×

குமரி முழுவதும் நள்ளிரவில் திடீர் மழை: நாகர்கோவிலில் சாக்கடை நிரம்பியதால் மக்கள் அவதி

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் நேற்று திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று நள்ளிரவிலும் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்தது. குமரி மாவட்டம் தென்மேற்கு பருவமழை, வட கிழக்கு பருவமழை என இரு கால கட்டங்களில் மழை பொழியும் பகுதி ஆகும். குறிப்பாக ஜூன் மாதத்தில் இருந்து செப்டம்பர் வரை தென் மேற்கு பருவமழை பொழியும். இந்த கால கட்டத்தில் அணைகளிலும் நீர் மட்டம் மள,மளவென உயரும். ஆனால் இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை பொய்த்து விட்டது. ஆடி மாதத்தில் கடும் காற்றும், மழையும் இருக்கும். ஆனால் ஆடி முடிந்து தற்போது ஆவணி பிறந்த பின்னரும், கோடை காலத்தை மிஞ்சிய வகையில் வெயிலின் தாக்கம் உள்ளது.

குமரி மாவட்டத்தில் இயல்பாக 30.9 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகுவது வழக்கம். ஆனால் கடந்த 21ம் தேதி இது உயர்ந்து 34.2 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகி இருந்தது. ஆகஸ்ட் 23ம் தேதி வெப்பநிலை 33.6 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகி இருந்தது. ஆகஸ்ட் 25ம் தேதி இது 33.2 டிகிரி செல்சியஸ் ஆக காணப்பட்டது. அந்த வகையில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இதனை போன்று இரவு நேர வெப்பநிலையும் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று குமரி மாவட்டத்தில் பரவலாக மழை இருந்தது. நாகர்கோவில், தக்கலை, குலசேகரம், மார்த்தாண்டம் உள்பட மாவட்டம் முழுவதும் மழை பெய்தது. நேற்று மாலையில் இருந்தே குளிர்ந்த காற்று வீசிய நிலையில், இரவில் ஒரு சில இடங்களில் மழை இருந்ததால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மாவட்டத்தில் அதிகபட்சமாக குளச்சல் பகுதியில் 32.4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இரணியலில் 24 மில்லி மீட்டர் மழை பெய்திருக்கிறது. பூதப்பாண்டியில் 3.2, கன்னிமாரில் 1.2, நாகர்கோவிலிலில் 7.4, பேச்சிப்பாறையில் 2.2, தக்கலையில் 3.2, பாலமோரில் 3.2, கோழிப்போர்விளையில் 5 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அணைகளின் நீர் மட்டத்தை பொறுத்தவரை பேச்சிப்பாறை நீர் மட்டம் 17.90 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 351 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 505 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 27.25 அடியாகவும், சிற்றார்1, 11.28 அடியாகவும், சிற்றார்2, 11.38 அடியாகவும் உள்ளன. பொய்கை 10.20, மாம்பழத்துறையாறு 3.28, முக்கடல் மைனஸ் 12 அடியாக உள்ளன.

சாக்கடை நிரம்பியது : இந்த நிலையில் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அருகே உள்ள ஓட்டுப்புற தெருவில் நேற்று இரவு சாக்கடை நிரம்பி ஓடியது. சாக்கடை கழிவுகள் தெருவில் இருந்தது. இன்று காலை எழுந்த அந்த பகுதி பொதுமக்கள் இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். வடசேரி எம்.எஸ். ரோட்டில் கழிவு நீர் கால்வாய் அடைக்கப்பட்டு உள்ளது. இந்த அடைப்பை சரி செய்து, கால்வாயை மீட்காததால், மழை காலங்களில் ஓட்டுபுற தெருவில் இந்த நிலை ஏற்படுகிறது. மாநகராட்சியிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என அந்த பகுதி பொதுமக்கள் கூறினர். எனவே மேயர் மகேஷ் உடனடியாக இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தி அந்த பகுதியில் சாக்கடை கழிவுகள் ஓடாத வகையில் எம்.எஸ். ரோட்டில் உள்ள கால்வாய்யை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post குமரி முழுவதும் நள்ளிரவில் திடீர் மழை: நாகர்கோவிலில் சாக்கடை நிரம்பியதால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Kumari ,Nagarkovil ,Nagarko ,Kumari district ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...