×

செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஒன்றியத்தில் நெல்கொள்முதல் நிலையம் திறப்பு

செய்யூர்: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சோழக்கட்டு கிராமத்தில் பனையூர் மு.பாபு எம்எல்ஏ திறந்துவைத்தார். செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஒன்றியம் பரமேஸ்வரி சோழக்கட்டு கிராமத்தில் கோடை மழை, கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு மூலமாக பாசனம் செய்து ஏராளமான விவசாயிகள் கோடையில் 2வது போகம் நெற்பயிர் நடவு செய்துள்ளனர். அதன் அறுவடை சீசன் தற்பொழுது களை கட்டியுள்ளது. அறுவடை செய்யப்படும் நெல்லை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபுவிடம் அப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர். இதனையடுத்து அதிகாரிகள் நெல் கொள்முதல் நிலையம் திறக்க உரிய நடவடிக்கை எடுத்தனர்.

இதனையடுத்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கான திறப்பு விழா நேற்று நடைபெற்றது. ஒன்றியக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் இதில் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் பிரமிளா கருணாநிதி முன்னிலை வகித்தார். முன்னதாக கொள்முதல் நிலைய அலுவலர் சிவன் ஞானசக்திவேல் அனைவரையும் வரவேற்றார். செய்யூர் எம்எல்ஏ பனையூர் மு.பாபு கலந்துகொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். இதனையடுத்து எம்எல்ஏ பனையூர் பாபு பேசுகையில், தனியார் வியாபாரிகளிடம் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்து நஷ்டமடைந்தனர்.

தற்பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்து லாபம் ஈட்டும் வகையில் நெல்லின் விலையை உயர்த்தி வழங்கியுள்ளார். இதனால் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல்லை வழங்கிய விவசாயிகள் அனைவரும் நெற்பயிர் விவசாயத்தில் லாபமடைந்துள்ளனர் என்றார். இந்த நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் பரமேஸ்வரி மங்கலம், நத்தம், அணைக்கட்டு, தண்டரை, பொய்கை நல்லூர், நெற்குணப்பட்டு, அடையாளச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகளிடமிருந்து 550க்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் மூட்டைகள் நேரடியாக கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

*செம்பூர், மடையம்பாக்கத்திலும் திறப்பு
இதேபோன்று செம்பூர் கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் வெளிக்காடு ஏழுமலை, ஸ்ரீகாந்த், பாலு கழக நிர்வாகிகள் அணைக்கட்டு மோகன், பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று மடையம்பாக்கம் கிராமத்தில் திறந்தவெளி நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழா ஒன்றியக்குழு பெருந்தலைவர் சுபலட்சுமி பாபு தலைமையில் நடைபெற்றது. இதில் எம்எல்ஏ பனையூர் பாபு கலந்து கொண்டு திறந்துவைத்தார். மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளர் தசரதன், ஒன்றிய செயலாளர் பாபு, ஒன்றியக் குழு துணை பெருந்தலைவர் கிருஷ்ணவேணி தணிகாசலம், ஒன்றிய துணைச் செயலாளர் அர்ஜுனன், ஒன்றியக்குழு உறுப்பினர் பர்வதம் வரதன், ஊராட்சி மன்ற தலைவர் திருநாவுக்கரசு, சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஒன்றியத்தில் நெல்கொள்முதல் நிலையம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Nelgo-procurement station ,Chengalpattu District ,Lathur Union ,Cholhakatthu ,Pananyur Mc. Babu ,MLA ,Chengalpadu District, Lathur ,Paddy Procurement Station ,Chengalpattu District Lathur Union ,Dinakaran ,
× RELATED வண்டலூர் அருகே தனியார் குடியிருப்பு...