![]()
* சர்க்கரை துறை ஆணையருக்கு எதிர்ப்பு
* கரும்புகளுடன் விவசாயிகள் போராட்டம்
விழுப்புரம் : புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலை மூடப்பட்ட நிலையில் விழுப்புரம் பகுதி கரும்புகளை 150 கி.மீ. தொலைவில் உள்ள மதுராந்தகம் கூட்டுறவு ஆலைக்கு அனுப்ப உத்தரவிட்ட சர்க்கரை துறை ஆணையரை கண்டித்து விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தில் கரும்புகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் கரும்புகளை கையில் வைத்துக்கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியரிடம் மனு அளிக்குமாறு கூறினர்.
இதனை தொடர்ந்து விவசாயிகள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கரும்பு விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலை மூடப்பட்ட நிலையில் மிக அருகில் உள்ள சக்கரை ஆலைகளுக்கு கரும்புகளை அனுப்பி அரசு அறிவிக்கும் ஊக்கத்தொகை, சிறப்பு தொகையை பெற்று வந்தனர்.
இந்த ஆண்டு சக்கரை துறை ஆணையர் விவசாயிகளின் கருத்தை கேட்காமல் தன்னிச்சையாக செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை அனுப்ப வேண்டுமென கூறினார். தற்போது சிறப்பு பருவத்தில் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் பயிரிட்டுள்ள கரும்பை எங்கே அனுப்புவது, மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையும் தற்போது இயங்கவில்லை. எனவே கரும்பு விவசாயிகள் தங்களுக்கு அருகே உள்ள ஆலைக்கு அனுப்பி வருகிறோம்.
20 கி.மீ. தூரம் உள்ள ஆலைக்கு அனுப்பாமல் 150 கி.மீ. தூரத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பை அனுப்ப வேண்டும் என கட்டாயப்படுத்தி வருகின்றனர். விவசாயிகள் இப்பிரச்னை தொடர்பாக மனு அளித்து வருகிறோம். விவசாயிகள் கோரும் ஆலைக்கு அனுப்புவது, பொதுப்பகுதியாக அறிவிக்கக்கோரியும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியுள்ளனர்.
The post புதுச்சேரி கூட்டுறவு ஆலை மூடல் விழுப்புரம் கரும்புகளை 150 கி.மீ. தொலைவில் உள்ள மதுராந்தகம் கூட்டுறவு ஆலைக்கு அனுப்ப சொல்வதா? appeared first on Dinakaran.

