×

ஓணம் விடுமுறை கொண்டாட்டம் களைகட்டிய சூட்டிங் மட்டம் பகுதி

 

ஊட்டி, ஆக.30: ஓணம் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் சூட்டிங் மட்டம் பகுதி களைகட்டியுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் நகரில் உள்ள சுற்றுலா தளங்கள் மட்டும் பார்ப்பது மட்டுமின்றி நகருக்கு வெளியே உள்ள சுற்றுலா தளங்களான அவலாஞ்சி, பென்ஸ்டாக் காட்சி முனை, எமரால்டு அணை, சூட்டிங் மட்டம், ஊசிமலை போன்ற சுற்றுலா தளங்களை பார்க்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதில் ஊட்டி-கூடலூர் நெடுஞ்சாலையில் சூட்டிங்மட்டம் பகுதி உள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த புல்வெளிகள் காணப்படும் இந்த பகுதிகளில் தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டுள்ளன.

இதனால் இப்பகுதியை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவது வழக்கம். இந்நிலையில் ஓணம் பண்டிகை விடுமுறை காரணமாக அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் ஊட்டியில் உள்ள ஓட்டல்கள், காட்டேஜ்களில் அறைகள் நிரம்பியுள்ளன. மேலும், ஓணம் விடுமுறை நாளான நேற்று இதமான காலநிலை நிலவிய சூட்டிங் மட்டம் பகுதிகளில், சுற்றுலா பயணிகள் புல்வெளிகளில் விளையாடி மகிழ்ந்ததுடன் புகைப்படங்கள் எடுத்தனர். இதேபோல் மற்ற சுற்றுலா தலங்களிலும் கூட்டம் காணப்பட்டது.

The post ஓணம் விடுமுறை கொண்டாட்டம் களைகட்டிய சூட்டிங் மட்டம் பகுதி appeared first on Dinakaran.

Tags : Onam holiday ,Onam ,Nilgiri district… ,Dinakaran ,
× RELATED நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள் உதகை செல்ல இ-பாஸ் தேவையில்லை