×

திருத்துறைப்பூண்டி அருகே கொருக்கை ஊராட்சி ஏரியிலிருந்து மண் எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு

 

திருத்துறைப்பூண்டி, ஆக. 29: திருத்துறைப்பூண்டி அருகே கொருக்கை ஊராட்சி ஏரியிலிருந்து மண் எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொருக்கை தலைக்காடு பகுதியில் தலைமுறை தலைமுறையாக மக்கள் வசித்து வந்த இடத்தில் ஏரி இருந்ததாக அரசு ஆவணத்தில் உள்ளதை சுட்டி காட்டி, அங்குள்ள அனைத்து குடியிருப்புகளையும் அகற்ற, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து நீதிமன்ற தீர்ப்பை காட்டி, மாவட்ட நிர்வாகத்தினர் 70க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை கடந்த ஆண்டு இடித்து தரைமட்டமாக்கினர்.

அங்கு வசித்து வந்த மக்கள், மாற்று இடத்தில் நிலையான குடியிருப்புகள் கட்டி இடம்பெயர்வதற்குள், அந்த இடத்தில் மண் எடுக்க வருவாய்த்துறை அறிவிப்பு வெளியிட்டது. இதனை அறிந்த அப்பகுதியில் வசித்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சியும், ஆத்திரமுமடைந்தனர். இதனால் பொதுமக்கள் வட்டாட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அதில், ‘‘ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடத்தில் உள்ள மண்ணை, வெளி பயன்பாட்டுக்கு அனுமதிக்க மாட்டோம்’’ என குறிப்பிட்டிருந்தனர். மேலும், கொருக்கை ஏரியிலிருந்து மண் அள்ள ஆட்சேபணை தெரிவித்து ஊராட்சி மன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றி, அதன் நகல் வட்டாட்சியரிடம் வழங்கப்பட்டுள்ளது என, கொருக்கை ஊராட்சி தலைவர் ஜானகிராமன் தெரிவித்துள்ளார்.

The post திருத்துறைப்பூண்டி அருகே கொருக்கை ஊராட்சி ஏரியிலிருந்து மண் எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Korukai panchayat lake ,Tirutharapoondi ,Thirutharapoondi ,Thiruthaurapoondi… ,Thiruthaurapoondi ,
× RELATED திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ்...