×

ஜார்ஜியாவில் டாக்டருக்கு படித்து வரும் செங்கல்பட்டு மாணவர் கதி என்ன?: தலைமை செயலகத்தில் தாய் கண்ணீர் புகார்

சென்னை: செங்கல்பட்டைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மகன் ரித்விக். இவர் ஜார்ஜியா நாட்டில் எம்பிபிஎஸ் 5ம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களோடு ஜார்ஜியாவில் தங்கி இருந்து படித்து வரும் ரித்திக் அந்நாட்டில் உள்ள மலை மற்றும் காட்டு பகுதிக்கு அடிக்கடி சென்று வீடியோ எடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார். சில நேரங்களில் ரித்விக் தனியாக சென்று வீடியோ எடுத்து அந்த படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ரித்விக் வழக்கம்போல காட்டுக்குள் சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த 4 நாட்களாக பெற்றோர்களும் ரித்விக்கை தொடர்பு கொள்ள முடியவில்லை. மாணவன் ரித்விக் மலைப்பகுதிக்கு சென்ற இடத்தில் என்ன ஆனார், அவரது கதி என்ன என்பது தெரியவில்லை. இது தொடர்பாக ஜார்ஜியாவில் உள்ள ரித்திக்கின் நண்பர்கள் செங்கல்பட்டில் வசித்து வந்த அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரித்விக்கின் பெற்றோர் மகனின் நிலை என்ன ஆனது? என்பது தெரியாமல் கலங்கிப் போய் உள்ளனர்.

இதையடுத்து ரித்விக்கின் தந்தை சுரேஷ்குமார், தாய் பூங்காவனம் ஆகியோர் சென்னை தலைமை செயலகத்திற்கு நேற்று முன்தினம் வந்து முதல்வர் மு.க.ஸ்டாலினை பார்த்து முறையிட முடிவு செய்தனர். இதற்காக தலைமை செயலகத்துக்கு வந்தபோது, போலீசார் முதல்வரை உடனடியாக சந்திக்க முடியாது என்று கூறினர். இதனால் அவர்கள் வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தங்களது மகன் மாயமாகி 4 நாட்களுக்கு மேலாகியும் அவனை பற்றி எந்த தகவலும் இல்லை. எனவே, தமிழக அரசு அதிகாரிகள் எங்கள் மகனை கண்டுபிடித்து கொடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மாணவர் ரித்விக்கின் தாய் கதறி அழுதார். அவரை சமாதானப்படுத்திய அதிகாரிகள் தலைமை செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

இதைத்தொடர்ந்து ரித்விக்கின் தாய் கண்ணீர் மல்க புகார் அளித்தார். புகார் மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து அவரை அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, இந்திய தூதரகம் மூலமாக ஜார்ஜியா நாட்டு அதிகாரிகளிடம் மாணவன் விவகாரத்தில் நடந்தது என்ன என்பது பற்றி கேட்டுள்ளோம். அங்கிருந்து கிடைக்கும் தகவலின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம் என்று தெரிவித்தனர்.

The post ஜார்ஜியாவில் டாக்டருக்கு படித்து வரும் செங்கல்பட்டு மாணவர் கதி என்ன?: தலைமை செயலகத்தில் தாய் கண்ணீர் புகார் appeared first on Dinakaran.

Tags : Chengalputtu ,Georgia ,Chennai ,Sureshkumar ,Chengalpat ,rithwick ,MPBS 5th ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உயர்நிலை...