×

தமிழ்நாட்டில் 38 மாவட்டத்திலும் சுகாதார நடைபயிற்சி சாலை: கன்னியாகுமரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்

கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் சுகாதார நடைபயிற்சி சாலை அமைக்கப்படும் என்று கன்னியாகுமரியில் இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறினார். கன்னியாகுமரியில் இன்று காலை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில், ‘நடப்போம்; நலம் பெறுவோம்’ என்ற தலைப்பில் நடைபயிற்சி நடந்தது. கலெக்டர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் சன்செட் பாயின்ட் பகுதியில் இருந்து நால்வழி சாலையில் நடந்தனர்.

காலை 5.30க்கு தொடங்கிய நடைபயிற்சி சுமார் 8 கி.மீ தூரம் வரை சென்று 6.55க்கு நிறைவு பெற்றது. இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பரிமணியன் நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழ்நாட்டில் விரைவில் ‘நடப்போம்; நலம் பெறுவோம்’ என்ற தலைப்பில் சுகாதார நடைபயிற்சி திட்டம் தொடங்கப்பட உள்ளது. ஜப்பான் டோக்கியோவில் 8 கிலோ தூரத்துக்கு, சுகாதார நடைபயிற்சி மேற்கொள்ள சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் 38 மாவட்டங்களிலும், இதேபோல சுகாதார நடைபயிற்சி மேற்கொள்ளும் சாலைகளை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. தற்போது 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சுகாதார நடைபயிற்சி மேற்கொள்ளும் சாலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இன்று கன்னியாகுமரியில் ‘சுகாதார நடைபயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

8 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த சுகாதார நடைபயிற்சி மேற்கொள்ளும் சாலையின் இருபுறங்களிலும் மரங்களை நடுதல், 2 கி.மீ இடைவெளியில் இருக்கைகள் அமைத்தல், நடப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலகைகளை ஆங்காங்கே வைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இதன்மூலம் எல்லோரும் இந்த பாதையில் நடக்க வேண்டும் என்பது பொருளல்ல. இதை பார்க்கும் மக்களுக்கு நடக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு, அதை அவர்கள் செயல்படுத்த வேண்டும்.

இந்த சுகாதார நடைபயிற்சி சாலையில், மாதந்தோறும் சுகாதார முகாம் நடத்தப்படும். இதில் நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் கண்டறியப்படுவதோடு, அன்று இந்த பாதையில் நடைபயிற்சி செல்வோருக்கு குடிநீர், கடலை மிட்டாய், வாழைப்பழம் உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். இந்த நடைபயிற்சி திட்டத்தை அடுத்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் தொடங்கி வைப்பார்.

அதைத்தொடர்ந்து 38 மாவட்டங்களிலும் திட்டம் செயல்படுத்தப்படும். கொரோனா காலத்தில் பணியாற்றிய டாக்டர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும், அரசு பணியிட நியமனங்களின்போது, 5 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும். வெகுவிரைவில் 1,021 டாக்டர்கள், 983 மருந்தாளுநர்கள், 1,066 சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மேலும், காலியாக உள்ள 1,000 பணியிடங்கள் நிரப்பப்படும்’ என்றார்.

The post தமிழ்நாட்டில் 38 மாவட்டத்திலும் சுகாதார நடைபயிற்சி சாலை: கன்னியாகுமரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல் appeared first on Dinakaran.

Tags : 38 District ,Tamil Nadu ,Minister ,Kanyakumarii ,Subramaniam ,Kanyakumari ,Ma Kanyakumari ,Subhiramaniam ,Health Walking Road ,Ma. Subramaniam ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...