×

மதுராந்தகம் ரயில் நிலையத்தில் தாமதமாக புறப்பட்ட ரயிலால் பரபரப்பு: அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதம்

மதுராந்தகம்:மதுராந்தகம் ரயில்நிலையத்தில் தாமதமாக புறப்பட்ட ரயிலால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதிகாரிகளுடன் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ரயில் நிலையத்தை தினமும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்துகின்றனர். செய்யூர், சூணாம்பேடு, சித்தாமூர், பவுஞ்சூர் மற்றும் வேடந்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வேலைக்காக மதுராந்தகம் ரயில் நிலையத்துக்கு வந்து பின்னர் சென்னை செல்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் பாண்டிச்சேரியில் இருந்து வந்து மதுராந்தகம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 7.35 மணிக்கு வரும் ரயிலிலேயே பயணிக்கின்றனர்.

11 பெட்டிகளுடன் செல்லும் இந்த ரயிலில் இரண்டு பெட்டிகள் ரிசர்வேஷன் பெட்டியாகவும், 2 பெண்கள் பெட்டிகளாகவும், ஒரு பெட்டி மாற்றுத்திறனாளிகள் மற்றும் லக்கேஜ் வைப்பதற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 6 பொது பெட்டிகளில் மற்ற பயணிகள் பயணிக்க வேண்டும். வழக்கமாக இந்த ரயில் விழுப்புரம், திண்டிவனம் வரும்போதே 6 பொதுப்பெட்டிகளும் நிரம்பிவிடும். இதனால் இதைதாண்டி உள்ள மேல்மருவத்தூர், மதுராந்தகம் வரும்போது பயணிகள் ஏற இடமின்றி படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணிப்பது வழக்கமாக வந்தது. சமீபகாலமாக படிக்கட்டில் நின்றுகூட பயணிக்க முடியாத அளவுக்கு மக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இதன்காரணமாக மதுராந்தகம் ரயில் நிலையம் உள்பட பல பகுதிகளில் சுமார் 200 நபர்கள் ரயிலில் ஏற முடியாமல் திரும்பிவந்து வேறு வாகனங்கள் மூலமாக சென்னைக்கு பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் டிக்கெட் கவுண்டரில் வேகமாக டிக்கெட் பெற முடியாத காரணத்தினாலும் பெரும்பாலான பயணிகள் திரும்பிச்செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதேநிலை நேற்று காலையும் நீடித்தது. இதனால் அப்போது பயணிகள் ரயில் நிலைய அதிகாரிகளிடம் சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக குறிப்பிட்ட பாண்டிச்சேரி, சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் ஒரு மணிநேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

இந்த ரயிலைத் தொடர்ந்து அடுத்தபடியாக வந்த திருச்செந்தூர் – சென்னை ரயில் மதுராந்தகம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அதில் பயணிகள் அனைவரையும் ஏற்றி சென்னைக்கு அனுப்பிவைத்தனர். இதுபற்றி பயணிகள் கூறும்போது, ‘’இந்த பிரச்னை தீர பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்கவேண்டும். திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு செல்லும் ரயில் மதுராந்தகத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். டிக்கெட் கவுண்டரில் குறிப்பிட்ட நேரங்களில் கூடுதல் கவுண்டர் திறந்து வேகமாக டிக்கெட் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

The post மதுராந்தகம் ரயில் நிலையத்தில் தாமதமாக புறப்பட்ட ரயிலால் பரபரப்பு: அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Tags : Madurathangam ,railway ,station ,Madhuranthakam ,Maduranthakam railway station ,Chengalpattu District ,Madurandakam Railway Station ,Dinakaran ,
× RELATED திருச்சி ரயில் நிலையத்தில் பரபரப்பு...