×

உலக தடகள சாம்பியன்ஷிப்: ஈட்டி எறிதலில் தங்கம்: நீரஜ் வரலாற்று சாதனை

புடாபெஸ்ட்: உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் ஈட்டி எறிதலில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஆக.19ல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஒரு வாரம் கடந்த நிலையிலும் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சிய நிலையில், ஆண்கள் ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நீரஜ் சோப்ரா (88.77 மீ.), டி.பி.மானு (81.31 மீ.), கிஷோர் ஜெனா (80.55 மீ.) என 3 இந்திய வீரர்கள் பைனலுக்கு முன்னேறி சாதனை படைத்ததுடன் பதக்க நம்பிக்கையையும் அளித்தனர். இவர்களுக்கு சவால் தரும் வகையில் பாக். வீரர் அர்ஷத் நதீம் (86.79மீ) சிறப்பாக செயல்பட்டதால், இறுதிப் போட்டி மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியது.

பரபரப்பான பைனலில் நீரஜ் சோப்ரா தனது முதல் எறிதலில் தவறிழைத்ததால் அந்த வாய்ப்பு வீணானது. 2வது வாய்ப்பில் நீரஜ் 88.17 மீ. என தகுதிச் சுற்றை விட சற்று குறைவான தொலைவுக்கு ஈட்டியை எறிந்ததால் லேசான ஏமாற்றம் ஏற்பட்டது. ஆனால், அடுத்து வந்த வீரர்கள் 2வது சுற்றில் மட்டுமல்ல, 3வது சுற்றிலும் கூட நீரஜ் இலக்கை முறியடிக்க முடியவில்லை. இதையடுத்து, உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியராக வரலாற்று சாதனையுடன் தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார் நீரஜ். பாக் வீரர் அர்ஷத் 87.82 மீ. தொலைவுக்கு ஈட்டி எறிந்து 2வது இடம் பிடித்ததுடன் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். செக் குடியரசு வீரர் ஜேக்கப் வட்லேச் (86.67 மீ.) வெண்கலம் வென்றார்.

* புதிய நம்பிக்கை: பதக்கம் வெல்லாவிட்டாலும், பைனலில் பங்கேற்ற மற்ற 2 இந்திய வீரர்கள் தகுதிச் சுற்றை விட அதிக தொலைவுக்கு ஈட்டியை எறிந்து புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளனர். கிஷோர் ஜெனா 84.77 மீ., டி.பி.மானு 84.14 மீ. தூரத்துக்கு எறிந்து முறையே 5வது, 6வது இடங்களை பிடித்தனர். இவர்களில் கிஷோரின் ஹங்கேரி விசா கடைசி நேரத்தில் ரத்தான நிலையில், நீரஜ் சோப்ரா வெளியுறவு அமைச்சருக்கு விடுத்த வேண்டுகோளை அடுத்து கிஷோருக்கு விசா உடனடியாக வழங்கப்பட்டு, உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
* எட்டாத தூரத்தில்: செக் குடியரசு வீரர் ஜான் ஜெஸ்லனி உலக தடகள சாம்பியன்ஷிப், ஒலிம்பிக் போட்டிகளில் தலா 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். அவர் அதிகபட்சமாக 98.48 மீ. தொலைவுக்கு ஈட்டி எறிந்து படைத்த உலக சாதனை (1996) இன்று வரை முறியடிக்கப்படவில்லை.

ஒலிம்பிக்ஸ் 2020, டைமண்ட் லீக் 2022, உலக தடகள சாம்பியன்ஷிப் 2023 என வரிசயாக 3 பெரிய தடகள தொடர்களில் தங்கப் பதக்கம் வென்று ஈடு இணையற்ற சாதனையாளராக முத்திரை பதித்துள்ள நீரஜ் சோப்ராவை இந்திய ரசிகர்கள், ‘எல்லா காலத்திலும் சிறந்த வீரர்’ (GOAT) என்று கொண்டாடி வருகின்றனர். இது குறித்து நீரஜ் கூறியதாவது: இதை நான் ஒரு போதும் ஏற்க மாட்டேன். எல்லா காலத்திலும் சிறந்த தடகள வீரராக இருப்பது சாதரணமானதல்ல. அது பெரிய விஷயம். இதுவரை நாம் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வெல்லவில்லை என்பதற்காக அப்படி கூறுகிறார்கள். அதை வென்றது உண்மைதான். ஆனால், நான் செய்ய இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன. அவற்றில்தான் கவனம் செலுத்துவேன்.

எல்லா காலத்திலும் சிறந்த தடகள வீரர் என செக் குடியரசின் ஈட்டி எறியும் வீரர் ஜான் ஜெலெஸ்னியைதான் ( (57 வயது) சொல்வேன். அதுமட்டுமல்ல எனது சக வீரர்கள் மானு, கிஷோர் ஆகியோரும் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள். நாம் போக வேண்டிய தொலைவு இன்னும் இருக்கிறது. இங்குள்ள மோண்டோ களங்களை பற்றி இந்திய தடகள கூட்டமைப்பின் தலைவர் அடிலிடம் பேசினேன். இங்குள்ள களம் போன்று இந்தியாவிலும் அமைக்க வேண்டும். அதன் மூலம் நமது திறனை மேலும் வளர்த்துக் கொள்ள முடியும். இவ்வாறு நீரஜ் கூறியுள்ளார். கடந்த ஆண்டு நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீரஜ் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.

The post உலக தடகள சாம்பியன்ஷிப்: ஈட்டி எறிதலில் தங்கம்: நீரஜ் வரலாற்று சாதனை appeared first on Dinakaran.

Tags : World Athletics Championships ,Neeraj ,Budapest ,India ,Neeraj Chopra ,javelin ,Dinakaran ,
× RELATED ஈட்டி எறிதலில் தங்கம், வெள்ளி