×

தண்டராம்பட்டு அருகே அதிகாலை பரபரப்பு அம்மன் கோயிலில் திருடியவருக்கு தர்ம அடி: 4 ஆண்டுகளுக்கு முன்பு சிலை திருடியதும் அம்பலம்

தண்டராம்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த நாவக்கொல்லை கிராமத்தில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று பூஜை முடிந்த பின்னர் பூசாரி கோயிலை பூட்டிவிட்டு சென்றார். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் கோயிலில் பூட்டு உடைக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் கோயிலுக்கு அருகில் வசிக்கும் தேவராஜ் என்பவர் எழுந்து வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது ஒரு மர்ம ஆசாமி கோயிலின் பூட்டை உடைத்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே தேவராஜ், அக்கம்பக்கம் வீட்டில் உள்ளவர்களை எழுப்பி அழைத்து வந்தார். அதற்குள் மர்ம ஆசாமி கோயிலுக்குள் சென்று அம்மன் கழுத்தில் இருந்த 9 கிராம் தாலி, உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம் ஆகியவற்றை மூட்டைக்கட்டி கொண்டிருந்தான். உடனே பொதுமக்கள், மர்ம ஆசாமியை சுற்றி வளைத்து கையும், களவுமாக மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

இது குறித்து தானிப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் இருந்து மர்ம ஆசாமியை மீட்டு விசாரித்தனர். அதில் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் கிராமத்தை சேர்ந்த சுந்தரவேல் (45) என்பது தெரிய வந்தது. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கூட்டாளிகள் 3 பேருடன் இதே கோயிலுக்கு வந்து 110 கிலோ எடையுள்ள வெண்கல அம்மன் சிலை மற்றும் 2 கிலோ வெள்ளி கிரீடம், உண்டியல் பணத்தை திருடி சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த சுந்தரவேலை மீட்டு சிகிச்சைக்காக தானிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சுந்தரவேலை கைது செய்தனர்.

The post தண்டராம்பட்டு அருகே அதிகாலை பரபரப்பு அம்மன் கோயிலில் திருடியவருக்கு தர்ம அடி: 4 ஆண்டுகளுக்கு முன்பு சிலை திருடியதும் அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Amman temple ,Dandarambattu ,Ambalam ,Thiruvandamalai District ,Dandarampattu ,Mariamman ,Navakgol village ,Pooja ,Ikhoil ,
× RELATED காமாட்சி அம்மன் கோயிலில் ₹37.12 லட்சம் உண்டியல் காணிக்கை