×

ஓவேலி அருகே வனத்துறை காவல் கோபுரம் அமைக்க எதிர்ப்பு; வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்: எம்எல்ஏ, தாசில்தார் பேச்சுவார்த்தை

கூடலூர்: ஓவேலி காந்திநகர் பகுதியில் வனத்துறை சார்பில் காவல் கண்காணிப்பு கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது ஓவேலி. இங்குள்ள காந்திநகரில்மாரியம்மன் கோயில் உள்ளது. இதன் அருகே வனத்துறை சார்பில் காவல் கண்காணிப்பு கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வனத்துறையினர் தேர்வு செய்த இடத்தில் கட்டிடம் கட்டுவதற்காக பூமி பூஜை செய்தனர். இதனால் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர்.

இதனையடுத்து கூடலூர் தாசில்தார் ராஜேஸ்வரி, கூடலூர் எம்எல்ஏ பொன் ஜெயசீலன், பந்தலூர் டிஎஸ்பி செந்தில்குமார் மற்றும் வனத்துறை உதவி வன பாதுகாவலர் கருப்பையா ஆகியோர் பொதுமக்களிடம் சமாதானம் பேசினர். ஆனால் பொதுமக்கள் சமாதானம் அடையவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் நியூ ஹோப் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் கிராம மக்களிடம் இப்பிரச்சனை தொடர்பாக கூடலூர் கோட்டாட்சியர் முன்னிலையில் அதிகாரிகள் அடங்கிய குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணவும், காவல் கோபுரம் அமைப்பதற்கு பொதுமக்களே ஒரு இடத்தை தேர்வு செய்து வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து கருப்பு கொடி போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

அரை நூற்றாண்டுக்கும் மேலாக நிலவி வரும் பிரிவு 17 நில பிரச்னையை தீர்வுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வனத்துறையினர் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் விவசாயிகளுக்கு சொந்தமான நிலத்தில் காவல் கோபுரம் அமைப்பதை ஏற்று கொள்ள முடியாது. காலம் காலமாக இப்பகுதியில் வசித்து வரும் மக்களின் வாழ்வுரிமைக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள் வசிக்கும் இடங்களை வன நிலமாக உட்படுத்தி இருந்தால் அதனை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் கோபுரம் அமைக்கப்பட தேர்வு செய்துள்ள இடம் சந்தன தேவன் என்பவருக்கு சொந்தமானதாகும். சம்பவ இடத்தில் அடுத்தடுத்து சட்டமன்ற உறுப்பினரும் பொதுமக்களுக்கு ஆதரவாக பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளார். பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வனத்துறை காவல் கோபுரத்தை பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து தொலைவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காந்திநகர் மக்கள், விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் வழிகாட்டுதலுடன் கோரிக்கைகளை விடுத்துள்ளோம். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளோம் உரிய தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டம் மேலும் தீவிரமடையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post ஓவேலி அருகே வனத்துறை காவல் கோபுரம் அமைக்க எதிர்ப்பு; வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்: எம்எல்ஏ, தாசில்தார் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : Oveli ,MLA ,Dasildar ,Cuddalore ,Oveli Gandhinagar ,
× RELATED பில்லி சூனியம், செய்வினை சிறப்பாக...