×

வடிவேலு பட பாணியில் கிராம மக்கள் கலாட்டா ஆக்கிரமிப்புகளை காலி செய்ய சொன்னா ‘ஏரியை காணோம்னு’ புகார் சொல்றாங்க… திருவண்ணாமலை அருகே போலீசார் அதிர்ச்சி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே குப்பம் ஊராட்சிக்குட்பட்ட கும்பல் கொள்ளைமேடு கிராமத்தில் சுமார் 200 குடும்பத்தினர் 10 தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்களுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு வீட்டுமனை பட்டா வழங்கியுள்ளது. தற்போது இந்த கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் ஏரி மற்றும் ஏரிக்கரை உள்ளதாகவும், நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ளதால் குடியிருப்புகளை அகற்ற போவதாகவும் பொதுமக்களிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று கண்ணமங்கலம் காவல்நிலையத்தில் கிராம பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு ‘நாங்கள் வாழும் கிராமத்தில் நீர்ப்பிடிப்பு ஏரி உள்ளதால், இந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியை அகற்ற போவதாக வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால், எங்கள் கிராமத்தில் ஏரி மற்றும் ஏரிக்கரை காணாமல் போய்விட்டது. இதுகுறித்து விசாரித்து ஏரியை கண்டுபிடித்து தர வேண்டும்’ என புகார் தெரிவித்தனர்.
போலீசார் இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். நடிகர் வடிவேலு படத்தில் கிணற்றை காணோம் என்று போலீசில் புகார் தெரிவிப்பது போல், கிராமத்தில் இருந்த ஏரி மற்றும் ஏரிக்கரையை காணோம் என பொதுமக்கள் புகார் அளித்தது போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

The post வடிவேலு பட பாணியில் கிராம மக்கள் கலாட்டா ஆக்கிரமிப்புகளை காலி செய்ய சொன்னா ‘ஏரியை காணோம்னு’ புகார் சொல்றாங்க… திருவண்ணாமலை அருகே போலீசார் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Thiruvannamalai ,Kumbam Kollaimedu ,Kuppam Panchayat ,Kannamangalam, Tiruvannamalai district ,
× RELATED காதலிப்பதாக ஏமாற்றி கடத்தி சென்று...