×

ஜி 20 மாநாட்டிற்கு வரமுடியவில்லை பிரதமர் மோடியிடம் பேசினார் ரஷ்ய அதிபர் புடின்: வெளியுறவுத்துறை அமைச்சரை அனுப்பி வைப்பதாக வாக்குறுதி

புதுடெல்லி: ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ள டெல்லி வரமுடியாதது குறித்து பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் புடின் நேற்று தொலைபேசியில் பேசினார். ஜி 20 அமைப்பின் தலைவராக இந்தியா உள்ளது. இந்த அமைப்பின் உச்சி மாநாடு செப்.9, 10ம் தேதிகளில் டெல்லியில் நடக்கிறது. இதில் ஜி 20 அமைப்பில் உள்ள அனைத்து நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர். ரஷ்ய அதிபர் புடின் மீது சர்வதேச போர்குற்றம் அடிப்படையில் கைது உத்தரவு இருப்பதால் அவர் பிரிக்ஸ் மாநாட்டிலும் கலந்து கொள்ளவில்லை. அதே போல் டெல்லியில் நடைபெற உள்ள ஜி 20 மாநாட்டிலும் கலந்து கொள்ள மாட்டார் என்று ரஷ்ய அதிபர் மாளிகை அறிவித்து இருந்தது. இதை தொடர்ந்து நேற்று பிரதமர் மோடியை ரஷ்ய அதிபர் புடின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ள முடியாத நிலைமை குறித்து விளக்கினார். மேலும் ரஷ்யாவின் பிரதிநிதியாக வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்வார் என்று அதிபர் புடின் அப்போது தெரிவித்தார். அதற்கு அதிபர் புடின் கருத்தை ஏற்றுக்கொள்வதாகவும், ஜி 20 மாநாட்டில் இந்தியாவின் தலைமையை ஏற்று, அனைத்து வகையிலும் ஆதரவையும், ஒத்துழைப்பையும் அளித்தமைக்கு புடினுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். அதோடு இரு தலைவர்களும் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதித்தனர். ஜோகன்னஸ்பர்க்கில் சமீபத்தில் முடிவடைந்த பிரிக்ஸ் உச்சி மாநாடு உட்பட உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

The post ஜி 20 மாநாட்டிற்கு வரமுடியவில்லை பிரதமர் மோடியிடம் பேசினார் ரஷ்ய அதிபர் புடின்: வெளியுறவுத்துறை அமைச்சரை அனுப்பி வைப்பதாக வாக்குறுதி appeared first on Dinakaran.

Tags : G20 ,Modi ,Chancellor ,Putin ,New Delhi ,President ,Delhi ,G20 conference ,Dinakaran ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...