப்டியர் நிறுவனம் தகவல் தெரிவித்து உள்ளது. ஆனால் இந்திய அரசு மற்றும் காக்னிட், வீகியர், ரிலையன்ஸ் ஜியோ, சிங்டெல் ஆகிய நிறுவனங்கள் இதுபற்றிய கேள்விக்கு எந்தவித பதிலும் அளிக்கவில்லை என்று பைனான்சியல் டைம்ஸ்தெரிவித்து உள்ளது.
ஒப்புக்கொண்டது வோடபோன்: இஸ்ரேல் உளவு நிறுவனங்களிடம் இருந்து உளவு மென்பொருள் வாங்கியதாக வோடபோன் நிறுவனம் ஒப்புக்கொண்டதாக பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில்,’ ஒன்றிய அரசின் கடும் நிபந்தனைகள் அடிப்படையில் உளவு நிறுவனத்திடம் இருந்து லைசென்ஸ் பெற்றோம். இந்த நிபந்தனை காலம் எப்போது வேண்டுமானலும் மாறலாம்’ என்று தெரிவித்ததாக குறிப்பிட்டு உள்ளது.
The post நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் 140 கோடி இந்தியர்களையும் உளவு பார்க்கிறது மோடி அரசு: இஸ்ரேலில் இருந்து புதிய சாப்ட்வேர் அறிமுகம் appeared first on Dinakaran.

