×

தேர்தலுக்கு முன்பு சொர்க்கம் காட்டுவதாக கூறி ஆட்சிக்கு வந்ததும் மக்களுக்கு நரகத்தை காட்டுபவர் சந்திரபாபு

*நகரியில் நடந்த விழாவில் முதல்வர் ஜெகன்மோகன் குற்றச்சாட்டு

திருமலை : தேர்தலுக்கு முன்பு சொர்க்கம் காட்டுவதாக கூறி ஆட்சிகு வந்ததும் மக்களுக்கு நரகத்தை காட்டுபவர் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு என்று நகரியில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெகன்மோகன் குற்றம் சாட்டினார். ஆந்திர மாநிலத்தில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்வி உதவித்தொகை ‘ஜெகன் அண்ணா’ வித்யாதேவனா திட்டத்தின்கீழ் மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தும் நிகழ்ச்சி கடந்த 2 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, 2022-23ம் கல்வியாண்டின் 3ம் காலாண்டில் தகுதியான மாணவர்களுக்கான கல்லூரி கட்டணத்தை திருப்பி செலுத்தும் விதமாக 8,44,336 பேரின் வங்கி கணக்குகளில் ₹680.44 கோடி செலுத்தும் நிகழ்ச்சி சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகரியில் நேற்று நடந்தது. முதல்வர் ஜெகன்மோகன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, நகரியில் ₹31 கோடியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து, முதல்வர் ஜெகன்மோகன் பேசியதாவது: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவது இந்த ஜெகன்மோகன் தான். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் வாக்குறுதியை மறப்பது தான் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபுவின் செயல். உங்கள் ஜெகன் சொன்னதை செய்வான். தேர்தல் அறிக்கையில் 99 சதவீதம் செயல்படுத்திய பெருமை எங்களுக்குத்தான் உள்ளது. ‘ஜெகன் அண்ணா’ வித்யாதேவனா திட்டத்தின்கீழ் இதுவரை ₹15,593 கோடி மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

வறுமையை ஒழிக்கும் சக்தி கல்விக்கு மட்டுமே உண்டு. எனவே, மாணவர்களின் எதிர்க்காலத்தை கருத்தில் கொண்டு கல்வியில் புரட்சி மேற்கொண்டு வருகிறோம். நாட்டில் எங்கும் இல்லாத வகையில் ‘தாய்மடி’ திட்டத்தில் 1 முதல் 10ம் வகுப்பு வரை கல்வி உதவித்தொகையுடன் கல்லூரி கட்டணம், விடுதி கட்டணம் வழங்கப்படுகிறது. அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி தரம் உயர்த்தப்படுகிறது.

ஒவ்வொரு ஏழை குடும்பத்தின் எதிர்காலத்தையும் மாற்றி அமைக்கும் வகையில் திட்டங்களை செய்து வருகிறோம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக இனி கடன் வாங்க மாட்டார்கள். அரசு செயல்படுத்தும் திட்டத்தால் குழந்தைகளின் கல்வி, எதிர்க்காலம் பாதுகாப்பாக இருக்கும். இந்த மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு பொறியாளர், மருத்துவர் வர வேண்டும்.

இதற்காக, ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பாலிடெக்னிக், பொறியியல், மருத்துவம், ஐடிஐ போன்ற கல்வி நிறுவனங்களில் படிக்க அந்த நிறுவனங்கள் வசூலிக்கும் கட்டணத்தை அரசே செலுத்தி வருகிறது. கல்லூரிகளின் கட்டணத்தையும் அரசே செலுத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 2 தவணையாக வழங்கப்படும் ‘ஜெகன் அண்ணா’ விடுதி மானியத்தின்கீழ் விடுதிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உணவு மற்றும் தங்கும் செலவையும் அரசே செலுத்தி வருகிறது.

ஐடிஐ மாணவர்களுக்கு ₹10 ஆயிரம், பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ₹15 ஆயிரம், பட்டப்படிப்பு, பொறியியல், மருத்துவ படிப்பவர்களுக்கு ₹20 ஆயிரம் வழங்கப்படுகிறது.3 முறை முதல்வராக பதவி வகித்த தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபுவின் பெயரை சொன்னால் ஒரு நல்ல திட்டமாவது நினைவிருக்கிறதா?, ஒரு வாக்குறுதியையாவது நிறைவேற்றப்பட்டுள்ளதா?, இந்த பெரிய மனிதர் பதவிக்காக எதை செய்யவும் தயங்க மாட்டார். சொந்த பலத்தை, சொந்த மகனை நம்பாமல் பேக்கேஜ் ஸ்டாரை (பவன் கல்யானை) கொண்டு வந்துள்ளார்.

புங்கனூரில் பாதுகாப்பிற்கு சென்ற இடத்தில் தெலுங்கு தேசம் கட்சியினர் கலவரத்தை உருவாக்கி போலீசாரை தாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் மீது கற்கள் வீசியும், பீர்பாட்டில்களால் தாக்கி இருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. மாநிலத்தில் போலீசார் அவரை கொல்ல முயன்றனராம். அவர்கள் உருவாக்கிய மோசடிக்கு எதிராக அவர்கள் புகார் கொடுக்கிறார்கள். பொய்யை மட்டுமே சொல்லும் சந்திரபாபுவுக்கும் உங்கள் பிள்ளைக்கும் (எனக்கும்) உள்ள வித்தியாசத்தை பாருங்கள்.

பெண் கொடுத்த மாமனாருக்கு துரோகம் செய்து தற்போது அவருக்கு (என்டிஆர்) மாலை போடுகிறார். தேர்தலுக்கு முதலில் சொர்க்கம் காட்டுவதாக கூறி, பிறகு ஆட்சிக்கு வந்ததும் மக்களுக்கு நரகத்தை காட்டுவார். அன்றும், இன்றும் மாநிலத்துக்கான பட்ஜெட்டில் வித்தியாசத்தை மக்கள் கவனிக்க வேண்டும். அதே பட்ஜெட், அதே நிதி. ஆனால், திட்டங்கள் மட்டும் மக்கள் நலத்திட்டம் செயல்படுத்துவதில் மகன் முன் உதாரணமாக உள்ளேன்.

இவ்வாறு, அவர் பேசினார். முன்னதாக, ரேணிகுண்டா விமான நிலையத்தில் முதல்வர் ெஜகன்மோகனை துணை முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் ராமச்சந்திரா, ரோஜா, கலெக்டர் வெங்கடரமணா, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகரன், மேயர் சிரிஷா, எஸ்பி பரமேஸ்வர், இணை கலெக்டர் பாலாஜி உள்ளிட்ட அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

ஜெகன்மோகனை தோற்கடிப்பவன் இன்னும் பிறக்கவில்லை நகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சரும், நடிகையுமான ரோஜா பேசியதாவது:முதல்வர் ஜெகன்மோகனை தோற்கடிப்பவன் இன்னும் பிறக்கவில்லை. குரைக்காத நாயும் இல்லை. குறை சொல்லாத மக்களும் இல்லை. இந்த இரண்டும் இல்லாத ஊரும் இல்லை. புரிஞ்சிதா ராஜா. ஒரு எம்எல்ஏ பதவி கூட ஜெயிக்க முடியாத ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன்கல்யாண், ஜெகன்மோகனை எப்படி தோற்கடிக்க முடியும்.

அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலில் 175 தொகுதிக்கு 175 இடங்கள் நாங்கள் ஜெய்கிறோம். சந்திரபாபு, பவன்கல்யாண், தெலுங்கு தேசம் கட்சி தேசிய பொதுச்செயலாளர் நாரா லோகேஷ் என்று எத்தனை பேர் வந்தாலும் ஜெகன்மோகனை தோற்கடிக்க முடியாது. இவ்வாறு, அவர் பேசினார்.

கல்விக்காக செலவிடப்படும் பணம் எதிர்காலத்திற்கான முதலீடாகும் திருப்பதி மாவட்ட இணை கலெக்டர் பாலாஜி கூறுகையில், ‘மாவட்டத்தில் உள்ள 38,960 மாணவர்களின் வங்கி கணக்கில் 3ம் காலாண்டில் ₹29.23 கோடி செலுத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்விக்காக செலவிடப்படும் பணம் அவர்களின் எதிர்காலத்திற்கான முதலீடாகும். பெற்றோர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் அரசு வழங்கும் உதவிகளை பயன்படுத்தி நன்றாக படிக்க வேண்டும். சமுதாயத்திற்கு பயனுள்ள சிறந்த குடிமகனாக உருவாக வேண்டும். மாநிலத்திற்கும், நாட்டிற்கும் சேவை செய்ய வேண்டும்’ என்றார்.

The post தேர்தலுக்கு முன்பு சொர்க்கம் காட்டுவதாக கூறி ஆட்சிக்கு வந்ததும் மக்களுக்கு நரகத்தை காட்டுபவர் சந்திரபாபு appeared first on Dinakaran.

Tags : Chandrababu ,Chief Minister ,Jaganmohan ,Tirumala ,Nagari ,
× RELATED உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தை...