×

ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து செப். 6ம் தேதி தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம்: திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிவிப்பு

சென்னை: ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து செப்டம்பர் 6ம் தேதி தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பாஜக தலைமையிலான ஒன்றிய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, அண்மையில் ‘விஸ்வகர்மா யோஜனா’ என்ற ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தினக் கொடியேற்று நிகழ்ச்சியிலும் (15.08.2023) இத்திட்டத்தை அறிவித்துள்ளார். செருப்பு தைப்பவர் உட்பட பரம்பரை பரம்பரையாக 18 வகையான ஜாதி தொழில்களைச் செய்பவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாகக் கூறி ரூபாய் 13 ஆயிரம் கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது.

‘குரு சிஷ்யப் பரம்பரை’ என்றும் வெளிப்படையாகவே கூறப்பட்டுள்ளது. இந்த நிதியைப் பெறுவதற்கு குறைந்தபட்ச வயது 18 என்றும் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதன் பின்னணியில் இருப்பது 18 வயது அடைந்த பிள்ளைகளை மேற்கொண்டு கல்லூரியில் படிக்கவிடாமல் பரம்பரை ஜாதித் தொழிலையே செய்யத் தூண்டும், குலத்தொழிலை மேலோங்கச் செய்யும் திட்டமிட்ட சூழ்ச்சியாகும். இது 1952-1954ல் சென்னை மாநில முதலமைச்சராக இருந்த ராஜகோபாலாச்சாரியார் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தின் மறுபதிப்பாகும். ஆண்டாண்டு காலமாகக் கல்வி உரிமை மறுக்கப்பட்ட பிள்ளைகள் கல்வியில் உயர்நிலையை எட்டுவதைத் தடுத்து நிறுத்தி, 18 வயது அடைந்தவுடன் அவர்களைப் பரம்பரை ஜாதித் தொழிலை நோக்கியே நகர்த்திடத் திட்டமிட்டுள்ள ஒன்றிய அரசின் இந்த வருணாசிரம சதித் திட்டத்தை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

நாக்கில் தேன் தடவுவது போல, நிதியை ஒதுக்கி, காலம் காலமாகக் கல்வி உரிமை மறுக்கப்பட்ட மக்கள், தப்பித் தவறிக் கல்லூரியில் அடியெடுத்து மேற்படிப்பு படிக்க முன் வந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் அதனை முறியடிக்கும் சூழ்ச்சிப் பொறிதான் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ‘விஸ்வகர்மா யோஜனா’ என்பதை எடுத்துக்காட்டி இக்கூட்டம் இந்தக் குலக்கல்வித் திட்டத்தை எதிர்க்கிறது. பரம்பரை பரம்பரையாக ஜாதி தொழிலையே செய்ய வேண்டும் என்று பிள்ளைகளின் கல்விக் கண்ணைக் குத்தும் இந்தத் திட்டத்திற்குத் தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும், எதிர்க்க முன்வர வேண்டும் என்றும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

முதற்கட்டமாக இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் குலக்கல்வித் திட்டத்தின் மறுவடிவமான விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை எதிர்த்து அனைத்து சமூகநீதிக் கொள்கை சார்ந்த கட்சிகளும் ஒருங்கிணைந்து மாபெரும் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டத்தை வரும் செப்டம்பர் 6 ஆம் தேதியன்று சென்னையில் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது. ‘விஸ்வகர்மா யோஜனா’ என்ற ஒன்றிய அரசின் சதித் திட்டத்தைக் கண்டித்து நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி வீரமணி, ஆராசா எம்.பி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, தொல்.திருமாவளவன் எம்.பி., கே.எம். காதர் மொகிதீன், மு வீரபாண்டியன், ஆ வந்தியத்தேவன், ௧ கனகராஜ், ப. அப்துல் சமது எம்.எல்.ஏ., சுபவீரபாண்டியன், பொன்.குமார், கோ. கருணாநிதி, பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு, கலி பூங்குன்றன், மற்றும் அனைத்துக் கட்சிகளின் மேலும் பல பொறுப்பாளர்களும் பங்கேற்றனர்.

The post ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து செப். 6ம் தேதி தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம்: திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Union Govt. ,D.K. ,Dravidar Kazhagam ,president ,K. Veeramani ,CHENNAI ,Dravida ,Union Government ,Dinakaran ,
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...