×

சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து வரும் நாளில் கூடுதல் விவரம் கிடைக்கும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்

திருவனந்தபுரம்: சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து வரும் நாட்களில் நிலவு குறித்த கூடுதல் விவரங்கள் கிடைக்கும் என்று திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார். சந்திரயான் 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக கால் பதித்துள்ளது. இந்த வெற்றிக்கு பிறகு இஸ்ரோ தலைவர் சோம்நாத், திருவனந்தபுரம் வலியமலை திரவ இயக்கத் திட்ட மைய இயக்குனர் நாராயணன் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று இரவு பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தனர். அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன் பிறகு இஸ்ரோ தலைவர் சோம்நாத் நிருபர்களிடம் கூறியது: சந்திரயான் 3ன் வெற்றி சர்வதேச அளவில் இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்துள்ளது. இந்த மாபெரும் வெற்றி இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவரின் கூட்டு முயற்சியால் கிடைத்ததாகும். இது 100 சதவீத வெற்றியாகும். நம் நாடே எங்களுக்கு பெரும் ஆதரவு அளித்து வருகிறது.

வரும் நாட்களில் சந்திரயான் விண்கலத்தில் இருந்து மேலும் பல முக்கிய தகவல்கள் கிடைக்கும். நமது இந்த வெற்றிப் பயணம் மேலும் தொடரும். விரைவில் செவ்வாய், சுக்கிரன், நிலவுக்கும் விண்கலங்களை அனுப்புவோம். சந்திரயான் 3ன் வெற்றியின் மூலம் எங்களுக்கு பெரும் நம்பிக்கை கிடைத்து உள்ளது. எங்களது ஆராய்ச்சிகள் மேலும் தொடரும்.

சூரியனைக் குறித்து ஆராயும் ஆதித்யா எல்ஒன் விண்கலம் செப்டம்பர் முதல் வாரத்தில் ஏவப்படும். விரைவில் இஸ்ரோ மேலும் பல சாதனைகள் படைக்கும். எங்களது ஆராய்ச்சிகள் குறித்து ஒவ்வொரு மாதமும் புதிய புதிய தகவல்கள் வெளியே வரும். பிரக்யான் லேண்டரின் படம் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்தப் படத்தை வெளியிடுவோம். ஜப்பான் நாட்டுடன் இணைந்த லூபக்ஸ் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து வரும் நாளில் கூடுதல் விவரம் கிடைக்கும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல் appeared first on Dinakaran.

Tags : ISRO ,Thiruvananthapuram ,Moon ,Thiruvananthapuram Airport ,Somnath ,Dinakaran ,
× RELATED சென்னையில் புதிய உச்சம் தொட்ட தங்கம்...