×

சார்ஜாவில் இருந்து கோழிக்கோட்டுக்கு விமானத்தில் ரூ.44 கோடி போதை பொருள் கடத்தல்: உத்தர பிரதேச வாலிபர் கைது

திருவனந்தபுரம்: ஆப்பிரிக்காவில் இருந்து ரூ.44 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை கடத்திய உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த வாலிபர் கோழிக்கோடு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். சார்ஜாவில் இருந்து நேற்று முன்தினம் மாலை கோழிக்கோட்டுக்கு ஏர் அரேபியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வுத் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து பயணிகள் அனைவரும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராஜீவ் குமார் (27) என்பவரின் பேக்கை அதிகாரிகள் பரிசோதித்த போது, ஏராளமான ஷூ மற்றும் பர்ஸ் மட்டுமே இருந்தன.

ஆனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவற்றை மீண்டும் பரிசோதித்தனர். அப்போது மிகவும் நுணுக்கமான முறையில் ஷூ மற்றும் பர்ஸ்களில் 20 பாக்கெட்டுகளில் போதைப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 3490 கிராம் ஹெராயினும், 1896 கிராம் கொக்கைனும் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.44 கோடி என்று வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து ராஜீவ் குமாரை அதிகாரிகள் கைது செய்தனர். இவர் ஆப்பிரிக்க நாடான கென்யாவில் இருந்து சார்ஜா வந்து பின்னர் அங்கிருந்து கோழிக்கோட்டுக்கு வந்துள்ளார். போதைப் பொருளை அவர் கேரளாவில் விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். யாருக்காக அவர் போதைப் பொருளை கடத்திக் கொண்டு வந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

The post சார்ஜாவில் இருந்து கோழிக்கோட்டுக்கு விமானத்தில் ரூ.44 கோடி போதை பொருள் கடத்தல்: உத்தர பிரதேச வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Sharjah ,Kozhikode ,Uttar Pradesh ,Thiruvananthapuram ,Africa ,
× RELATED ஷார்ஜாவில் குழந்தைகள் வாசிப்புத் திருவிழா தொடங்கியது..!!