×

300 கிலோ ஹெராயின், ஏ.கே.47 துப்பாக்கி, 1000 தோட்டாக்கள் கடத்திய வழக்கு: நடிகை வரலட்சுமி நேரில் ஆஜராக என்ஐஏ சம்மன்

சென்னை: கேரளா மாநிலம் விழிஞ்சம் கடற்பகுதியில் படகில் சட்டவிரோதமாக பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 300 கிலோ ஹெராயின், ஏ.கே.47 துப்பாக்கி மற்றும் 1000 தோட்டாக்கள் கடத்திய வழக்கில், கைதான தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த ஆதிலிங்கம் அளித்த வாக்குமூலத்தின்படி, பிரபல நடிகையான வரலட்சுமிக்கு என்ஐஏ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது . இந்திய கடலோர எல்லையான லட்சத்தீவு மற்றும் கேரளா மாநிலம் விழிஞ்சம் கடற்பகுதிக்கு இடையே கடந்த 2021ம் ஆண்டு மீன்பிடி படகு ஒன்றை கடலோர பாதுகாப்பு படையினர் வழிமறித்து ஆய்வு செய்தனர்.

அப்போது படகில் மிளகாய் பொடிக்கு இடையே மறைத்து வைத்திருந்த பல கோடி மதிப்புள்ள 300 கிலோ ஹெராயின், 5 ஏ.கே.47 துப்பாக்கிகள், 1000 தோட்டாக்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே கடலோர பாதுகாப்பு படையினர் மீன்பிடி படகில் இருந்த 6 பேரை பிடித்து திருவனந்தபுரத்தில் உள்ள என்ஐஏ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட 6 பேரில் ஒருவர், விடுதலை புலிகள் இயக்கத்தின் உளவுப்பிரிவில் பணியாற்றி வந்த சற்குணம்(எ)சபேசன்(47) என்பதும், இவர் தனது ஆதரவாளர்களுடன் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக ஆயுதம் மற்றும் போதை பொருட்கள் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

அதைதொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் சற்குணம் உள்பட 6 பேர் மீது சட்டவிரோத ஆயுதம் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் சற்குணம் அளித்த தகவலின்படி, என்ஐஏ அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூலை 20ம் தேதி சென்னை, திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாம் என தமிழகம் முழுவதும் மொத்தம் 24 இடங்களில் சோதனை நடத்தி 58 செல்போன்கள், 68 சிம்கார்டுகள், 2 பென் டிரைவ், 1 ஹார்ட் டிஸ்க், 2 லேப்டேப், 8 வைபை மோடம்கள், வெளிநாட்டு பணம் பரிவர்த்தனை செய்த ஆவணங்கள், 1 இலங்கை பாஸ்போர்ட், ரூ.80 லட்சம் பணம், 9 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்தனர். பின்னர் போதை பொருள் கடத்தல் மற்றும் ஆயுத கடத்தல் வழக்கில் 10 இலங்கை நாட்டை சேர்ந்தவர்கள் என மொத்தம் 13 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான குணசேகரனின் பினாமியாக இலங்கையை சேர்ந்த ஆதிலிங்கம்(எ) லிங்கம் இருப்பது ஆவணங்கள் மூலம் உறுதியானது.

அதேநேரம், போதை பொருள் கடத்தல் வழக்கில் ஆதிலிங்கத்தின் உறவினர் பாலாஜி என்பவரும் நேரடியாக ஈடுபட்டதும் தெரியவந்தது. சோதனையில் கிடைத்த ஆவணங்கள்படி பல நூறு கோடி ரூபாய் வெளிநாடுகளில் இருந்து ஆதிலிங்கத்திற்கு வந்ததும். அந்த பணத்தை கிரிப்டோ கரன்சி மற்றும் சினிமா முதலீடுகள் மூலம் மீண்டும் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு பணத்தை ஆதிலிங்கம் மூலம் அனுப்பியதாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் ஒன்றரை ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் சோதனையில் கிடைத்த ஆவணங்கள்படி, சென்னை ேமடவாக்கத்தில் பிரபல சினிமா பைனான்சியராக வலம் வந்து கொண்டிருந்த இலங்கையை சேர்ந்த தடை செய்யப்பட்ட அமைப்பின் ஆதிலிங்கத்தை அதிரடியாக கடந்த வாரம் போதை பொருள் மற்றும் ஆயுத கடத்தல் வழக்கில் 14வது நபராக கைது ெசய்தனர்.

அவரது வீட்டில் இருந்து வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் பறிமுல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட ஆதிலிங்கத்தை என்ஐஏ அதிகாரிகள் கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள என்ஐஏவின் தென்மண்டல தலைமை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இலங்கையை சேர்ந்த ஆதிலிங்கம் அகதியாக தமிழகத்திற்கு வந்துள்ளார். சினிமா பிரபலங்கள் தொடர்பு மூலம் சினிமா துறையில் ஆதிலிங்கம் நுழைந்துள்ளார். அதன் பிறகு பிரபல தமிழ் நடிகையான வரலட்சுமியின் நட்பு ஆதிலிங்கத்திற்கு கிடைத்தது. வரலட்சுமியிடம் நம்பிக்கையான நபராக இருந்ததால் ஆதிலிங்கத்தை அவர் தனது உதவியாளராக பணி அமர்த்தினார். அதன் பிறகு தான் ஆதிலிங்கம், போதை பொருள் கடத்தல் மன்னன் குணசேகரனின் பினாமியாக போதை பொருள் மற்றும் ஆயுதம் கடத்தலில் கிடைத்த பல கோடி ரூபாயை சினிமாவில் முதலீடு ெசய்துள்ளார்.

நடிகை வரலட்சுமியின் உதவியாளர் என்ற பெயரில் ஆதிலிங்கம் சினிமா துறையில் குணசேகரனின் கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றியுள்ளார். ஒரு கட்டத்தில் ஆதிலிங்கம் சிறிய சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமாவுக்கு பெரிய அளவில் செட் அமைக்கும் நிறுவனங்களுக்கும் பல கோடி ரூபாய் பணம் பைனான்ஸ் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆதிலிங்கம் சினிமா பைனான்சில் பெரிய அளவில் உயர்ந்ததால், அவர் நடிகை வரலட்சுமியிடம் இருந்து விலகியுள்ளார். நேரடியாக விலகினாலும், அவருடன் தொடர்பில் இருந்து வந்தது விசாரணை மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் உறுதியானது. போதை பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பல நூறு கோடி பணத்தை பாதுகாக்கும் வகையில், ஆதிலிங்கம் தனியாக கட்சி ஒன்று தொடங்கியுள்ளார். அந்த கட்சிக்கு தலைவராக குணசேகரனும், பொதுச்செயலாளராக ஆதிலிங்கமும் இருந்து வந்ததும் விசாரணை மூலம் தெரியவந்தது.

அதேநேரம் ஆதிலிங்கம் கைது செய்யப்படுவதற்கு முன்பு நடிகை வரலட்சுமியின் தாய் சாயாவிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது, தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த ஆதிலிங்கம் யார் மூலம் உங்கள் மகளிடம் அறிமுகமானார். உதவியாளராக இருந்த ஆதிலிங்கத்திற்கு குறுகிய காலத்தில் பல கோடி ரூபாய் எப்படி வந்தது. இதுகுறித்து ஆதிலிங்கம் வரலட்சுமியிடம் எப்போதாவது தெரிவித்துள்ளாரா, ஆதிலிங்கம் சர்வதேச போதை பொருள் கடத்தல் நபர்கள் யாரையாவது வரலட்சுமிக்கு அறிமுகம் செய்துள்ளாரா என்று விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. பிரபல நடிகையான வரலட்சுமிக்கு கொச்சியில் உள்ள என்ஐஏ தென் மண்டல தலைமை அலுவலகம் சம்மன் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.தற்போது நடிகை வரலட்சுமி தனது தாய் சாயாவுடன் வசித்து வருகிறார். சர்வதேச போதை பொருள் கடத்தல் வழக்கில், பிரபல தமிழ் நடிகை ஒருவருக்கு என்ஐஏ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post 300 கிலோ ஹெராயின், ஏ.கே.47 துப்பாக்கி, 1000 தோட்டாக்கள் கடத்திய வழக்கு: நடிகை வரலட்சுமி நேரில் ஆஜராக என்ஐஏ சம்மன் appeared first on Dinakaran.

Tags : NIA ,Varalakshmi ,Chennai ,Pakistan ,Villincham, Kerala ,
× RELATED வெயிலில் சுருண்டு விழுந்து ஆடு மேய்த்தவர் பரிதாப பலி