×

ராசிபுரத்தில் பரபரப்பு அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பு: மாடி வீட்டில் வெடி விபத்து: 4 பேர் காயத்துடன் தப்பினர்

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நேற்றிரவு மாடி வீட்டில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் பொருட்கள் எரிந்து நாசமானது. வாலிபர் உடல் கருகி படுகாயமடைந்தார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரின் மையப்பகுதியில் உள்ள வி.நகரில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி அருகில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் கண்ணன் (43) என்பவர், மனைவி மற்றும் 2 மகள்களுடன் வசித்து வருகிறார். நேற்றிரவு 7.30 மணியளவில் கண்ணன் வீட்டில் இருந்து பயங்கர வெடி சத்தம் கேட்டது. அப்பகுதியில் கரும்புகை பரவியதை கண்டு அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். தகவலின்பேரில், ராசிபுரம் போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு நிலைய வீரர்கள் சம்பவ இடம் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சம்பவம் நடைபெற்ற வீட்டில் கண்ணன் பலத்த தீக்காயங்களுடன் கருகிய நிலையில் கிடந்தார். அவரது மனைவி சுமித்ரா (40) மற்றும் மகள்கள் ஹர்சவர்த்தினி, ஹன்சிகா ஆகியோரும் லேசான காயங்களுடன் தவித்து கொண்டிருந்தனர்.

இவர்களில் கண்ணனை ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், வீட்டிற்கு கரிமருந்து வாங்கி வந்து, உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வந்ததும், பல்வேறு இடங்களிலிருந்து பட்டாசுகளை மொத்தமாக வாங்கி வந்து இருப்பு வைத்து விற்று வந்ததும், திருவிழாக்களுக்கு சென்று பட்டாசு வெடித்து வந்ததும் தெரியவந்தது. பட்டாசு மருந்துகளை வீட்டின் மாடியில் காய வைத்திருந்தபோது, தீப்பொறி பட்டு விபத்து நடந்துள்ளது. இதில், பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகள் மற்றும் தளவாட பொருட்கள் கொழுந்து விட்டு எரிந்துள்ளது. டேங்கில் இருந்த தண்ணீர் வீட்டிற்குள் வழிந்தோடி வந்த நிலையில், படிக்கட்டுகளை தாண்டி வீட்டிற்குள்ளும் தீ பரவியுள்ளது. தீயை கண்ணன் போராடி அணைத்தபோது உடலில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அங்கிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் பயங்கர சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர்.

சம்பவத்தின்போது, அங்கிருந்தவர்கள் மின்சாரத்தை துண்டித்ததால் பெருத்த சேதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்ததும் கலெக்டர் உமா மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ராசிபுரம் விரைந்து வந்து சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கண்ணனிடம் கலெக்டர் விசாரித்தார். அவரிடம் கலெக்டர் கேட்டபோது, குல தெய்வ கோயில் விழாவிற்காக வெடிகளை வாங்கி வைத்திருந்த நிலையில், கொசு பேட்டை விசிறி கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பட்டாசு பார்சலில் தீப்பொறி பட்டு வெடித்து சிதறியதாக தெரிவித்தார். இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், அனுமதியின்றி பட்டாசு, வெடிமருந்துகளை குடியிருப்பு பகுதியில் வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. வருவாய்த்துறை மற்றும் காவல்துறை மூலம் தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

The post ராசிபுரத்தில் பரபரப்பு அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பு: மாடி வீட்டில் வெடி விபத்து: 4 பேர் காயத்துடன் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Rashipuram ,Rasipuram ,Namakkal district ,Dinakaran ,
× RELATED நாமக்கலில் சிறுமிகளுக்கு பாலியல்...