×

தமிழ்நாட்டில் 2022-2023ம் ஆண்டில் தனிநபர் வருமானம் ரூ.1,66,727ஆக உயர்வு: பொருளாதாரத்தில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு; மாநிலத்தில் விலைவாசி குறைவு; நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் ரூ.1,66,727 ஆக உயர்ந்திருக்கிறது என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். சென்னை, சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில திட்டக்குழு அலுவலகத்தில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழ்நாட்டின் பொருளாதாரம் கடந்த 2 ஆண்டுகளில் எப்படி வளர்ந்துள்ளது என்பது குறித்து புள்ளி விவர அறிக்கையை தமிழ்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு குறித்த கணிப்பை பொருளியல், புள்ளியியல் துறை தயாரித்துள்ளது. 2021-2022ம் ஆண்டில் நிலைத்த விலையில் ரூ.13 லட்சத்து 43 ஆயிரத்து 877 கோடியாகவும், அதேநிலையில் நடப்பு விலையில் ரூ.14 லட்சத்து 53 ஆயிரத்து 321 கோடியும் இருந்தது.

அடுத்த நிதியாண்டில் நிலைத்த விலையில் இருக்கக்கூடிய உற்பத்தி மதிப்பானது ரூ.20 லட்சத்து 71 ஆயிரத்து 286 கோடியாகவும், இது நடப்பு விலையில் ரூ.23 லட்சத்து 64 ஆயிரத்து 514 கோடியாக உயர்ந்திருக்கிறது. ஆக, தமிழ்நாட்டின் உற்பத்தியின் மதிப்பானது இன்றைய சூழ்நிலையில் ரூ.23,64,514 கோடியாக வளர்ச்சி கண்டிருக்கிறது. ஒன்றிய அளவில் ஒட்டுமொத்த ஜிடிபி 2020-21ம் ஆண்டு கணக்கை எடுத்துக்கொண்டால் 8.8 சதவீதமாக இருக்கிறது. அதேபோன்று 2022-23ல் நிலைத்த விலை 9.1 சதவீதமாகவும், நடப்பு விலையில் 8.7 சதவீதமாகவும் அதாவது நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 8.7 சதவீதமாக இந்த ஆண்டு இருக்கிறது.

ஆக, இந்த நடப்பு விலையை கணக்கிட்டு பார்த்தால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் இந்திய அளவில் 2வது பெரிய பொருளாதார மாநிலமாகவும், நிலைத்த விலையை பொறுத்தமட்டில் 3வது பொருளாதார மாநிலமாக இருக்கிறது. ஒட்டுமொத்த மாநில பொருளாதாரம் 2021-22ம் ஆண்டு நிலைத்த விலையில் 7.92 சதவீதம் அளவிலும், 2022-23ம் ஆண்டில் 8.91 சதவீதம் என்ற அளவிலும் வளர்ச்சி கண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் விலைவாசி அளவை எடுத்துக்கொண்டால் இந்தியாவில் தமிழகத்தில் குறைவாக இருக்கிறது. 2021-22ல் 7.92 சதவீதமாகவும், 2022-23ம் ஆண்டில் 5.9 சதவீதமாகவும் காணப்பட்டது.

ஒன்றிய அரசின் கணக்கை எடுத்துக்கொண்டால் 2021-22ல் 9.31 சதவீதமாகவும், 2022-23ல் 8.82 சதவீதம் ஆகவும் இருக்கிறது. தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் 2021-22ம் ஆண்டில் ரூ.1,54,557ஆக இருந்தது. 2022-23ல் ரூ.1,66,727ஆக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்த நாட்டின் தனிநபர் வருமானம் 2021-2022ம் ஆண்டில் 92,583 ரூபாயாக இருந்தது. 2022-2023ல் ரூ.98,374ஆக இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக சரிவில் இருந்து மீண்டு, நமது பொருளாதாரம் 8 சதவீதமாக உயர்ந்து வருகிறது. இதற்கு கடந்த 2 வருடங்களில் நமது முதல்வர் மு.க.ஸ்டாலினின் சீரான தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்கள், கொள்கைகள், பொருளாதார நோக்கங்கள், திட்டக்குழு நடவடிக்கைகள், அவர்களின் ஆலோசனைகள், இந்த 2 ஆண்டுகளில் தொழில் வளர்ச்சியில் நாம் பெற்றிருக்கும் முன்னேற்றம், மின்னணு ஏற்றுமதியில் முன்னணியில் இருப்பது, ரூ.2.5 லட்சம் கோடி அளவில் தொழில் முதலீடு வந்திருப்பதுதான் இவற்றுக்கெல்லாம் அடிப்படையான காரணம் ஆகும்.

உற்பத்தி துறையின் பங்களிப்பு 36.9 சதவீதத்தில் இருந்து 37.4 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது. நாட்டின் பிற பகுதிகளைவிட தமிழ்நாட்டில் விலைவாசி குறைவாக உள்ளது. கொரோனா காலத்தில் இந்தியாவில் வளர்ச்சி விகிதம் மைனசில் இருந்தபோதும் தமிழ்நாட்டில் வளர்ச்சி அதிகரித்து இருந்தது என்றார். பேட்டியின்போது மாநில திட்டக்குழு துணை தலைவர் பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் உடனிருந்தார். தமிழ்நாட்டின் பொருளாதாரம் இந்திய அளவில் 2வது பெரிய பொருளாதார மாநிலமாகவும், நிலைத்த விலையை பொறுத்தமட்டில் 3வது பொருளாதார மாநிலமாக இருக்கிறது.

The post தமிழ்நாட்டில் 2022-2023ம் ஆண்டில் தனிநபர் வருமானம் ரூ.1,66,727ஆக உயர்வு: பொருளாதாரத்தில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு; மாநிலத்தில் விலைவாசி குறைவு; நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Finance Minister ,South ,Chennai ,Thangam Thennarasu ,Chepakkam Ezhilakam ,Finance Minister Gold ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...