*நடனமாடி உற்சாகப்படுத்திய மேயர்
திருப்பூர் : திருப்பூரில் நேற்று நடந்த ஹேப்பி சண்டே நிகழ்ச்சியில் பொதுமக்களை உற்சாகப்படுத்த மேயர் தினேஷ்குமார் நடனமாடினார். திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட்டில் மாநகர பகுதி மக்களை மகிழ்விக்கும் வகையில் ஹேப்பி சண்டே மாதந்தோறும் மாநகர பகுதிகளில் நடத்தப்படும் மேயர் தினேஷ்குமார் என அறிவித்திருந்தார். இதன் ஒரு பகுதியாக கடந்த 2 மாதமாக ஹேப்பி சண்டே நிகழ்ச்சி திருப்பூரில் நடைபெற்றது. இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் நிகழ்ச்சி பங்கேற்று வருகிறார்கள்.
இந்நிலையில் நடப்பு மாதத்திற்கான ஹேப்பி சண்டே நிகழ்ச்சி நேற்று திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் உள்ள கேபிஎன் காலனியில் நடைபெற்றது. மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கி, நிகழ்ச்சிகளை தொடங்கி ஹேப்பி சண்டே லோகோவை வெளியிட்டார். மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதன் பின்னர் டி.ஜே. பாடல்களுக்கு மேயர் தினேஷ்குமார், கமிஷனர் பவன்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம், மண்டல தலைவர்கள் உமா மகேஷ்வரி, கோவிந்தராஜ், கோவிந்தசாமி மற்றும் கவுன்சிலர்கள் பிஆர் செந்தில்குமார், செந்தூர் முத்து உள்ளிட்டவர்கள் நடனமாடி பொதுமக்களை உற்சாகப்படுத்தினர்.
இதற்கிடையே நிகழ்ச்சிய தொடங்கியதில் இருந்தே அந்த பகுதியில் ஆயிரக்கணக்கான இளம்பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் குவிந்தனர். அவர்கள் அங்கு ஒலிபரப்பப்பட்ட பாடல்களுக்கு உற்சாகமாக நடமாடினர். மேலும், பொதுமக்களை உற்சாக்கப்படுத்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை சேர்ந்த நட்சத்திரங்கள் பலர் வந்திருந்தனர். அவர்களது பாடல் பாட, பொதுமக்கள் நடனமாட என அந்த பகுதி முழுவதுமே அனைவரும் துள்ளிக்குதித்து நடனமாடினர்.
மேலும், பாரம்பரியமிக்க கலைகளான சிலம்பம், பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இதுபோல் குழந்தைகளுக்காக எரி பந்து, ரிங், பலூன் உடைத்தல், கம்பி கட்டுதல் என்பது உள்பட பல்வேறு விளையாட்டுகளையும் பலர் விளையாடி மகிழ்ந்தனர். ஒட்டுமொத்தமாக ஹேப்பி சண்டே நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று, மகிழ்ந்தனர்.
இது குறித்து மேயர் தினேஷ்குமார் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி திருப்பூர் மாநகராட்சியில் தொடர்ந்து 3வது மாதமாக ஹேப்பி சண்டே நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி பல உள்ளூர் கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் அமைந்துள்ளது. பாரம்பரிய கலைகள், தமிழர்களின் கலாசாரத்தை பேணி பாதுகாக்கும் வகையிலும் இந்த நிகழ்ச்சி அமைந்து வருகிறது. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு மாதமும் இந்த நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
உள்ளூர் கலைஞர்களின் உதவியோடு, பாரம்பரிய கலைகளை மீட்டெத்து, அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்வது இந்த நிகழ்ச்சியின் நோக்கம் ஆகும். பெண்கள் திறமைகளை வெளிப்படுத்த, அவர்களுக்கான நிகழ்ச்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட விளையாட்டுக்களை ஒருங்கிணைத்துள்ளோம். வருகிற மாதத்தில் நடைபெறுகிற நிகழ்ச்சிகள் ஒட்டுமொத்த திருப்பூர் மக்களும் கொண்டாடும் வகையில் வெகுவிமரிசையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
The post திருப்பூரில் ஹேப்பி சண்டே கோலாகலம் appeared first on Dinakaran.