×

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரிடம் சந்திரயான்-3 திட்ட விஞ்ஞானிகள் 2 பேர் ஆசி

மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரை, நிலவில் தரையிறங்கிய சந்திரயான்-3 விண்கல திட்டத்தின் 2 விஞ்ஞானிகள் நேரில் சந்தித்து ஆசிபெற்றனர். உலக வரலாற்றிலேயே முதன்முறையாக நிலவின் தென்துருவத்தில் கடந்த 23ம் தேதி இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கி, அதன் ரோவர் கலம் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் இந்திய மக்கள் உள்பட உலக தலைவர்களே வியந்து பாராட்டி வருகின்றனர். இத்தகைய சிறப்புமிக்க சந்திரயான்-3 விண்கலத் திட்டத்தில், ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்களான தாமோதரன், குணசேகரன், ரகுபதி, சத்தியமூர்த்தி, ஜெயக்குமார், குமார், சுப்பிரமணி, சுதாகர் ஆகியோர் இஸ்ரோவின் தலைமை அலுவலகத்தில் பங்கேற்று பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், நிலவில் தரையிறங்கி சந்திரயான்-3 விண்கலத் திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இத்திட்டத்தில் பணியாற்றி வரும் விஞ்ஞானிகளின் குழு இயக்குநர் ரகுபதி, திருவனந்தபுரத்தில் தும்பா விண்வெளி ஆய்வு மையத்தின் ரேடியோகிராபி மற்றும் ஆய்வு மையத் தலைவர் குணசேகரன் ஆகிய இருவரும் நேற்று மேல்மருவத்தூருக்கு வந்து, ஆதிபராசக்தி சித்தர் பீடத்துக்கு வந்து, ஆதிபராசக்தி அம்மனை வணங்கினர். பின்னர், ஆன்மிக குரு பங்காரு அடிகளாரை நேரில் சந்தித்து ஆசிபெற்றனர். இதைத் தொடர்ந்து சந்திரயான்-3 விண்கல திட்ட விஞ்ஞானிகள் இருவரும் தியானத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி தாளாளர் செந்தில்குமார் ஆகியோரை சந்தித்து, அக்கல்லூரியில் படித்த மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து, ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரிக்கு 2 விஞ்ஞானிகளும் சென்று, தாங்கள் படித்த வகுப்பறைகளை பார்வையிட்டு, தங்களது சந்திரயான்-3 விண்கலத் திட்ட அனுபவங்கள் குறித்து கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகளுடன் பகிர்ந்து கொண்டனர்.

The post மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரிடம் சந்திரயான்-3 திட்ட விஞ்ஞானிகள் 2 பேர் ஆசி appeared first on Dinakaran.

Tags : MellMaruvathur ,Fattar ,Moon ,Atiparashathi Siddar Faculty ,Mayalmaruvathur ,
× RELATED தனுசு