×

புழல் மத்திய சிறையில் துணை ஜெயிலரை தாக்கிய வெளிநாட்டு கைதி: அதிர்ச்சியில் சிறைத்துறை போலீசார்

சென்னை: புழல் மத்திய சிறையில், துணை ஜெயிலரை வெளிநாட்டு கைதி சரமாரியாக தாக்கினார். இச்சம்பவம் சிறை காவலர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புழல் மத்திய சிறையின் தண்டனை பிரிவில் சுமார் 900க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறை வளாகத்தில் கைதிகளுக்கு இடையே செல்போன் மற்றும் கஞ்சா நடமாட்டம் அதிகளவில் இருப்பதாக சிறைத்துறை அதிகாரிகளுக்கு அவ்வப்போது தகவல் கிடைக்கும். இதைத் தொடர்ந்து, சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அடிக்கடி அதிரடி சோதனை நடத்தி செல்போன், சார்ஜர், பேட்டரி மற்றும் கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்வது வழக்கம்.

இந்நிலையில், திடீர் சோதனையில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளிநாட்டு கைதியிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, அவர் சிறையில் வேறு அறைக்கு மாற்றப்பட்டார். இதை கண்டித்து மற்றொரு வெளிநாட்டு கைதி, கடந்த 2 நாட்களுக்கு முன் சிறைக் காவலரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்நிலையில், புழல் மத்திய சிறையின் தண்டனை பிரிவு பகுதியில் நேற்று முன்தினம் இரவு துணை ஜெயிலர் சாந்தகுமார் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது ஒரு அறைக்குள் இருந்த நைஜீரிய நாட்டை சேர்ந்த இசப்பா அகஸ்டின் கிறித்தி (41) என்ற வெளிநாட்டு கைதி, ‘‘எங்களை ஏன் இந்த அறைக்கு மாற்றினீர்கள்?’’ எனக் கேட்டு சாந்தகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமான இசப்பா அகஸ்டின் கிறித்தி, அங்கிருந்த சாப்பாடு தட்டு எடுத்து துணை ஜெயிலர் சாந்தகுமாரை சரமாரியாக தாக்கியுள்ளார். அதை துணை ஜெயிலர் சாந்தகுமார் கைகளால் தடுத்ததில் படுகாயம் ஏற்பட்டது. பின்னர் சிறைக் காவலர்கள் விரைந்து வந்து, வெளிநாட்டு கைதியிடம் இருந்து துணை ஜெயிலரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்புகாரின்பேரில், புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். சென்னை புழல் மத்திய சிறையில் காவலர்கள் மற்றும் கைதிகளுக்கும் இடையே அடிக்கடி தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து புழல் போலீசில் புகார் அளிக்கப்பட்டாலும், அவர்களின் விசாரணைக்கு முட்டுக்கட்டை போடப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் புழல் மத்திய சிறையில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

The post புழல் மத்திய சிறையில் துணை ஜெயிலரை தாக்கிய வெளிநாட்டு கைதி: அதிர்ச்சியில் சிறைத்துறை போலீசார் appeared first on Dinakaran.

Tags : Puzhal Central Jail ,Chennai ,Dinakaran ,
× RELATED ‘டால்பின்’ அன்புமணிக்கு விவசாயிகளின்...