×

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் வழங்கினார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.இதில், நிலம் சம்பந்தமாக 142 மனுக்களும் சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 45 மனுக்களும் வேலை வாய்ப்பு வேண்டி 40 மனுக்களும் பசுமை வீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 75 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சார்பாக 107 மனுக்களும் என மொத்தம் 409 மனுக்கள் பெறப்பட்டன.

இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக 5 பயனாளிகளுக்கு தலா ரூ.6,680 வீதம் ரூ.33,400 மதிப்பீட்டிலான இலவச தையல் இயந்திரங்களை வழங்கினார்.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி, மடிக்கணினி வேண்டி மனு வழங்கிய பார்வையற்ற மாற்றுத்திறனாளியான சட்டக் கல்லூரி மாணவியின் மனுவிற்கு உடனடி தீர்வு காணும் வகையில் ஊரக வளர்ச்சி துறை சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ரூ.40,000 மதிப்பீட்டிலான மடிக்கணினியை அம்மாணவிக்கு இலவசமாக வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் மதுசூதனன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஹஷ்ரத் பேகம், ஊரக வளர்ச்சித்துறை உதவி திட்ட அலுவலர் சீதாலட்சுமி, முட நீக்கு வல்லுநர் பிரீத்தா மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : People's Grievance Day ,Tiruvallur ,Thiruvallur District ,Albi John ,Day ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த...