×

மனிதனை அழிக்கும் பிளாஸ்டிக்கை ஒழித்து இயற்கையை மீட்டெடுக்கும் ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டம்

* 13 லட்சம் இடங்களில் ரெய்டு
* ரூ.15.73 கோடி அபராதம் வசூல்

காலையில் எழுந்ததும் வேப்பம், ஆலங்குச்சிகளில் பல் துலக்கி, இரவு கோரைப்புற்களால் ஆன பாய்களில் தூங்குவது என ஆரோக்கியத்துடன் இயற்கையாக வாழ்ந்த காலம் மாறி, பல் துலக்க பிளாஸ்டிக் பிரஷ் பயன்படுத்துவதில் ஆரம்பித்து இரவு பிளாஸ்டிக் பாய்களில் தூங்கும் அளவுக்கு அனைத்தும் பிளாஸ்டிக் மயமாகிவிட்டது. பயனற்ற பிளாஸ்டிக்குகள் கால்நடைகளுக்கு எமனாக மாறியதுடன் மண்ணையும் மலடாக்கி வருகிறது. பயன்படுத்துவதற்கு பிளாஸ்டிக் எளிதாக இருந்தாலும், அதனால் ஏற்படும் விளைவுகளால் மனிதர்கள் எதிர்காலத்தில் வாழவே முடியாது என்ற ஆராய்ச்சியாளர்களின் எச்சரிக்கை அதிர்ச்சியடைய செய்கிறது.

இதுதொடர்பாக சிங்கப்பூர் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் ஆண்டுக்கு 80 லட்சம் டன் வீதம் பிளாஸ்டிக் கழிவுகள் உலகிலுள்ள பெருங்கடல்களில் கொட்டப்படுவதாக தெரிவித்துள்ளனர். இதுவரை 15 கோடி டன்னுக்கு மேலான பிளாஸ்டிக் கழிவுகள் உலகிலுள்ள பெருங்கடல்களில் கொட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் வரும் 2050ம் ஆண்டு அதாவது அடுத்த 27 ஆண்டுகளில் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலில் மீன்களை விட பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரிக்கும் எனவும், அந்த பிளாஸ்டிக் கழிவுகளை மீன்கள் சாப்பிடும். தொடர்ந்து கடல் மீன்களை நாம் சாப்பிடும்போது நமது உடலில் பிளாஸ்டிக் நுழைந்து புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என அடுத்தடுத்து அதிர்ச்சியளிக்கும் எச்சரிக்கைகளை ஆராய்ச்சியாளர்கள் விடுத்துள்ளனர்.

இத்தகைய பிளாஸ்டிக் மண்ணில் மக்காமல் பல நூறு ஆண்டுகளுக்கு இருந்து, மழைநீரை நிலம் உறிஞ்சுவதை தடுத்துவிடும். இதனால் நிலத்தடி நீர் பாதிப்படைகிறது. மேலும் மக்காத பிளாஸ்டிக்கை எரித்தாலும் காற்றின் மூலம் நமக்கு பாதிப்பு ஏற்படும். இவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டியது அவசியம். அடுத்த தலைமுறையினரை இயற்கையை அனுபவித்து வாழ வைக்கும் கடமையும் பொறுப்புணர்வும் அனைவருக்கும் இருக்கிறது. இதனால்தான் இந்தியாவில் மக்காத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்ந்து அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், அதை தடுக்க மாநில அரசு சார்பில் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மனிதனை அழிக்கும் பிளாஸ்டிக்கை அழித்து இயற்கையை மீட்டெடுக்கும் நோக்கத்தில் தொடங்கிய மீண்டும் மஞ்சப்பை திட்டம் பெரும்பாலான மக்களின் மனதில் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. பிளாஸ்டிக்கை தவிர்த்து மஞ்சப்பை பயன்படுத்துவதன் அவசியத்தை விளக்கி இதுவரை தமிழ்நாடு முழுவதும் 1 லட்சத்து 55 ஆயிரத்து 372 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது.அதோடு மறுசுழற்சி செய்ய முடியாத, தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்வதில் அதிகாரிகள் இரவு, பகலாக தீவிரம் காட்டி வருகின்றனர். மக்கள் புகார் தெரிவிக்கும் இடத்திலும் உடனடியாக ரெய்டு நடத்தி வருகின்றனர். அதன்படி மீண்டும் மஞ்சப்பை திட்டம் தொடங்கப்பட்டு இதுவரை தமிழ்நாட்டில் 13 லட்சத்து 5 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.

இதில் 2 ஆயிரத்து 185 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ரெய்டுகள் மூலம் ரூ.15 கோடியே 73 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கைகள் நீடித்தால் தமிழ்நாட்டில் நிச்சயம் பிளாஸ்டிக் இருக்காது. இதனால் பலரது மனதில் மீண்டும் மஞ்சப்பை திட்டம் இடம் பிடித்துள்ளது. அதேபோல் மக்களின் ஒத்துழைப்பால் மட்டுமே பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முழுவதுமாக முற்றுப்புள்ளி வைக்க முடியும். எனவே எதிர்கால சந்ததியினருக்கு இயற்கையையும் பழமையையும் மீட்டெடுத்து கொடுப்பதில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

* பிளாஸ்டிக் உருவான வரலாறு

முதன் முதலில் 1862ல் லண்டனை சேர்ந்த அலெக்சாண்டர் பார்க்ஸ் என்பவர் செல்லுலோஸ் என்ற பொருளில் இருந்து நெகிழி(பிளாஸ்டிக்) தயாரித்து லண்டன் கண்காட்சியில் வைத்துள்ளார். இதற்கு அவர் பார்க்ஸ்டைன் என பெயரிட்டார். இவரை தொடர்ந்து 1869ல் ஜான் ஹயாத் என்பவரது முயற்சியால் செல்லுலாய்டு என்ற நெகிழி உருவானது. 1907ல் லியோ பேக்லாண்டு என்பவர் மின் சுவிட்சுகள் செய்ய செயற்கை வேதிப்பொருள்கள் கொண்டு பேக்லைட் என்ற பொருளை உருவாக்கினார். முதல் உலகப்போரில் அமெரிக்க நிறுவனம் வெடிபொருள் நெகிழித்தொழிற்சாலையை தொடங்கி மேலும் பல ெநகிழிப்பொருட்களை உருவாக்கியது. 1933ல் பாசெட் மற்றும் கிப்ரான் ஆகியோர் உருவாக்கிய பாலிதீன்(பாலி எத்திலீன்) 2ம் உலகப்போரில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி இன்று வரை அதிகமாகப் பயன்படுத்தும் பொருளாகிவிட்டது.

* வெளிமாநிலங்களில் இருந்து கடத்தலை தடுக்க நடவடிக்கை

அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழ்நாட்டில் அதிரடி நடவடிக்கைகளால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு முழுவதுமாக தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வெளிமாநிலங்களில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள் கடத்தி வரப்படுவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து வேலூர் மாவட்டம் வழியாக தமிழகத்துக்கு பிளாஸ்டிக் பொருட்கள் கடத்தி வரப்படுகிறது. இதை தடுக்கவும் திடீர் ரெய்டுகள் நடத்தப்படுகிறது. மேலும் பிளாஸ்டிக் ெபாருட்கள் கடத்தப்படுவது தெரிந்தால், எந்த குடோனுக்கு கொண்டு செல்லப்படுகிறது என கண்காணித்து மொத்தமாக பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து பெரிய அளவில் பிளாஸ்டிக் கடத்தல் தடுக்கப்பட்டுள்ளது. இதை முழுமையாக தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது’ என்றனர்.

* 83 இடங்களில் தானியங்கி மஞ்சப்பை இயந்திரங்கள்

பொதுமக்களுக்கு மஞ்சப்பை எளிதில் கிடைக்கும் வகையில் உழவர் சந்தை, மார்க்கெட்டுகளில் தானியங்கி மஞ்சப்பை இயந்திரங்கள் வைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இயந்திரத்தில் ரூ.10 செலுத்தி மஞ்சப்பை பெறலாம். மாநிலம் முழுவதும் தற்போது வரை சென்னையில் 10 இடங்கள், செங்கல்பட்டு-1, அரியலூர்-1, கோவை-12, தர்மபுரி-3, திண்டுக்கல்-5, காஞ்சிபுரம்-3, கரூர்-1, கிருஷ்ணகிரி-2, மதுரை-5, மயிலாடுதுறை-1, நாகப்பட்டினம்-1, நாமக்கல்-1, நீலகிரி- 2, புதுக்கோட்டை-2, ராமநாதபுரம்-1, சேலம்-2, சிவகங்கை-5, தஞ்சாவூர்-3, தேனி-8, திருவள்ளூர்-5, திருவாரூர்-1, திருச்சிராப்பள்ளி-2, திருப்பூர்-2, திருவண்ணாமலை-1, வேலூர்-2, விருதுநகர்-1 என 83 இடங்களில் தானியங்கி மஞ்சப்பை இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தானியங்கி இயந்திரங்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அனைத்து மாவட்டங்களிலும் தானியங்கி மஞ்சப்பை இயந்திரங்களை வைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் பொதுமக்கள் எளிதில் துணிப்பைகளை வாங்க முடியும்.

The post மனிதனை அழிக்கும் பிளாஸ்டிக்கை ஒழித்து இயற்கையை மீட்டெடுக்கும் ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில்...