×

நெமிலி அருகே பஸ் வசதி இல்லாததால் பள்ளிக்கு 5 கி.மீ. தூரம் நடந்து செல்லும் மாணவர்கள்

*நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நெமிலி : நெமிலி அருகே பஸ் வசதி இல்லாததால் பள்ளிக்கு 5 கி.மீ. தூரம் நடந்து செல்லும் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி பேரூராட்சியில் இயங்கி வரும் அரசு பள்ளிகளில் சுற்றியுள்ள கீழ்வீதி, வேப்பேரி, கொந்தங்கரை உட்பட பல்ேவறு கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் பாணாவரம் பகுதியில் இருந்து கீழ்வீதி வழியாக இயக்கப்பட்டு வந்த அரசு பஸ்சில் பள்ளிக்கு வந்து சென்று கொண்டிருந்தனர். தற்போது, அந்த பஸ் இயக்கப்படாததால் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது: பாணாவரம் பகுதியில் இருந்து கீழ்வீதி கிராமம் வழியாக நெமிலிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஓராண்டாக அந்த அரசு பஸ் வருவதில்லை. இதனால் பள்ளி மாணவர்கள் சுமார் 5 கி.மீ. தூரம் நடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகி வருகிறோம். இதுகுறித்து சோளிங்கர் அரசு போக்குவரத்து பணிமனையில் பலமுறை மனு கொடுத்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

மேலும், கீழ்வீதி கிராமத்தில் இருந்து வேப்பேரி வழியாக நெமிலிக்கு செல்லும் சாலையில் சென்னை- பெங்களூரு தேசிய அதிவிரைவு சாலை பணி நடந்து வருகிறது. இதனால், கிராம பகுதிகளில் உள்ள சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்வதால் சாலைகள் முழுவதும் சிதலமடைந்துள்ளது. இதனால் அந்த சாலை வழியாக சைக்கிளில் செல்லும் மாணவர்கள் விபத்துகளில் சிக்கி காயம் அடைந்து வருகின்றனர்.

எனவே, பள்ளி நேரங்களில் பாணாவரத்தில் இருந்து கீழ்வீதி, வேப்பேரி கிராமங்கள் வழியாக நெமிலி பகுதிக்கு அரசு பஸ் இயக்க வேண்டும். அதேபோல், கீழ்வீதி கிராமத்தில் இருந்து வேப்பேரி வழியாக நெமிலிக்கு செல்லும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post நெமிலி அருகே பஸ் வசதி இல்லாததால் பள்ளிக்கு 5 கி.மீ. தூரம் நடந்து செல்லும் மாணவர்கள் appeared first on Dinakaran.

Tags : Nemili ,Dinakaran ,
× RELATED நெமிலி ஒன்றியத்தில் கோடை பயிர்...