×

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ₹11.80 லட்சம் மோசடி செய்த ஆசிரியர்

* பாதிக்கப்பட்டவர் தற்கொலை முயற்சி * கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் கோரிக்கை மனுக்களை வாங்கி கொண்டிருந்தார். அப்போது ஒருவர் அங்கு கோரிக்கை மனு அளிக்க வந்தபோது தனது கைப்பையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தனது உடம்பில் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தி பெட்ரோல் கேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகா மேலந்தல் கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி மகன் அன்பழகன் என்பது விசாரணையில் தெரியவந்தது.

விசாரணையில், தனக்கு நவீன்குமார் மற்றும் அஜித்குமார் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் சமையலர் பணியும், ஆதிதிராவிடர் நலத்துறையில் சமையலர் பணியும் என அரசு வேலை வாங்கி தருவதாக திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் மூலமாக அறிமுகமாகிய நபரான சின்னசேலம் அருகில் உள்ள குரால் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமியின் கணவரான அரசு பள்ளி ஆசிரியர் குணசேகரன் (அதிமுக) என்பவரிடம் 2 தவணையாக மொத்தம் ரூ.6.50 லட்சமும், பாலாஜி என்பவர் செல் நம்பரின் கூகுள்பே மூலமாக ரூ.5.30 லட்சம் என மொத்தம் ரூ.11.80 லட்சம் பணத்தையும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குணசேகரன் பெற்றுக்கொண்டு அரசு வேலையும் வாங்கி தராமல், வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்தார்.

இதையடுத்து கொடுத்த பணத்தை ஆசிரியர் குணசேகரனிடம் கேட்டபோது பணத்தை திருப்பி தர மறுத்து ஆட்களை கொண்டு அடித்து விரட்டியதால், இதுசம்ந்தமாக கள்ளக்குறிச்சி எஸ்.பி. அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மணலூர்பேட்டை, கீழ்குப்பம் ஆகிய காவல் நிலையங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் கடந்த 2 ஆண்டுகளில் 66 புகார் மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட அன்பழகனுக்கு கவுன்சலிங் கொடுத்து புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி கள்ளக்குறிச்சி போலீசாருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்படி கள்ளக்குறிச்சி எஸ்.ஐ. சத்தியசீலன் பாதிக்கப்பட்ட நபரான அன்பழகனை காவல் நிலையம் அழைத்து சென்று முதலில் கவுன்சலிங் வழங்கினர். தொடர்ந்து புகார் மனு மீது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ₹11.80 லட்சம் மோசடி செய்த ஆசிரியர் appeared first on Dinakaran.

Tags : Kallakkuruchi ,Kallakkuruchi District ,
× RELATED கள்ளக்குறிச்சி அருகே மாமந்தூர்...