×

கல்லூரிகளில் சாதி பிரிவினையை கடைப்பிடித்ததாக 3 பேராசிரியர்கள் அதிரடி டிரான்ஸ்பர்: கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சாதி பிரிவினையை கடைப்பிடித்த பேராசிரியர்கள் மூன்று பேர் அதிரடியாக வேறு கல்லூரிகளுக்கு பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களிடையே சாதி பாகுபாடு காட்டி கல்லூரிகளில் சாதி மோதல்களை உருவாக்கும் வகையில் செயல்பட்ட வியாசர்பாடி கல்லூரியில் பணியாற்றிய ரவி மயிசின், சிவகங்கையில் பணியாற்றிய கிருஷ்ணன், கும்பகோணத்தில் பணியாற்றிய சரவணபெருமாள் ஆகிய பேராசிரியர்கள் மூன்று பேரை நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு பணியிட மாற்றம் செய்து கல்லூரி கல்வி இயக்ககம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் பேராசிரியர்கள் வேறு ஊர்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் கல்லூரி கல்வி இயக்ககம் எச்சரித்துள்ளது.

இது குறித்து கல்லூரி கல்வி இயக்குநர் கீதா கூறியபோது: ஆசிரியர் என்பவர் சிறந்த வழிகாட்டியாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட பேராசிரியர்களே தவறு செய்யும்போது, அவர்களிடம் படிக்கும் மாணவர்கள் எப்படி, சிறந்த ஒரு மனிதனாக மாறுவான். மாணவர்களுக்கு பாடம் எடுப்பது, வகுப்பு தேர்வுகள் நடத்துவது, அடுத்த நாள் பாடத்துக்கு தங்களை தயார் செய்வது என அந்த வேலைகளை பார்க்கவே கல்லூரிகளில் பேராசிரியர்களுக்கு நேரம் இருக்காது. அப்படி இருக்கும் பட்சத்தில் இது போன்று ஒரு சமூகம் சார்ந்த விசயங்களை மாணவர்கள் மத்தியில் பேசுவதற்கும், அவர்களை தவறான பாதையில் அழைத்து செல்வதற்கும் எப்படி அவர்களுக்கு நேரம் இருக்கிறது. அனைத்து மாணவர்களும் நம் பிள்ளைகள் தான் என்ற எண்ணம் பேராசிரியர்களுக்கு வர வேண்டும். இது போன்ற தவறுகள் சமீப காலங்களில் நடந்தது இல்லை. இனிமேலும் இது போன்று நடந்தால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post கல்லூரிகளில் சாதி பிரிவினையை கடைப்பிடித்ததாக 3 பேராசிரியர்கள் அதிரடி டிரான்ஸ்பர்: கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Directorate of College Education ,Chennai ,
× RELATED அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள...