×

மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில் குண்டும் குழியுமான சாலையால் சிரமத்திற்குள்ளாகும் வாகன ஓட்டிகள்: சீரமைக்க மமக வலியுறுத்தல்

நெல்லை: மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அம்பை – நெல்லை சாலை குண்டும் குழியுமாக காணப்படுவதால் பள்ளி, கல்லூரி வாகனங்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதனை சீரமைக்க வேண்டும் என மமக வலியுறுத்தி உள்ளது. நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் பகுதியில் நெல்லை – அம்பாசமுத்திரம் சாலையில் சந்தை பகுதியில் ரவுண்டானா அமைந்துள்ளது. மேலப்பாளையம் குறிச்சி, புதிய பஸ்நிலையம், சந்தை மற்றும் நாங்குநேரி, ரெட்டியார்பட்டியில் இருந்து வரும் வாகனங்களும் ரவுண்டானா பகுதியில் சங்கமிக்கின்றன. இப்பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெருக்கடி மிகுந்து காணப்படும்.

புதிய பஸ்நிலையத்தில் இருந்து பாபநாசம், விகேபுரம், அம்பாசமுத்திரம், பொட்டல்புதூர் வழியாக தென்காசி, செங்கோட்டை செல்லும் பஸ்கள், வேன்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் சந்தை ரவுண்டானா வழியாக இயக்கப்படுகின்றன. இந்நிலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக ரவுண்டானா பகுதியில் சாலை தோண்டப்பட்டது. குழாய்கள் பதிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்து விட்டது. இருந்த போதும் அதிகாரிகளின் பாராமுகத்தால் சாலையை சீரமைக்கவில்லை. இதனால் ஜல்லிகள் பெயர்ந்து சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்த சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களால் சாலையில் சிதறிகிடக்கும் ஜல்லிகற்கள் ரவுண்டானா பஸ்நிறுத்தத்தில் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகளை பதம்பார்கிறது.

சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் இரவு நேரங்களில் வாகனங்கள் தட்டுதடுமாறி செல்கின்றன. ரவுண்டானாவில் தெற்கு பகுதியிலும், வடக்கு பகுதிகளிலும் பள்ளிகள் அமைந்துள்ளன. பள்ளிகளுக்கு மாணவிகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்கள், சைக்கிளில் செல்லும் மாணவ, மாணவிகள் ரவுண்டானா பகுதியில் பயணிக்கும் போது சிரமத்தற்கு உள்ளாகின்றனர். எனவே சேதமான சாலையை விரைந்து சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மமக நெல்லை மாவட்ட துணைச்செயலாளர் காஜா, கலெக்டரிடம் அளித்த மனுவில், மேலப்பாளையம் மண்டலத்தில் சுமார் 2 லட்சம் பொதுமக்கள் வசிக்கின்றனர். முக்கிய பகுதியான சந்தை ரவுண்டானா தெற்கு பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக சாலையில் குழி தோண்டப்பட்டது. பணி முடிந்து ஓராண்டாகியும் சாலையை சீரமைக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

The post மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில் குண்டும் குழியுமான சாலையால் சிரமத்திற்குள்ளாகும் வாகன ஓட்டிகள்: சீரமைக்க மமக வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Goverland Market ,Mamaka ,Paddy ,Dinakaran ,
× RELATED ஸ்ரீபெரும்புதூரில் 5,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்